Monday 1 April 2019

வண்ண வண்ண நிறங்களுடன் ஒரு அற்புதப் பறவை (Flame-throated bulbul)



புல்புல்கள் பெரும்பாலும் வெப்பமண்டலப்பகுதிகளில் காணப்படும் பறவைகள் ஆகும்.  உண்மையில் தென்னிந்தியாவில் சுலபமாகவும், பல இனங்களாகவும், இந்தப்  பகுதி வனங்களில் காணப்படும் ஒரு பறவை இனம்தான் இவை.  ஒவ்வொரு வனப்பகுதியிலும் ஒன்றிரண்டு ரக புல்புல்கள்  பல சிறப்பம்சங்களுடன் இருப்பதைக் காணமுடியும்.  அந்த வனத்தின் மொத்தப் பறவைகளிடையே இவை ஆதிக்கம் செலுத்துவதாகவும் சில பகுதிகளில் காணப்படுகின்றன. 

  பசுமை மாறாக் காடுகள் முதல் வறண்ட முள் காடுகள் வரை பலவிதமான காடுகளிலும், சில சிறப்பு பண்புகளுடன் காணப்படக்கூடிய புல்புல்கள் காணப்படுகின்றன.  நம் காட்டுப்பகுதிகளில் வாழ்ந்துவரும் எல்லோராலும் விரும்பக்கூடிய ஒரு பறவை இனமே புல்புல்கள் ஆகும்.  மணிகண்டன் என்ற செல்லப்பெயருடன் ஒரு இன புல்புல் பறவை கேரளாவில் அதிகமாகக் காணப்படுகிறது.  இது உண்மையில் ஒரு காட்டில் வாழும் பறவையே ஆகும்.  ஆனால், இந்த ரகப் புல்புல்கள் பசுமை மாறாப் பகுதிகளையும், சோலைகளையும் விட்டுவிட்டு இலையுதிரும் காடுகளிலும், நட்டு வளர்க்கப்பட்ட மரங்களைக் கொண்ட காட்டுப்பகுதிகளிலுமே இவை அதிகமாக வாழ விரும்புகின்றன. 

   
Photo-wikipidea


மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்பகுதியில் காணப்படும் சிறப்பு மிக்க பண்புகள் கொண்ட புல்புல் இனங்களும் உள்ளன.  மணிகண்டன் என்ற இனம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படக்கூடிய ஒரு புல்புல் ரகமாகவும் இருக்கலாம் என்று பறவையியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.  

   மற்ற எல்லாவகையான புல்புல்களையும் போலவே இந்த மேற்குத்தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படக்கூடியதாகக் கருதப்படும் ரகமும் அதனுடைய வண்ண வண்ண நிறங்களால் எல்லோரையும் தன்பால் ஈர்த்துவிடுகிறது. 

   உடலின் அடிப்பகுதி அடர்த்தியான மஞ்சள் நிறத்துடனும், உடலின் மேல்பகுதி அடர் பச்சை நிறத்திலும் காணப்படுகின்றன.  பளப்பளப்பான கருமை நிறத் தலையில், வெளிறிய மஞ்சள் நிறத்தில் கண் இமைப்பகுதி காணப்படுகிறது.  தொண்டைப்பகுதி தீச்சுடரைப் போல கடும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது.  தவிட்டு நிறத்தில் காணப்படும் சிறகுகளின் ஔரவாட்டில் காணப்படுவது தங்கநிறம் ஆகும்.  வால் பகுதி பளப்பளக்கும் மாட்டுச் சாணத்தின் பசுமையைப் போல இருக்கும்.  வாலின் கீழ்ப்பகுதி மங்கலான வெள்ளை வண்ணத்தில் காணப்படுகிறது.  அலகு கருப்பு நிறத்தில் இருக்கிறது.  கால்கள் சாம்பல் அல்லது தவிட்டு நிறத்தில் இருக்கின்றன. 

   ஆண், பெண் பறவைகளின் நிறங்களில் வேறுபாடு எதுவும் காணப்படுவது இல்லை.  புல்புல் பாடுவதைக் கேட்பது என்பதே ஒரு ஆத்மார்த்தமான இனிமை தரும் அனுபவம் ஆகும்..  உச்சச் சுருதியில் கச்சேரி செய்வதைப் போல இவை பாடுவது நம் இதயத்தை நெகிழவைப்பது ஆகும்.  இந்தப் பாட்டில் ஐந்தாறு வெவ்வேறான சுருதிகள் கலந்திருக்கும். 

   பெரும்பாலும் தனியாகவோ அல்லது இணைகளுடனோ காணப்படும் இவற்றுக்கு  மற்ற பறவைகளுடன் ஒன்றுசேர்ந்து இவை காணப்படுகின்றன.  பல இன புல்புல்களும் ஒரே இடத்தில் ஒன்றாக இருந்து பாட்டு பாடுவதும் உண்டு.. 

    இதுவரை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காணப்பட்டு வந்த புல்புல்களை வேறு புல்புல் இனங்களுடன் சேர்ந்த ஒரு இனமாக பறவையியல் அறிஞர்கள் கருதியிருந்தார்கள்.  ஆனால், சமீபகாலத்தில் இந்த இனம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படக்கூடிய ஒரு தனிச்சிறப்பு மிக்க இனமாக இந்தப் பகுதியில் வாழும் புல்புல்களை கருதுகிறார்கள்.  தெற்கு மகாராஷ்டிரா முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்து கிடக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இவை பரவலாகக் காணப்படுகின்றன.  முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது மார்ச் முதல் மே மாதம் வரை..  புல்புல்கள் தங்களுக்கு என்று தனிப்பட்ட ஒரு பாணியில் ஒரு கோப்பை வடிவத்தில் கூடுகளைக் கட்டுகின்றன.  1 முதல் 3 மீ வரை உயரத்தில் ஏதாவது ஒரு குத்துச்செடியில் கவனமாக இந்தக் கூடுகள் கட்டப்படுகின்றன.  உதிர்ந்துபோன இலைகளால் கட்டப்பட்ட இந்தக் கூடு எட்டுக்கால்பூச்சியின் வலையாலும், புற்களையும் கொண்டு பின்னிப் பின்னிப் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கும்.  கூட்டின் உள்பகுதி ஈரமான புற்களால் மெத் மெத்தென்று பரப்பப்பட்டிருக்கும்.  மஞ்சள் நிறம் கலந்த உதிர்ந்த இலைகளை கூடு கட்டுவதற்குப் பயன்படுத்துவதற்கு புல்புல்கள் ஆர்வம் காட்டுகின்றன. 

   சாதாரணமாக இரண்டு முட்டைகள் வரை இடுகின்றன.  ஆனால், முட்டையை விரிக்கவைப்பது, பிறந்த குஞ்சுக்களைப் பராமரிப்பது போன்ற காரியங்களில் புல்புல்கள் என்ன செய்கின்றன என்பது பற்றிய ஆராய்ச்சிகள் எதுவும் பெரிய அளவில் இன்னும் நடக்கவில்லை.  ஜூன் மாதத்தில்தான் அதிகமாக குஞ்சுகள் பொரிக்கப்பட்டு வெளியேவருகின்றன.  

   அற்புதமான இது போன்ற பறவைகள் பற்றிய அறிவு இயற்கையைப் பாதுகாப்பதிலும், சூழலைப் போற்றுவதிலும் நம்மையும், நம் குழந்தைகளையும் முழுமனதோடு ஈடுபடவைக்கும்..  காக்கைக்கு சோற்றையும், எறும்புக்கு அரிசிமணிகளையும் கொடுத்து வளர்த்துப் பராமரித்த முன்னோர்கள் வாழ்ந்த வழியில் வந்த நாம் நம்மைச் சுற்றிலும் இருக்கும் எல்லா உயிர்களையும் நம் உயிர் போல நேசித்து போற்றவேண்டியது நாளை நம் நலவாழ்வுக்கு நாமே செய்துகொள்ளும் பேருதவியாகும்..

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

No comments:

Post a Comment