தமிழ் நாட்டில், இன்று கணந்துள் பறவையை எங்கே காணலாம்? என்று கேட்டால்
என்ன பதில் வருமோ தெரியாது. ஆனால், “ஆள்காட்டிப் பறவை” என்றால், பறவையைக் காட்டிக் கொடுக்கப்
பெரும்பான்மையோர் முன் வரக்கூடும். ஏனென்றால், இந்தப் பறவைகளின் குரல், ஆளைக் காட்டிக் கொடுக்கும் இயல்புடையது. ஆள்காட்டிப் பறவைகள், இனப்பெருக்கக் காலத்தில், எதிரிகள் இரண்டு, மூன்று பர்லாங் தூரத்திலே வரும்போது இனம் கண்டு கொண்டு, கூட்டையும் குஞ்சுகளையும் காக்கக் கடுங்குரல் எழுப்புகின்றன. இவைகளின் அபயக் குரலைக் கேட்டு அருகிலிருக்கும் பிற பறவைகளும் விலங்குகளும் அந்த இடத்திலிருந்து விலகி விடுகின்றன. இதனால், வேட்டையாடுபவர்களும் புகைப்படம் எடுக்க விரும்புவர்களும் இந்தப் பறவைகளை விரும்புவதில்லை.
சங்க இலக்கியத்தில், கணந்துள் பறவையைப் பற்றிய வர்ணனைகள், முக்கியமாகப் பறவையின் கால்கள், குரலின் தன்மைப் பற்றி இரண்டு பாடல்களில் காணலாம். இந்தக் கணந்துள் பறவைதான், “ஆள்காட்டிப் பறவை” என்று P. L. சாமி, எழுதியுள்ள “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” (p.147-157)
என்ற நூலில், பறவையியலின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்குகிறார்.