2013ம் வருட கணக்குகளின்படி சிறிய மாநிலமான கேரளாவுக்கு 8.5 லட்சம் வெளிநாட்டுச்
சுற்றுலாப் பயணிகளும்,
108 லட்சம் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் வருகை தருவதாகக் கருதப்படுகிறது. பொதுவாக சுற்றுலா என்பது மலைப்பிரதேசங்கள், கடற்கரைகள் போன்றவற்றை
மையமாகக் கொண்டே நடந்துவந்தன. ஆனால், சமீபகாலத்தில்
வனங்களுக்குக் குறிப்பாக வனவிலங்கு சரணாலயங்கள், தேசீய வனவிலங்குப் பூங்காக்கள், புலி சரணாலயங்கள் போன்ற
இடங்களுக்கு பயணிகள் கூடுதலாக சுற்றுலாச் செல்லும் ஒரு பழக்கம்
ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து
வரும் சுற்றுலாப் பயணிகளில் எட்டு பேர்களில் ஒருவர் வனங்களுக்குச் சுற்றுலா
செல்வதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
தென்னிந்தியாவில் உள்ள வனங்களில் பெரும்பாலானவையும் மேற்குத்தொடர்ச்சி
மலைத்தொடரில் அமைந்துள்ள வளம் மிக்கப் பிரதேசங்கள் ஆகும்.
இந்த வனங்களில் வாழ்ந்துவரும் ஆதிவாசி சமூகங்கள் கலாச்சார
பன்முகத்தன்மையையும், பாரம்பரியத்தையும்
எடுத்துக்காட்டும் மையங்களாகவும் வனங்கள் திகழ்கின்றன. எழில் கொஞ்சும் வனங்கள் எப்போதும் சுற்றுலாப்
பயணிகளுக்கு கவர்ந்திழுக்கும் சுற்றுலா இடங்கள் ஆகும். வனங்கள் உட்பட்ட நிலப்பகுதிகள் அடங்கிய
பகுதிகளில் சுற்றுலாவை சூழல் சுற்றுலா என்ற தனிப்பட்ட பிரிவில் அடக்கி
கையாளப்படுகிறது. இன்று இந்தியாவில்
நடைமுறையில் இருக்கும் சட்டத்தின்படி வனங்கள் பொது அறக்கட்டளை சட்டத்தின்(public trust) கீழ் வருகின்றன. இயற்கையின் நன்கொடையான வனங்கள் சமூகத்தின்
பொதுசொத்தாக நிலைநிறுத்தப்படவேண்டும் என்றும், இவற்றின் பலன்களை பொதுசமூகத்துக்கு சரிசமமாகக்
கிடைக்கும்படி செய்யவேண்டும் என்றும், இவற்றைப் பாதுகாக்கவும், வணிகநோக்கங்களுக்காக தனியாருக்கு இவற்றை
விட்டுக்கொடுக்கக்கூடாது என்றும் உறுதிசெய்யவேண்டும். இதற்கான பொறுப்பு நிர்வாகத்தின் ஒரு கடமையாக
அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் பிரதேச சமூகம், இயற்கைப் பாதுகாப்பு, நிறைவான பயணம் என்பவை ஒன்றுசேரும்போதுதான் சூழல் சுற்றுலா
வெற்றி பெறுகிறது. இத்தகைய சூழ்நிலையில்
உலகம் முழுவதும் வனங்களில் சூழல் சுற்றுலா மேற்கொள்வது குறித்த சில அடிப்படையான
கொள்கைகள் வகுக்கப்பட்டுப் பின்பற்றப்பட்டுவருகின்றன. இயற்பியல்ரீதியான, சமூகரீதியான
பழக்கவழக்கரீதியான, மனரீதியான கோட்பாடுகளை
வகுத்து இயற்கை, கலாச்சாரம் ஆகியவற்றைப்
பாதுகாக்கும்விதத்தில் இந்த விஷயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வருகை புரிபவர்களுக்கு மறக்கமுடியாத இனிமையான
அனுபவங்களை ஏற்படுத்த உதவுவது இதில் முக்கியமான ஒரு அம்சம் ஆகும். இயற்கைப் பாதுகப்பு நடவடிக்கைகளில்
பொருளாதாரரீதியான முன்னேற்றம் ஏற்படுத்துவது, பிரதேச துறைகளுக்கும், அதன் பொருளாதாரரீதியான வளர்ச்சிக்கும் முதல் இடம் தந்து
மேம்படுத்துவது, வருகை புரிபவர்களின்
நாட்டின் சிறப்புகளை மேம்படுத்தும்வகையில் அவர்களுடைய நாட்டைப் பற்றிய நல்ல
மதிப்பீடுகளை ஊடகங்களில் வழங்கி அதில் அவர்கள் பெருமைகொள்ளச்செய்வது, சூழலுக்கு மிகக்
குறைந்தபட்ச பாதிப்பை மட்டும் ஏற்படுத்தும்வகையில் திட்டங்களை வகுப்பது, அத்தகைய வசதிகளை மட்டுமே
ஏற்படுத்துவது பிரந்திய சமூகங்களின் உரிமைகளையும், அடிப்படையான நம்பிக்கைகளையும்
அங்கீகரிக்கும்விதத்தில் திட்டங்கள் வகுக்கப்படுவது போன்ற அம்சங்கள் இந்தக் கொள்கைகளில்
சில ஆகும்.
2012ல் இதற்கேற்பவே உச்ச
நீதிமன்றம் கொள்கைகளை வகுத்துக் கொடுத்துள்ளது..
புலி சரணாலயங்களில் மையக்கருப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் செல்வது
தடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் 2012ல் ஜூலை மாதம்
வெளிவந்தது. புலி சரணாலயங்களின் கருப்பகுதி
(core area), வெளிப்புறப்பகுதி (buffer zone) ஆகியவை எவை எவை என்று
தெளிவாகக் குறிக்காமல் இருந்த தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், பீகார், ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு 10,000 ரூபாய் அபராதமும்
உச்சநீதிமன்றம் விதித்தது. இந்த
கட்டளையின் அடிப்படையில் தேசீயப் புலி பாதுகாப்பு ஆணையம் (National Tiger Conservation
Authority) 2012 அக்டோபர் மாதத்தில் வனவிலங்கு சரணாலயங்கள், புலி சரணாலயங்கள்
ஆகியவற்றில் எவ்வாறு சுற்றுலாவைக் கையாளவேண்டும் என்பது தொடர்பாக விரிவான
வழிகாட்டுநெறிகளை வெளியிட்டது. இவற்றில்
முன்பு குறிப்பிடப்பட்ட கோட்பாடுகள் தவிர வனங்களின் பன்முகத்தன்மையின் பெருமை, அவற்றின் மதிப்பீடு, அவை ஆற்றிவரும் சூழல்
காக்கும்விதத்தில் அமைந்த சேவைகள் ஆகியவை பயணிகளுக்கு அனுபவித்து
அறிந்துகொள்ளும்வகையில் செய்யவேண்டும் என்பதும் முக்கியமான ஒன்றாகும். இந்தியாவின் வனப்பகுதிகள், புலி சரணாலயங்கள்
ஆகியவற்றின் பாரம்பரியமான மதிப்புகளை வெளிப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்தவும்
இந்த சிபாரிசுகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.
நம் வனங்களில் வசித்துவரும் ஆதிவாசிகள் உட்பட உள்ள மக்களின்
பங்காளித்துவத்தோடு கூடிய வன பராமரிப்புத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்கள் செல்லப்போகின்ற
வனங்களின் சூழல் முக்கியத்துவத்தைப் பற்றிய விவரங்கள் கொண்ட வகுப்புகள்
எடுக்கப்படவேண்டும். பயணிகளைக்
கூட்டிச்செல்ல பயிற்சி பெற்ற வழிகாட்டிகள் நியமிக்கப்படவேண்டும். இந்த வழிகாட்டிகள் அந்தந்த வனங்களில் வாழும்
ஆதிவாசி சமூகங்களில் இருந்தே நியமிக்கப்படவேண்டும். சுற்றுலாப் பயணிகள் செல்ல
அனுமதிக்கப்பட்டுள்ள பாதைத் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும். பயணிகளுக்கு குறைந்தபட்ச வசதிகளை
ஏற்படுத்துவதற்காக மட்டுமே சூழலில் சிறிய அளவில் பாதிக்கும் மாற்றங்களை ஏற்படுத்தி
செயல்படுத்தவேண்டும். வாகனப் போக்குவரத்தை
வனப்பகுதியில் கட்டுப்படுத்தவேண்டும்.
இந்த வாகன போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை அந்தந்த வனங்களில் வசிக்கின்ற
ஆதிவாசி சமூகங்களே ஏற்படுத்தவேண்டும்.
இதற்கு எடுத்துகாட்டாக, கேரளாவில் இரவிகுளம் தேசீய பூங்கா, பரம்பிக்குளம் புலி
சரணாலயம், அமைதிப் பள்ளத்தாக்கு
தேசீய பூங்கா ஆகியவற்றில் சூழல் வளர்ச்சி குழுக்கள் (eco development committees EDCs) அந்தந்த வனப்பகுதிகளில்
வாகனப் போக்குவரத்தை நடத்துகிறார்கள்.
வனப்பிரதேசங்களில் வசிப்பிடங்கள், ஏறுமாடங்கள், இருக்கின்ற பாரம்பரியமான கட்டிடங்கள் போன்றவற்றைத் தவிர
வேறு எதையும் புதிதாக கட்ட அனுமதிக்கக்கூடாது.
வருபவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தவேண்டும். வனவிலங்கு சரணாலயங்களில் பயணம் செய்யும்போது
விபத்துகள் ஏற்படுவதற்கு உரிய சாத்தியக்கூறுகளை முன்பே சிந்தித்து அதற்கான
முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். ஒரு பிரதேசத்தில் சுற்றுலா ஏற்படுத்தும் சூழல்
பாதிப்புகளை கூடியவரை குறைக்கும்விதத்தில் ஒரு நேரத்தில் எத்தனை பயணிகள்
அனுமதிக்கப்படலாம் என்று முன்கூட்டியே தீர்மானிக்கவேண்டும். சில இடங்களில் உள்ளே செல்லக்கூடிய வாகனங்களின்
எண்ணிக்கை ஒவ்வொருநாளும் கட்டுப்படுத்தப்படுகிறது.
கேரளாவில் கெவி போன்ற இடங்களில் நூறு பேர் ஒரு
நாளில் சுற்றுலா செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
அங்கு செல்பவர்களுக்கு உரிய தங்குமிடவசதிகளும் கட்டுக்குள்
வைக்கப்பட்டிருக்கின்றன. வனப்பகுதிகளை
பார்க்கவரும் பயணிகள் கொண்டுவரும் விதவிதமான குப்பைகள் வனங்களில் போட்டுவிட்டுப்
போகக்கூடாது. பிளாஸட்டிக் கழிவுகள் இதற்கு
ஒரு உதாரணம் ஆகும். காட்டுத் தீ ஏற்படும்
சில சீசன்களில், இரவிகுளம் தேசீயப்
பூங்காவில் வரையாடுகளின் இனப்பெருக்கக்காலம் போல உள்ள சில குறிப்பிட்ட
காலகட்டங்களில் சுற்றுலா செல்வதற்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி
வைக்கப்படவேண்டும். இவ்வாறு இயற்கைக்கு
சாதகமானவிதத்தில் கோட்பாடுகளும், கொள்கைகளும் வகுக்கப்பட்டு வனங்களை சுற்றுலாப்
பயணிகளுக்காகத் திறந்துகொடுக்கவேண்டும்.
** ** **
-சிதம்பரம் இரவிச்சந்திரன்
No comments:
Post a Comment