Saturday, 23 July 2016

பறவை நோக்குதல் - தொடர்-3


மாட்டின் அருகில் இருக்கும் இரண்டு பறவைகள் (உன்னிக் கொக்கு மற்றும்  நாகணவாய் (மைனா)) பற்றி போன கட்டுரையில் பார்த்தோம் அதன் தொடர்ச்சியாக மாட்டின் அருகில் இருக்கும் மேலும் ஒரு பறவையுடன் தொடங்குவோம்.

3. கரிச்சான் (Black Drango ) :

image-wiki
1.இரட்டை வால் குருவி என்று அழைக்கப்படும் கரிச்சான் பறவையும் மாட்டின் மேல் அமர்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். உடல் முழுவதும் நீல கருப்பாகவும், வால் நீண்டு மற்றும் பிளவுபட்டு இரண்டாக இருப்பது தெரியும். அதனால் இதனை இரட்டை வால் குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பெயரில் தமிழ் படம் ஒன்றும் வந்திருக்கிறது.

2.தமிழில் ஒரே பறவைக்கு நிறைய பெயர்கள் இருக்கும். அந்த அந்த வட்டாரத்தில், வட்டார பெயர்களுடன் பறவைகள் அழைக்கப்படுகிறது. (முடிந்த வரை அனைத்து பெயர்களையும் சேகரித்து எழுத முயற்ச்சிக்கிறேன்) அதே போல், இரட்டை வால் குருவிக்கும், இரண்டுக்கு மேற்ப்பட்ட பெயர்கள் உண்டு.

3.பெரும்பாலும் கரிச்சான் இரையை பிடித்த இடத்திலேயே சாப்பிட்டு விடும். இது மின் கம்பிகளில் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.பூச்சிகளை பார்த்தவுடன் மிக வேகமாக பறந்து சென்று பிடித்துவிடும் தன்மையுடையுது.

4.சில சமயங்களில் பெரிய பறவைகள் கொண்டு செல்லும் இறையையும் பிடுங்கும் பறவையான கரிச்சான், தான் கூடுகட்டும் மரத்தில் தன் குஞ்சுகளை கொத்தவரும் பருந்து மற்றும் மற்ற பெரிய பறவைகளை பறந்து சென்று விரட்டும் தைரியம் உள்ள பறவைதான் கரிச்சான் குருவி. அதனால் இவை கூடு கட்டியுள்ள மரத்தில் மற்ற சாதுவான பறவைகள் (மாம்பழ சிட்டு) கூட்டை அமைத்துகொள்ளும். 

கரிச்சனானை போல் மேலும் மூன்று வகை கரிச்சான்கள் உள்ளன. ஆனால் அவை காட்டில் வாழ்பவை.

image-wiki
 கரிச்சானின் வட்டாரப்பெயர்கள்:

1.கரிச்சான் அல்லது கருங் கரிச்சான் 

2.கரிக் குருவி

3.வால் நீண்ட கருங் குருவி

4.கருவாட்டு வாலி 

5.இரட்டை வால் குருவி 

அடுத்து முக்கியமாக பறவை கோக்குதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய அமைப்பு ஒன்றை பற்றி பார்ப்போம்.இந்த அமைப்பு மூலம் பறவைகளின் இன்றைய நிலையை பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.



IUCN-International Union for Conservation of Nature: ( சர்வதேச இயற்க்கை பாதுகாப்பு இயக்கம்)

உலகில் இருக்கும் பறவை மற்றும் மற்ற ஊயிரினங்கள் எண்ணிக்கை ,அவற்றின் வாழிடம்,தற்போதிய நிலை,அழிந்து கொண்டிருகிறதா,அழிவை நோக்கி செல்கிறதா அல்லது அழிந்து விட்டதா இப்படி ஒவ்வொரு வருடமும் சிகப்பு பட்டியல்(RED LIST) என்று மிக நீண்ட ஒரு பட்டியலை வெளியிடும் அமைப்புதான் சர்வதேச இயற்க்கை பாதுகாப்பு இயக்கம் (IUCN). இந்த அமைப்பு 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்றுவரை செயல்படுகிறது.

ஆனால் சிகப்பு பட்டியலை(IUCN -RED LIST) 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பால் பறவைகளுக்கு என்ன நன்மை என்று பார்த்தால் 

தினமும் மனிதன் இறப்பதை பல வழிகளில் நமக்கு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வழியாக தெரிந்து கொள்ளமுடிகிறது. அடுத்து எதனால் இவ்வளவு பேர் இறந்தார்கள் என்ற தகவலும் நமக்கு தெரிகிறது. விபத்தில் இறந்தார்கள் அல்லது ஏதாவது புதிய நோய் வந்து மனிதர்கள் இறந்து கொண்டிருகிறார்கள் என்று தெரிய வந்தால் உடனே அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்கிறது.

இப்படி மனித உயிர்களை பற்றி தெரிந்துகொள்ள நிறைய வழிகள் இருந்தாலும் பறவை, விலங்குகள் இவற்றின் அழிவை பெரும்பாலும் பத்திரிக்கை கவனத்திற்கு வருவதே இல்லை இப்பொழுது கூட பறவைகளின் அழிவின் விவரத்தை இது போல் இருக்கும் அமைப்பின்(IUCN) மூலம் தான் பதிரிக்கைகளுக்கே தெரியவருகிறது. அரசியல் நிருபர்கள், சினிமா நிருபர்கள், க்ரைம் நிருபர்கள் என்பது போல் எந்த பத்திரிகையிலாவது சுற்றுச்சூழலுக்கு என்று தனி நிருபர்கள் உள்ளார்களா? என்று தெரியவில்லை.

மனித உயிர்களின் விவரங்கள் தினமும் தெரிவது போல் பறவைகள் அழிவின் விவரங்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இது போல் ஒரு பட்டியல் மூலம்தான் தெரியவருகிறது. இந்த அமைப்பால் பறவைகளுக்கு என்ன நன்மை என்று இப்பொழுது புரிந்திருக்கும். இது போல் அமைப்பு(IUCN) இல்லை என்றால் மனிதனை தவிர்த்து மற்ற உயிர்களின் விவரங்கள்?  

இந்தியாவில் உள்ள பறவைகளின் நிலையை பற்றியும் ஒவொரு ஆண்டும் இந்த அமைப்பு(IUCN) பட்டியல் ஒன்றை வெளியிடுகிறது. உதாரனத்திற்க்கு 2015ஆம் ஆண்டில் இந்தியாவின் சிகப்பு பட்டியலை பார்ப்போம்.

IUCN பறவைகளின் இருப்பு மற்றும் அதன் அழிவு நிலைகளை ஏழு வகையாக பிரித்து கிழே இருக்கும் படத்தில் இருப்பது போல் வகைப்படுத்துகிறது.


1.LC-(LEAST CONCERN) சொல்லத்தகுந்த(வருத்தப்படாத) அளவுக்கு பறவைகள் உள்ளது

2,NT-(NEAR THEREATENED) அச்சுறுத்தும் அளவில் பறவை உள்ளது 

3.VU-(VULNERABLE) அதிகமாக அச்சுறுத்தம் அளவில் பறவை உள்ளது

                    -கடந்த 10 வருடத்தில் 50 சதவிகிதமாக பறவை குறைந்து உள்ளது

                    -அதாவது 10000க்கும் குறைவாக அந்த பறவை உள்ளது. 
  
4.EN- (ENDANGERED) -பறவை அழிந்து கொண்டிருக்கிறது

                                     - கடந்த 10 வருடத்தில் 70 % பறவை அழிந்து உள்ளது 

                                    - அதாவது 250 பறவைகள் மட்டுமே இன்று உயிர்வாழ்கிறது 

5.CR-(CRITICALLY ENDANGERED) -அழிவின் விளிம்பில் பறவை உள்ளது.

                                                         -90 % பறவை அழிந்து உள்ளது 

                                                         -அதாவது 50 பறவை மட்டுமே உயிர் வாழ்கிறது  

6.EW-(EXTINCT IN WILD) -வனத்தில் முற்றிலும் பறவை அழிந்துவிட்டது.  

                                            -ZOO போன்ற இடத்தில் வைத்து காப்பாற்றப்படுவது

                         - பாதுகாக்க வேண்டும் என்று அவற்றை குறிப்பிட இடத்தில வைத்து காப்பாற்றுவது. 

7.EX-(EXTINCT) கடைசியாக இருந்த ஒரு பறவையும் இறந்துவிட்டது.அதாவது   
            முற்றிலும் இவ்வுலகில் இருந்து அந்த பறவை அழிந்து விட்டது.

ஒரு பறவை இன்று பூமியில் எந்த நிலையில் இருக்கிறது என்பது மேலே உள்ள குறியீட்டின் மூலமே சிகப்பு பட்டியலை வெளியிடுகிறது. 
 
2014 ஆம் ஆண்டு 173 பறவைகள் அழிவின் நிலையில் இருந்துள்ளதாக அறிவித்த IUCN-சிவப்பு பட்டியல் அதில் ஒரு பறவை மட்டும் அழிவின் நிலையில் இருந்து வெளியே வந்து 2015ல் மேலும் எட்டு பறவைகள் சேர்ந்து 180ஆக உள்ளது.


RED LIST OF INDIAN BIRDS  (2015) - 8 பறவைகள்:

1. வடக்கு ஆள்காட்டி (Northern Lapwing - Grass Land Bird)

2.Red Knot

3. கர்லூ உள்ளான் (Curlew  Sandpiper)

4.Eurasian oyster Catcher

                                                         5. பட்டைவால் மூக்கன் (Bar-Tailed Godwit)

                                                         6. கொண்டை முக்குளிப்பான்  (Horned Grebe)

                                                         7.Common Pochard

                                                         8. புல்வெளிக் கழுகு  (Steppe Eagle)

முதல் பறவை புல்வெளி வாழ் பறவை (Moved From LC to NT)

அடுத்து நான்கு பறவைகள் நீர் வாழ் பறவைகள் (WETLAND BIRDS) (Moved From LC to NT)

கடைசி இரண்டு பறவை நீர் வாழ்(WETLAND BIRDS) பறவைகள் (Moved From  LC to VULNERABLE)

NEAR THEREATENED  to  LEAST CONCERN

2014 ஆம் வருடத்தில் NTயில் இருந்த EUROPEAN ROLLER 2015தில் LCக்கு வந்திருப்பது மட்டுமே சந்தோஷம் தரக்கூடிய செய்தியாகும்.
 

தமிழில் அழிந்துவரும் உயிரினங்களை பற்றி சிகப்பு பட்டியல் என்ற சிறு புத்தகம் திரு.சுப்ரபாரதிமணியன் எழுத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

 4. வெண்மார்பு மீன்கொத்தி (White Throated Kingfisher):
 
image-wiki
உலகமெங்கும் தொண்ணுறு வகையான மீன்கொத்திகள் இருந்தாலும் இந்தியாவில் சில வகையான மீன்கொத்திகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் வென்மார்பு மீன்கொத்தி.

மைனா அளவுள்ள இவை, தொண்டை மற்றும் வயிர் பகுதியில் வெண்மையாக காணப்படுவதால், வென்மார்பு மீன்கொத்தி ஆகியது. உடலின் மேற்பரப்பில் அடர் நீல நிறத்திலும் மற்றும் தலை,வயிரின் பாதிக்கு மேல் காப்பி வண்ணத்தில் காணப்படும். அலகு மற்றும் கால்கள் ரத்த சிகப்பில் இருக்கும்.

வாழிடம்:
- அதிக மின் அழுத்தம் செல்லும் மின் கம்பிகளில்  அமர்ந்திருப்பதை பார்க்கமுடியும்,
- வயல்வெளி,
- நீர்நிலைகளில் அதிகமாக காணபடும்,
- நம் வீட்டருகில் சுலபமாக பார்க்க கூடிய பறவைகளில்  இவையும் ஒன்று.

உணவுகள்:
சிறு மீன்கள், தவளை குட்டிகள், சிறு உயிர்கள், பல்லி, நத்தை போன்றவை.
நீரை மட்டும் நம்பி இல்லாமல் சிறு உயிர்களையும் பிடித்து சாப்பிடுவதால் நீர் இல்லாத சமயங்களில் மற்ற பறவைகளை காட்டிலும் இவை தப்பித்து வாழ்ந்துவிடும்.

முட்டை:
தன் நீலமான அலகால் (ஏரி அல்லது ஆற்று பகுதிகளில்) தரையில் பள்ளம் தோண்டி முட்டையிடும் பறவையான மீன்கொத்தி பறவை மார்ச் முதல் ஜூலை வரை இவற்றின் இனபெருக்க காலமாகும்.

image-Arun
பறவையின் வட்டாரப்பெயர்கள்:

1.சிரல்

2.சிச்சிலி 

3.பொன்வாய்க் குருவி

4.மூக்கன்

5.விச்சுலி 

6.கலகக் குருவி 

7.பெரு மீன் கொத்தி


                                                                                                                                                                 -   தொடரும்

                                                                                  -செழியன்
 

உங்கள் கருத்துக்கள் அடுத்த பாகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்: 

lapwing2010@gmail.com

முதல் பாகம்
http://birdsshadow.blogspot.in/2016/05/1.html
இரண்டாம் பாகம்:
http://birdsshadow.blogspot.in/2016/06/2.html                                                      


Sunday, 12 June 2016

பறவை நோக்குதல் - தொடர்-2


IAS தேர்வில் பறவைகள் பற்றி ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது?

கிராமத்து வயல்களில் மேயும் மாடுகளின் மேல் அமர்ந்து அவற்றின் தோலில் உள்ள பூச்சிகளை கொத்தி சாப்பிடும் பறவைகள் எது ?


1.Painted Stork             2.Common Myna           3.Black-Necked Crane    4.Cattle Egret

 Options

(a) 1,2,3,4                        (b) 1 and 3                    (c) 2 and 4             (d)  3 and 4


இவை தான் அந்த கேள்வி ஒரு நிமிடம் யோசித்து அல்லது யோசிக்காமலும்  பதிலை கண்டுபிடியுங்கள்.

என்னது IAS தேர்வில் இதெல்லாமா கேட்பார்கள் என்று நினைக்காதீர்கள். நம்முடைய கவனம் பாட புத்தகத்தில்(Text Book) மட்டும் இருக்க கூடாது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

நாமும் வயல் வெளிகளில் நிறைய முறை சென்று இருப்போம் அல்லது அந்த பக்கமாக செல்லும்பொழுது அங்கு மேயும் மாட்டை பார்த்திருப்போம் ஆனால் ஒரு முறை கூட மாட்டின் மேல் அல்லது அதன் அருகில் இருக்கும் பறவைகளை பார்திருக்க மாட்டோம் என்பது தான் நிஜம்.

மேலே உள்ள அந்த பறவைகளில் இருந்தே நாம் பறவைகளின் வகைகளை இந்த கட்டுரையில் ஆரம்பிப்போம்.

IAS கேள்விக்குக்கான பதில் - :” C”

நெறிமுறைகள்:

பறவைகள் நோக்குவதற்கு ஏதாவது நெறிமுறை உள்ளதா என்றால்? இதற்க்கெல்லாம் நாம் வேலைக்கு சேரும்பொழுது தரும் நெறிமுறைகள்(Code of Conduct) படிவம் போல் பக்கம் பக்கமாக இருக்கும் என்று பெரிதாக நினைத்து விடாதிர்கள்.

1.பறவைகளுக்கு எந்தவிதத்திலும் நம்மால் தொந்தரவோ,

2.முட்டை மற்றும் குஞ்சுகளுக்கு இடையூரோ,

3.சத்தம் எழுப்பி கலவரபடுத்துவதோ,

4.உணவு அளிப்பது  

இவையெல்லாம் தவிர்த்தாலே அதுவே பறவைகளுக்கு நாம் செய்யும் பெரிய நன்மைதாங்க.இதை கவனத்தில் கொண்டு பறவைகளை பார்க்க செல்லுங்கள்.

எந்த நேரத்தில் பறவைகளை பார்க்க வேண்டும் அல்லது எந்த நேரத்தில் பார்ப்பது சிறந்தது என்ற அடுத்த கேள்வி நீங்கள் கேட்கப்போகிறிர்கள்.

புதிதாக பறவை நோக்குபவர்கள் (Beginners) ஆரம்பத்தில் நேரம் எல்லாம் பார்த்து செல்லாதிர்கள்.பறவை நோக்குவதற்கு என்று நேரம் உண்டு என்றாலும் ஆரம்பத்தில் அதெல்லாம் வேண்டாம். நினைக்கும் அல்லது நினைத்து நேரங்களில் பார்க்க ஆரம்பியுங்கள்,நீங்கள் போகும் இடங்களில் எல்லாம் பாருங்கள் ஆர்வம் அதிகமாகும் பொழுது குறிப்பிட்ட நேரத்தில் பார்க்க ஆரம்பிப்போம்.

நேரம் என்று பார்த்தால் அதிகாலை ஆறு மணிக்கும், மாலை ஐந்து மணியில் இருந்து கூட்டில் அடையும் வரையும் (மதியம் இரண்டு மணி அளவிலும் பார்க்கலாம்) இவ்வளவுதாங்க பறவைகளை பார்பதற்கான நேரம்.ஆரம்பத்தில் இவையெல்லாம் கவனத்தில் கொள்ளாதிர்கள்.சிலபேருக்கு அதிகாலையில் எழவே முடியாது அதனால் ஆறு மணிக்கு பார்க்க செல்வோம் என்று அலாரம் வைத்து தூங்கிகொண்டிருப்பார்கள்.கடைசி வரை அவர்களால் பறவைகளை அவதானிக்க முடியாது.அதனால் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நேரத்தில் என்பதை விட்டு நேரம் காலம் பார்க்காமல் பாருங்கள்.

முதல் பறவையாக IASல் கேட்கபட்ட பறவையை பற்றி பார்ப்போம்

1. உண்ணிக் கொக்கு (Cattle Egret) :

பார்பதற்கு முழு வெள்ளையாக காணப்படும் உண்ணிக் கொக்கு. இனப்பெருக்க காலங்களில் மட்டும் பெண் உண்ணிக் கொக்குக்கு தலை மட்டும் முதுகு பகுதியில் ஆரஞ்சு கலர்  தூவிவிட்டது போல் காணப்படும்.இவற்றின் அலகு மஞ்சள் நிறத்திலும், கால்கள் கருப்பு நிறத்திலும் இருக்கும் இவை தான் மற்ற கொக்கில் இருந்து இதனை வேறுபடுத்தி காட்டுகிறது. அந்த பறவையோட மூக்கை பாருங்களேன் என்று சொல்லுவார்கள் உண்மையில் அது மூக்கு அல்ல, அலகு(Beak or Bill) என்று குறிப்பிட வேண்டும்.

 உண்ணிக் கொக்கு நீர் நிலைகளை தவிர வயல்வெளிகளிலும்,மாட்டின் அருகிலும் அதிகமாக காணப்படும்.மாட்டின் அசைவில் வெளிப்படும் பூச்சிகளை மற்றும் மாட்டின் ரதத்தை உறிஞ்சும் உண்ணிகளையும் சாப்பிடுவதால் உன்னிக் கொக்கு என்று பெயர். இதற்கு மாட்டு கொக்கு என்ற பெயரும் உள்ளது.இவற்றின் மஞ்சள் நிற சிறிய அலகு-தடிமனாக இருக்கும்.

இந்தியா மற்றும் உலகளவில் உன்னிகொக்கு காணப்படும். இன்று நல்ல நிலையில் இவற்றின் எண்ணிக்கை இருந்தாலும் நீர் நிலைகள்,சதுப்புநிலங்கள் (பள்ளிகரணை, பெரும்பாக்கம் ஏரி) போன்ற இடங்கள் இன்று அடுக்கு மாடிகளாக மாறிவருவதால் இவற்றின் வாழிடம் பாதிப்படைகிறது.
photo-wikipedia

பறவைகளின் அறவியல் பெயர், குடும்பம் இதையெல்லாம் தவிர்த்துவிட்டு பறவைகளின் செயல்பாடுகள்,நிறம், வாழிடம், எண்ணிக்கை இவற்றை பற்றி மட்டும் பார்ப்போம். எல்லாவற்றையும் புதிதாக பறவைகளை நோக்க ஆரம்பிப்பவர்கள் ஆரம்பத்திலே படித்தால் அவை பள்ளியில் படிக்கும் பாடம் போல் இருந்துவிடும். அதனால் இப்போதைக்கு தவிர்த்து பிறகு தேவையென்றால் பார்ப்போம்.

தொலைநோக்கி - (Binocular)

நிறைய வகைகளில் Binocular கிடைக்கிறது.எது சிறந்த Binocular?


எப்படி தேர்ந்தெடுப்பது ? பறவை பார்பதற்கு நாம் எதை வாங்குவது? என்று நிறைய கேள்விகள் இருக்கும்?

Binocularல் இரண்டு நம்பர் மூலமாக அறியப்படுகிறது. ஒன்று மிக தூரத்தில் இருப்பதை மிக அருகில் காட்டும் திறன் கொண்டது, இரண்டாவது முன்பக்கம் உள்ள லென்ஸ் அளவை (Diameter) குறிக்கும்.

எடுத்துக்காட்டு : 7 x 35 Binocular

இதில் 7 என்ற எண்   Binocularரின் திறனை குறிக்கும்(X-Magnification Power). அதாவது இந்த திறன் கொண்ட Binocular மூலம் ஒரு பொருளை பார்க்கும்பொழுது அந்த பொருள் 7 மடங்கு அருகில் தெரியும்.

ஒரு பறவை 350 yards  தூரத்தில் இருப்பதாக வைத்து கொள்வோம். இந்த 7 x 35 Binocular மூலம் பார்க்கும்பொழுது அந்த பறவை 50 yards ( 350 / 7 ) தூரத்தில் இருப்பது போல நன்றாக தெரியும். அதாவது ஏழு மடங்கு அருகில் தெரியும்.

அப்பொழுது அதிக திறன் கொண்ட Binocular மூலம் ஒரு பொருள் மிக மிக அருகில் இருப்பது போல் தோன்றுமா என்ற கேள்வி எழும்

அவ்வாறு கிடையாது, Binocularதிறன் 10யை தாண்டும்பொழுது நம் கைகளின் சிறு அசைவும் பறவையை தெளிவாக காண்பது சிரமமாக்கிவிடும்.

Binocular 12 X , Binocular 20 X இந்த வகை Binocularரை , Binocular Expertஆல் சரியாக பயன்படுத்த முடியும். பறவை பார்க்க ஆர்ம்பிப்பவர்கள் முதலில் குறைவான எண் உள்ள Binocular பயன்படுத்திவிட்டு பிறக்கு அதிக திறன் உள்ள Binocular பயன்படுத்துவது பலனை தரும்.

இரண்டாவது எண் : 35”  Binocular ( முன்பக்கம் உள்ள ) லென்சின் அளவை குறிக்கும்.

எடுத்துக்காட்டு : 

7 x 35 Binocularல் லென்சின் அளவு 35 mill meters (1.38 inches) இதை பொறுத்துதான் ஒரு Binocular எவ்வளவு வெளிச்சத்தை க்ரகிக்க முடியும் என்பதை தீர்மானிக்கும். ஒரு Binocular அதிக வெளிச்சத்தை கிரகிக்க கூடியதாக இருந்தால், சிறு வெளிச்சத்தில் உள்ள பறவையை கூட மிக பிரகாசமாக காட்டும். 


 முடிவு :

பறவை நோக்குவதற்கு (Bird Watching) என்றால் Binocular 8 X 42 அல்லது 10 X 42 சிறந்தது.


2. நாகணவாய் பறவை (Common Myna)

நாகணவாய் என்று அழைத்து யாருமே பார்த்து இருக்கமாட்டோம்.மைனா என்பதுதான் தமிழ் பெயர் என்ற நினைப்பில் இன்று வரை இருக்கிறோம் ஆனால் இனிமேல் அப்படி இருக்கலாமா? ஆக நாகணவாய் என்பதுதான் மைனா என்று நாம் அழைக்கும் பறவையின் தமிழ் பெயர்.
photo-wikipedia

1.மைனாவில், காடுகளில் வாழும் மைனா, மலைப்ரதேசங்களில் இருக்கும் மைனா நம் வீட்டு அருகே வாழும் மைனா என்று பல வகைகள் உள்ளது.

2.நாம் பொதுவாக பார்க்கும் நாகணவாய் எல்லாவற்றையும் சாப்பிடும், புழு, வெட்டுக்கிளி,மனிதர்கள் உணவுகள் என்று எதையும் விடாது.

3.பெரும்பாலும் ஜோடியாகவே காணப்படும் பறவையான இவை உடல் பழுப்பு நிறத்திலும் கண் அருகே மஞ்சள் திட்டும்,கால் மற்றும் அலகு மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.

4.மனிதர்கள் அருகில் வாழக்கூடிய ஒரு சில பறவைகளில் இவையும் ஒன்று.


                                                -தொடரும்

                                                                      
                                                                      -செழியன்
முதல் பாகம்

http://birdsshadow.blogspot.in/2016/05/1.html
                                                           

உங்கள் கருத்துக்கள் அடுத்த பாகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்:
 

lapwing2010@gmail.com.