தமிழ் நாட்டில், இன்று கணந்துள் பறவையை எங்கே காணலாம்? என்று கேட்டால்
என்ன பதில் வருமோ தெரியாது. ஆனால், “ஆள்காட்டிப் பறவை” என்றால், பறவையைக் காட்டிக் கொடுக்கப்
பெரும்பான்மையோர் முன் வரக்கூடும். ஏனென்றால், இந்தப் பறவைகளின் குரல், ஆளைக் காட்டிக் கொடுக்கும் இயல்புடையது. ஆள்காட்டிப் பறவைகள், இனப்பெருக்கக் காலத்தில், எதிரிகள் இரண்டு, மூன்று பர்லாங் தூரத்திலே வரும்போது இனம் கண்டு கொண்டு, கூட்டையும் குஞ்சுகளையும் காக்கக் கடுங்குரல் எழுப்புகின்றன. இவைகளின் அபயக் குரலைக் கேட்டு அருகிலிருக்கும் பிற பறவைகளும் விலங்குகளும் அந்த இடத்திலிருந்து விலகி விடுகின்றன. இதனால், வேட்டையாடுபவர்களும் புகைப்படம் எடுக்க விரும்புவர்களும் இந்தப் பறவைகளை விரும்புவதில்லை.
சங்க இலக்கியத்தில், கணந்துள் பறவையைப் பற்றிய வர்ணனைகள், முக்கியமாகப் பறவையின் கால்கள், குரலின் தன்மைப் பற்றி இரண்டு பாடல்களில் காணலாம். இந்தக் கணந்துள் பறவைதான், “ஆள்காட்டிப் பறவை” என்று P. L. சாமி, எழுதியுள்ள “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” (p.147-157)
என்ற நூலில், பறவையியலின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்குகிறார்.
.இந்த இரண்டு சங்கப் பாடல்களிலும் கணந்துளின் நீண்ட கால்களை “நெடுங் காற் கணந்துள்”, என்று புலவர்கள் குறிப்பிடுகின்றனர். பறவையியலில் ஆள்காட்டியின் கால்கள் நீண்டவையென்று விளக்கப்பட்டுள்ளது.
மேலும் “கணந்துள் பறவை எதுவென்று அறியச் செய்யுளிலேயே “அகச்சான்று” (internal evidence) உள்ளதென்று கீழ்கண்டவாறு எடுத்துக்காட்டியுள்ளார்.
“ஆற்று அயல் இருந்த இருங் கோட்டு அம் சிறை
நெடுங் காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ,
ஆறு செல் வம்பலர் படைதலை பெயர்க்கும்”
குருந்தொகை 350: 4-6, ஆலந்தூர் கிழார்
விளக்கம்: “வழியின் அருகே செல்லும் வழிப்போக்கர்களுடைய கூட்டத்தை, அழகிய சிறகுகளையும், நீண்ட கால்களையும் உடைய கணந்துள் பறவை, அங்கே செல்லுபவரின் வருகையை அறிவித்து, அந்த இடத்தினின்று நீங்கச் செய்யும்”
இந்தப் பாடலில், கணந்துள்ளின், ஆள் அறிவித்துக் காட்டும் குரலை,“ஆள்
அறிவுறீஇ” என்று சங்கப் புலவர் குறிப்பிடுகிறார். “ஆள் இருப்பதை அறிவுறுத்துவதால்” கணந்துள் பறவை ஆள்காட்டிப் பறவைதான் என்பதற்கு, இது செய்யுளிலிலேயே உள்ள “அகச்சான்று” என்று, P. L. சாமி விவரிக்கிறார்.
“பார்வை வேட்டுவன்
படு வலை வெரீஇ,
நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்”
நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்”
நற்றிணை 212: 1-3, குடவாயிற் கீரத்தனார்
விளக்கம்: “பறவைகளைப் பிடிக்கக் கருதிப், பார்வைப்புள்ளை(decoy) வைத்து, அமைத்த வலையைக் கண்டதும் நெடிய கால்களையுடைய கணந்துள் பறவை அச்சம் கொண்டு, தெளிவான குரலில் புலம்பும் குரல் காட்டின் வழியாகச் செல்லும் இசைக்கருவி முழங்குபவர் தம் வருத்தம் நீங்க இசைக்கும் யாழின் இசை போன்று ஒலிக்கும்”.
.
இந்தப் பறவையின் குரலை, நற்றிணை 212-இல், புலவர், “புலம்பு கொள்” என்கிறார். பறவையியலாளர்கள் ஆள்காட்டியின் குரலை, ”loud and penetrating” என்று குறிப்பிடுகின்றனர். பறவைகளின் தந்தை என்று போற்றப்படும் முனைவர் சலீம் அலி, இந்தப் பறவைகளின் குரலை வர்ணிக்கும் போது, “மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, இரட்டை அசையில், “twit, twit” என்று இரண்டு வினாடிக்கொரு தடவையும், இடைஇடையே, மிகவும் உயர்ந்த குரலில், “twit-twit-twit-twit”, என்று இரக்கமான குரல் கொடுக்கும், சிவப்பு மூக்கு ஆள்காட்டி, சூழ்நிலைக்கேற்றவாறு, குரலை உயர்த்தியோ, தாழ்த்தியோ, “Did-he-do-it?” என்று வருத்தம் தோய்ந்த குரல் கொடுக்கும்” என்கிறார் (The Book of Indian Birds,
Salim Ali. p.139-140).
P. L. சாமி, “கணந்துள் என்ற பெயர் ஆள்காட்டியின் அபாய அறிவிப்பு ஓசையின் காரணமாக வந்திருக்கலாம், “கணகணத்தல்” என்ற சொல் விட்டு விட்டு ஒலித்தலைக் குறிக்கும், இதனால் ஓசையின் அடிப்படையில், “கணந்துள்” என்ற பெயர் தோன்றியிருக்கலாம் என்றும் இந்தப் பறவை உள்ளானைப் போன்றிருப்பதால், கணந்துள் என்ற பெயரிலுள்ள “உள்” உள்ளானைக் குறிக்கலாம்”. ஆகவே “கணந்துள்” என்று சங்கக் காலப் புலவர்கள் பாடியுள்ள பறவை, ஆள்காட்டிப் பறவைதான் என்று நம்முன் எடுத்துக் காட்டுகளோடு தன் கருத்தை விளக்குகிறார்.
உலகத்தில், இருபத்திநான்கு வகை லேப்விங் பறவைகள் உள்ளன. தமிழகத்தில் மூன்று வகையான லேப்விங் பறவைகள் காணப்படுகின்றன. இவை: சிவப்பு மூக்கு ஆள்காட்டி அல்லது செம்மீசை ஆள்காட்டி(Red Wattled Lapwing-Vanellus indicus), மஞ்சள் மூக்கு ஆள்காட்டி அல்லது மஞ்சள்மீசை ஆள்காட்டி ( Yellow Wattle Lapwing)- Vanellus
malabaricus. சாம்பல் தலை ஆள்காட்டி (Grey Headed Lapwing -Vanellus cinerea)
சிவப்பு மூக்கு ஆள்காட்டியும், மஞ்சள் மூக்கு ஆள்காட்டியும் தமிழகத்தில் எப்போதும் காணப்படும் பறவைகள். சாம்பல் தலை ஆள்காட்டி, குளிர் காலத்தில், தமிழகத்திற்கு வலசை வரும் பறவைகளில் ஒன்று. மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் வருகிறது { Wetland birds of Tamil Nadu. P.
91-92, Grubh, R. 2012).
ஆள்காட்டிப் பறவைகள், ப்ளோவர் (Plover) குடும்பத்தைச் சார்ந்தவை. இந்தப் பறவைகளுக்குக் கால்கள் நீண்டதாய், பொய்க்கால்கள்(stilt) வைத்து நடப்பதுப் போல் காணப்படும். இவை நீர்க் கரையோரம் காணப்படும் பறவைகள் என்று கருதப்பட்டாலும், மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, நீர் வறண்ட பகுதிகளில்தான் அதிகமாகக் காணப்டுகிறது. சிவப்பு மூக்கு ஆள்காட்டியை நீர்க்கரையோரங்களில் காணலாம். சிறு புழு, பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன. இந்தப் பறவைகள், தனித்தோ, இணையாகவோ அல்லது சிறு கூட்டமாகவோ காணப்படுகின்றன. இவை வலசை போவதில்லை.
தோற்றம்:
ஆண், பெண் ஆள்காட்டிப் பறவைகள், தோற்றத்தில் ஒன்று போல் காணப்படுகின்றன. சிவப்பு மூக்கு ஆள்காட்டியின் தலை கழுத்து, மார்பகம் கருமையாகவும், முதுகு சிறகுகள் செம்பழுப்பு நிறத்திலும் வயிற்றுப் பகுதி வெண்மையாகவும் காணப்படும். இதன் கண் பகுதியிலிருந்து மூக்குவரை சிவப்பு நிறச் சவ்வு வளர்ச்சி தோன்றி, மீசை போல் தோற்றமளிக்கிறது.
சிவப்பு மூக்கு ஆள்காட்டி
|
மஞ்சள் மூக்கு ஆள்காட்டியின் கண்ணிற்கும் மூக்கிற்கும் இடைப் பகுதியில், மஞ்சள் நிறத் தோல் வளர்ச்சி மீசை போல் தொங்கியுள்ளது. இரண்டு பறவைகளின் கால்களும் நீண்டு, மஞ்சள் நிறத்திலிருக்கின்றன.
மஞ்சள் மூக்கு ஆள்காட்டி |
இந்தப் பறவைகள் இணை பிரியாதவை. இனப்பெருக்கக் காலத்தில், திறந்த வெளியில், ஆழமற்ற சிறு பள்ளம் தோண்டி, இலைகள், சிறு கற்கள், உலர்ந்த சாணத்துண்டுகள் கொண்டு நிரப்பி, மூன்று அல்லது நான்கு முட்டைகளிடுகின்றன. (சிறு கற்கள், சாணத்துண்டுகள், முட்டைகள் இடம் பெயராமலிருக்க உதவுகின்றன). முட்டைத் தோடுகளில் காணப்படும் தவிட்டு நிறப் புள்ளிகள், சுற்றுச் சூழலலை ஒத்திருப்பதால் எதிரிகளால் முட்டைகளை எளிதில் கண்டு கொள்வது கடினம்.
இரண்டு பறவைகளும், மாற்றி மாற்றி அடை காக்கின்றன. முட்டைகளை அடைகாக்கும் சமயத்திலோ அல்லது குஞ்சுகள் பொரித்திருக்கும் சமயத்திலோ, எதிரிகள் அருகில் வர நேர்ந்தால், மிகுந்த ஆரவாரத்தோடு அபயக் குரல் எழுப்பி, வட்டமிட்டுப் பறந்து எதிரிகளின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி அங்கிருந்து அகலச் செய்துவிடுகின்றன. தமிழகத்திலும்,
இலங்கையிலும்,
ஆள்காட்டிப்
பறவையின்
வாழ்க்கைப்
போராட்டத்தைப்
பற்றி,
மாடு
ஓட்டும்
சிறுவர்
பாடியதாக
ஒரு
அழகிய
நாட்டுப்
பாடலை,P.L.
சாமி,
சுட்டிக்
காட்டுகிறார்.
இந்தப்
பாடலில்,
மஞசள்
மூக்கு
ஆள்காட்டிப்
பறவையைப்பற்றிச்
சில
உண்மைகளும், பல
கற்பனைகளும்
கலந்து
காணப்படுகின்றன.
“ஆக்காட்டி, ஆக்காட்டி, ஆவரம்பூ ஆக்காட்டி
எங்கே எங்கே முட்டையிட்டாய்
கல்லுத் துளைத்துக் கடலோரம் முட்டையிட்டேன்
இட்டது நாலு முட்டை பொரித்தது மூன்றுகுஞ்சு
மூத்த குஞ்சுக் கிரைதேடி மூணுமலை சுற்றி வந்தேன்
இளைய குஞ்சுக் கிரைதேடி ஏழுமலை சுற்றி வந்தேன்
பார்த்திருந்த குஞ்சுக்குப் பவளமலை சுற்றி வந்தேன்
புல்லறுத்தான் புலவிற்குக் காய்தின்னப் போகயிலே
மாயக் குறத்திமகன் வழிமறித்துக் கண்ணி வைத்தான்
காலிரண்டும் கண்ணியிலே சிறகிரண்டும் மாரடிக்க
நானழுத கண்ணீரும் என்குஞ்சழுத கண்ணீரும்
வாய்க்கால் நிறைந்து வழிப்போக்கர் கால்கழுவிக்
குண்டு நிறைந்து குதிரைக் குளிப்பாட்டி
இஞ்சிக்குப் பாய்ஞ்சு இலாமிச்சுக்கு வேரூண்டி
மஞ்சளுக்குப் பாய்ஞ்சு மறித்ததாம் கண்ணீரே”
“சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்”, p.153
ஆவாராம் பூ |
இந்தப் பாடலில், மஞ்சள் ஆள்காட்டிப் பறவையின் கண்ணருகில் காணப்படும் மஞ்சள் நிறத் தோல், ஆவாரம் பூவின் இதழ்கள் போலவும், நான்கு முட்டைகள் இடுவதும், கல்லின் இடையில் முட்டை இடுவதால், கல்லைத் துளைத்து முட்டையிடுவதாகவும், முட்டைகள், சுற்றுச் சூழலை ஒத்திருப்பதால் இவைகளைக் கண்டு கொள்ள முடியாத நிலையில், சிறுவர், எங்கே முட்டையிட்டாய்? என்று பறவையைக் கேட்பதாகவும் காணலாம். பாடலிலுள்ள மேற்கண்ட தகவல்கள், பறவையியலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், நாட்டு மக்களின் இயற்கையறிவு குறையற்றதாக இருப்பதைக் காணலாம். மேலும், “குறத்திமகன் வழிமறித்துக் கண்ணி வைத்தான்” என்ற செய்தி, நற்றிணை, 212 -இல் காணப்படும் “பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,” என்ற அடியை ஒத்துள்ளது.
ஆனால் மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, வறண்ட நிலத்தில் முட்டையிடுகிறது. அடைகாக்கும் நேரத்திலும், குஞ்சுகள் பொரித்தப் பின்பும் இரை தேட அதிகதூரம் செல்வதில்லை. குஞ்சுகள், பொரித்த உடனேயே தானாக பெற்றோருடன் சேர்ந்து இரை தேடிக் கொள்கின்றன (precocial). ஆள்காட்டிப் பறவை, குஞ்சுகளைப் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பதைத்தான் அதன் அழுகையும் கண்ணீரும் என்று கற்பனையாகப் பாடலில் கூறப்பட்டுள்ளதென P.L. சாமி கருதுகிறார்.
வட இந்தியாவில், ஆள்காட்டிப் பறவைகளைக் கவனித்து ஆராய்ச்சிகள் செய்து கொடுத்திருக்கும் தகவல்கள் நிறையக் காணலாம். முக்கியமாக, சிவப்பு மூக்கு ஆள்காட்டிகள், மொட்டை மாடிகளில், கான்கீரிட்டில் சிறு பள்ளம் தோண்டி, முட்டையிட்டு அடைக்காப்தை பல ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர் (Mundkur, Taej 1985, Muralidhar, A., Barve, S., 2013).
கி. பி பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியாவில் பிறந்து வளர்ந்து, கல்லூரியில் பட்டம் பெற்றப் பின் அரசாங்க ஊழியராகப் பணிபுரிந்த ஆங்கிலேயர் திரு. ஏட்கின்ஸ் (E. H. Aitkins), தன்னுடைய “The Common Birds of Bombay” (p.160-163) என்ற புத்தகத்தில், சிவப்பு மூக்கு ஆள்காட்டிப் பறவையைப் பற்றி கீழ்க் கண்டவாறு நகைச்சுவையோடு வர்ணிக்கிறார். “எதற்கு நான் லேப்விங் பறவையைப் பற்றி விவரிக்க வேண்டும்? அதற்கு அறிமுகமோ அல்லது வர்ணனையோ தேவையில்லை, அதுவே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும். உங்களை ஈர்த்துக்கொள்ளும். அதன் குரல் உங்கள் மனதிலிருந்து அகலாதபடித் திரும்பத் திரும்ப அழுத்தமாகக் குரல் கொடுக்கும். தீடிரெனெ, துணை பறவையும், எங்கிருந்தோ வந்து, வட்டமடித்து, சுற்றி சுற்றிப் பறந்து, மேலும் கீழும் பாய்ந்து அருகே வருவது போலவும் தூரமாகப் போவது போலவும் போக்குக் காட்டி, அந்த இடத்தை விட்டு நகராமல், மனித அறிவுக்கு எட்டாத மர்மான இரங்கல் குரலில் குற்றம் கூறுவது போல் “Did you do it? Did you do it? Pity to do it” என்று குரல் கொடுக்கும். எதற்காக இந்தப் பறவை இப்படி நடந்து கொள்கிறது? நான் ஒரு தவறும் செய்யவில்லையே? என்னுடைய சந்தேகம் என்னவென்றால், இதனுடைய முட்டைகள் இங்கு எங்கேயோ இருக்கின்றன. நான்அதைத் தேடுவதினால் பயனில்லை. ஏனெனில், இந்த லேப்விங், ஒரு திறமைவாய்ந்த பொய்யன். ஒரு ஆங்கிலேயப் புலவர் சொன்னபடி,
“The Lapwing lies,
Says
here when it is there’,
மொத்ததில் இது ஒரு அதிசயப் பறவை” யென்று வியக்கிறார். இந்த வர்ணனை, எத்தனை உண்மை என்பது ஆள்காட்டிப் பறவையைப் பார்த்தவர்களின் அனுபவத்தில்தான் தெரியும். அடுத்த முறை, இந்த அழகிய பறவைகளைப் பார்க்கவும், குரலைக் கேட்கவும் நேர்ந்தால், Hope
you can say, “ No my friend, l didn’t” if you
protect nature.
வட இந்தியாவில் ஆள்காட்டிப் பறவையைப் பற்றியுள்ள சிலதகவல்கள்:
ராஜஸ்தானில் ஆள்காட்டிப் பறவைகள் முட்டையிடும் காலம் மழை வருவதைக் குறிக்கிறதென்று நம்புகின்றனர். சில கிராமங்களில், ஆள்காட்டியின் குரல் அபசகுனமாகக் கருதப்படுகிறது..
“வானத்திலிருந்து ஏதாவது விழுந்து முட்டைகளுக்கோ, குஞ்சுகளுக்கோ ஆபத்து நேரிடாதபடி, பிடித்துக்கொள்ள, இரவில் படுக்கும் போது, இவைகளின் கால்கள், வானத்தில் நோக்கியிருக்கும்”. இந்தி மொழியில், இதை, “Tithiri se Asian thama jayega” ("can
the pee-wit support the heavens?") என்கின்றனர்.
ஆள் காட்டியின் முட்டைகளுக்குத் தூக்கத்தைத் தடுக்கச் சக்தி உண்டு என்று நம்புவதால், இரவு வாகனம் ஓட்டுபவர்களுக்காக முட்டைகள் வேட்டையாடப்படுகின்றன
(Chan Kumar, 2015).
References:
Aitken, Edward Hamilton, 1851-1909. The
common birds of Bombay
Charn Kumar,
(2015). First record of a regularly occupied nesting ground of Yellow-wattled
Lapwing, Vanellus malabaricus (Boddaert) in agricultural environs of Punjab
with notes on its biology . Journal of entomology and Zoology Studies, JEZS
2015: 3 (1): 129-134
Grubh, R, (2012).
The wetland Birds of Tamil Naddu
Mundkur, Taej (1985). "Observations on the roof-nesting
habit of the Redwattled Lapwing (Vanellus indicus) in Poona, Maharashtra". Journal
of the Bombay Natural History Society. 82 (1): 194–196.
Mundkur, Taej (1985). Barve,
S., 2013. Peculiar choice of nesting of Red-wattled Lapwing Vanellus indicus in
an urban area in Mumbai, Maharashtra. Indian BIRDS 8 (1): 6–9
Muralidhar, A., Barve, S., 2013. Peculiar choice of nesting of
Red-wattled Lapwing Vanellus indicus in an urban area in Mumbai, Maharashtra.
Indian BIRDS 8 (1): 6–9
Naik,
RM; George, PV; Dixit, Dhruv B (1961). "Some observations
on the behaviour of the incubating Redwattled Lapwing, Vanellus indicus
indicus (Bodd.)". Journal of the Bombay Natural History
Society. 58 (1):
223–230.ள்
இந்தக் கட்டுரை "வல்லமை" on line magazineல், 6,டிசம்பர்2017ல் வெளிவந்தது. சற்குணா பாக்கியராஜ்
அருமையான பதிவு
ReplyDeleteசீரிய ஆய்வு
ReplyDeleteஅருமை https://www.youtube.com/watch?v=D0rwC367jBg
ReplyDelete