|
பணங்காடை
|
பறவைகள் பார்க்க அதிக அளவில் மக்கள் ஆர்வமாக வருகிறார்கள். 10 ஆண்டுகள் முன்பு இருந்த அளவை ஒப்பிட்டால் இப்பொழுது பல மடங்கு உயர்ந்து உள்ளது. எந்த நேரமும் சென்னை பெரும்பாக்கம் சதுப்புநிலத்தில் சிலர் பறவைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
குளிர்கால தொடக்கத்தில் தவறாமல் ஒரு செய்தி நாளிதழ்களில் இடம்பெறும். வெளிநாட்டுப் பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்து உள்ளன. பார்வையாளர் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதே ஆகும்.
பறவைகள் குளிர்காலத்தில் மட்டுமே மக்களுக்கு நினைவுக்கு வரும் அளவு நிலைமை இருந்தது. அதை ஒட்டியே பல பறவைகள் கணக்கெடுப்பு உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதனால் குளிர்காலத்தில் பறவைகள் நிலைமை தெரிந்தது. ஆனால் கோடையில் பறவைகள் நிலை என்ன என்று சரியாகத் தெரியவில்லை. கணக்கெடுப்பும் நடைபெறுவதில்லை.
கோடைக் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த பறவைகள் திரும்பி அதன் நாட்டிற்கு சென்றுவிட்டதா? அல்லது அதில் சில பறவைகள் இங்கேயே தங்கிவிட்டதா?
உள்ளூர் பறவைகள் நிலை என்ன? கோடையில் நீர் நிலைகள் வற்றி விடுவதால் நீர்புலப் பறவைகள் நிலை என்ன? போன்ற பல கேள்விகள் தோன்றியதால் கோடையில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தி கோடை பறவைகள் நிலை அறிந்து கொள்ளலாம் என்று காக்கைக் கூடு, உயிர் இணைத்து நடத்திய கணக்கெடுப்பில் பறவைகளின் நிலை அறிந்து கொள்ள முடிந்தது.
கொரோனா போன்ற பெரும் தொற்று காலமானதால் வீடு, தோட்டம், சுற்றுப்புறம் மட்டுமே பறவைகளைப் பார்த்துப் பதிவு செய்யுமாறு கேட்டு இருந்தோம். நிறையப் பறவை ஆர்வலர்களும் பதிவு செய்து இருந்தனர்.
தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலிருந்து 31 மாவட்ட பறவை ஆர்வலர்கள் கலந்து கொண்டு பட்டியல் அனுப்பி இருந்தனர். மொத்தம் 271 பட்டியல் வந்து உள்ளது. மே மாதம் 30 மற்றும் 31, 2021 தேதி கணக்கெடுப்பு நடைபெற்றது.