Wednesday, 28 September 2016

பறவை நோக்குதல் - தொடர் - 4



குண்டாக இருக்கிறாரே அவர்தான், மாநிறமாக இருப்பவர்தான், மூக்கு சப்பையாக உள்ளவர் தான், குள்ளமாக, கருப்பாக, வெள்ளையாக, உயரமாக, ஒல்லியாக என்று நிறைய தடவை அடையாளங்களை வைத்தே மற்றவரை பற்றி பேசுவோம். நமக்கு ஒருவரின் பெயர் தெரிந்து கொள்வதற்கு இது போல் ஏதாவது ஒரு அடையாளம் சொல்லி மற்றவரிடம் அவரின் பெயரை கேட்ப்போம். இதே போல் தான் நாம் ஒரு பறவையை பற்றி தெரிந்து கொள்வதற்கு அவற்றின்  அலகு, பருமன், நிறம், கால் அமைப்பு, சிறகு அமைப்பு, தரையில் அல்லது மரத்தில் அல்லது நீர்நிலை அருகில் இருந்ததா என்று இவற்றை வைத்து அந்த பறவையை கண்டுபிடித்து விடலாம்.

பறவை நோக்குபவர்கள் அனைவரும் மேல் உள்ளது போல் இருக்கும் அடையாளங்களை வைத்தே பறவைகளை பார்த்தும், புதியவர்களுக்கு கற்றுகொடுத்தும் வருகிறார்கள். அனைத்து பறவைகள் புத்தகமும் இந்த அடையாளங்களை குறித்தே பேசும். பெரும்பாலுமான பறவைகளுக்கு அடையாளங்களே அதன் பெயராக இருக்கும்.

உதாரணம்:

கரண்டி வாயன்(Spoon Bill), மஞ்சள் மூக்கு நாரை(Painted stork), செங்கால் நாரை(White Stork), நாமக் கோழி(Common Coot), நெடுங்கால் உள்ளான்(Black winged Stilt), கொம்பன் ஆந்தை(Indian Eagle Owl), கொண்டலாத்தி(Common Hoopoe), கொண்டைக் குருவி(Red-vented Bulbul)

ஒரு பறவையின் ஆங்கில பெயருக்கும் தமிழ் பெயருக்கும் வித்தியாசம் உள்ளது. அதனால் தமிழ் பெயருடன் ஆங்கில பெயரை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம்.

அதனால்தான் ஒரு பறவையின் பெயர் தெரியவில்லை என்றால் இது போல் ஏதாவது சில அடையாளங்களை பார்த்து குறித்து கொண்டால் அவற்றை வைத்து நாம் பறவை புத்தகத்திலோ அல்லது பறவை நிபுனர்களிடமோ கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மனிதர்கள் போல் கருப்பு, வெள்ளை, மாநிறம் என்று சில நிறத்தோடு பறவைகள் இருப்பதில்லை எண்ணற்ற நிறங்களில் பறவைகள் இன்று உலகில் உள்ளது அதனால் அவற்றை பார்க்கும் பொழுதே நமக்கு அதன் நிறமே பிரகாசமாக தெரியும் அதனால் பல பறவைகளுக்கு நிறத்திலேயே பெயர்கள் உண்டு.

உதாரணம்: 

பச்சைக்கிளி(Parakeet), கருங் கரிச்சான்(Black Drongo), சாம்பல் நாரை(Grey Heron), வெள்ளை அரிவாள் மூக்கன்(Black Headed Ibis), கரும் பருந்து (black eagle), மஞ்சள் சிட்டு(common iora), சாம்பல் கதிர்குருவி(Ashy prinia),கருப்பு வெள்ளை மீன்கொத்தி(Pied kingfisher).

ஆங்கிலத்தில் மஞ்சள் மூக்கு நாரையை வர்ண நாரை(painted stork) என்றே அழைக்கப்படுகிறது. அதாவது இந்த பறவையை பார்க்கும் பொழுது ஓவியமாக வரைந்தது போலவே அதன் நிறங்கள் காணப்படும் அதனால் painted stork.ஆனால் தமிழில் மஞ்சள் மூக்கு நாரை அல்லது சங்குவளை நாரை என்று அழைக்கபடுகிறது.  

பறவையை கிழ்கண்டவாறு நாம் குறிப்பு எடுத்து கொள்ளலாம். இந்த குறிப்புகள் மூலம் சுலபமாக அவற்றின் பெயர், இனம், வாழிடம், உணவு முறை எவை என்று கண்டுபிடித்துவிடலாம்.

1.அலகு / அலகு நிறம் 

2.காலின் அமைப்பு மற்றும் நிறம்

3.வால் அமைப்பு 

4.சிறகுகள் நிறம் 

5.உடல் பருமன் 

6.வாழும் இடங்கள்

7.பறக்கும் முறைகள்  

அலகு:

ஒவ்வொரு பறவைக்கும் அதன் அலகு மற்ற இனப்பறவைகளிடம் இருந்து மாறுபட்டே காணப்படும். அவற்றின் உணவுமுறைக்கு ஏற்ப மிக நீளமாக, நீளமாக, மத்திய தரமாக, சிறியதாக, பருமனாக, வளைந்து, கோணி ஊசி போல் நீண்டு கூர்மையாக என்று அலகுகல் அமைந்திருக்கும்.
நெற்கதிர்கள் அறுக்க-அருவா, மரத்தை வெட்ட-கோடரி, மரத்தை பிளக்க-ரம்பம், காய்கறி வெட்ட-கத்தி, முக சவரம் செய்ய-பிளேட் என்று பொருளின் தன்மைக்கேற்ப கருவிகள் மாறுவது போல்தான் பறவைகளின் இறைகளுக்கேர்ப அதன் அலகுகள் மாறுபடும். 

மனிதர்களுக்கு கைகள் எப்படியோ அதுபோல் பறவைகளுக்கு அதன் அலகே முதன்மை. இறக்கையும், அலகுமே பறவைகளின் சொத்து என்றே சொல்லலாம்.


அலகு மாதிரிகள்:

photo-wikipidia
பறவைகளில் அலகுகள் பல நிறத்தில் காணப்படும் அதனால் நாம் அலகு அமைப்பை மட்டும் குறித்து கொள்ளாமல் அதன் நிறத்தையும் சேர்த்து குறித்து கொள்ள வேண்டும்.

நாகணவாய் (MYNA) அலகின் நிறம்-மஞ்சள் (அலகு சிறியதாக இருக்கும்), 

காகத்தின்(CROW) அலகு நிறம்-கருப்பு (அலகு சிறிது நீண்டு காணப்படும்), 

சங்குவளை நாரையின்(PAINTED STORK) அலகு நிறம்-மஞ்சள் (அலகு மிக மிக நீளமாக இருக்கும்), 

வென்மார்பு மீன் கொத்தி(WHITE THROTED KINGFISHER) அலகின் நிறம்-சிகப்பு (அலகு நீண்டு இருக்கும்), 

சாம்பல் கதிர்க்குருவி(ASHY PRINIYA) அலகின் நிறம்-கருப்பு (அலகு மிக சிறியதாக இருக்கும்)

காலின் அமைப்பு மற்றும் நிறம்:

பறவை நோக்குதலில் ஒரு பகுதியாக நாம் பறவைகளின் கால் அமைப்பு மற்றும் அதன் நிறத்தை பார்த்து குறித்து கொள்ளவேண்டும். பறவைகளின் அலகுகளில் உள்ள வேறுபாடு போலவே அதன் கால்களிலும் வேறுபாடு உள்ளது.

சிட்டு குருவி, புறா போன்ற பறவைகளை விட கழுகு, பருந்து, வல்லுறு, ஆந்தை போன்ற இறைகொல்லி பறவைகளுக்கு கால்களே அதன் உணவை தீர்மானிக்கின்றன. இந்த பறவைகளின் அலகு இரையை உண்ணுவதற்கு ஆனால் அவற்றை பிடிக்க கால்களே மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பிடித்தால்தான் அவற்றை உண்ண முடியும்.

நிறைய தடவை நீங்கள் பார்த்திருப்பீர்கள்- கழுகு எலியை தூக்கி செல்வதும், வல்லுறு சிறு பறவை குட்டிகளை எடுத்து செல்வதும். அதனால் இவ்வகை பறவைகளுக்கு கால்கள் மிக மிக முக்கியம்.மற்ற பறவைகளுக்கு கால்கள் மரத்தில் பற்றி அமர, தரையில் நடக்க, நீரில் நீந்த என்று பயன்படுத்துகிறது.

உழவரான் பறவையால் மரத்தில் பற்றி அமர முடியாது அந்த அளவுக்கு அதன் கால்கள் மிக சிறியதாக இருக்கும். மரங்கொத்தி பறவை தன் கால்களால் மரத்தின் பக்கவாட்டில் நடந்து ஏற முடியும் மற்ற பறவைகளால் முடியாது.

கால் அமைப்பு:

photo-wiki
கால்களில் பறவைகளுக்கு இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. சிட்டு குருவிக்கு சிறியதாகவும், பவளக்கால் உள்ளான் பறவைக்கு மிக நீண்ட கால்களும், வல்லூறுக்கு சிறியதும்/பெரியதுமாக இல்லாமல் இருக்கும் ஆனால் அதன் நகங்கள் மிக மிக கூர்மையாக இருக்கும்.

கால் நிறங்கள்- மஞ்சள், கருப்பு, ஆரஞ்சு, சிகப்பு, வெளிர் நிறம் என்று பல நிறத்தில் கால்கள் இருக்கும் அதனால் அவற்றை குறித்து கொள்ளவேண்டும். 

வால் நீளம் / நிறம்:

புலிகளுக்கு வரிகள் எப்படி ஒன்று போல் இருப்பது இல்லையோ அதே போல்தான் பறவைகளுக்கு வால் சிறியதாக / இரண்டாக பிளந்து / நடுத்தரமாக / நீளமாக /மிக நீளமாக என்று மாறுபட்டே காணப்படும்.

ஈபிடிப்பான் பறவையின் வால் மிக மிக நீளமாக இருக்கும். கரிச்சான் பறவையின் வால் இரண்டாக பிளந்து இருக்கும். தையல் சிட்டின் வால் மேல் நோக்கி இருக்கும். கம்பி வால் தகைவிலான் பறவையின் வால் ஒயர் கம்பி போல் நீளமாக இருக்கும். பறவை நோக்குதலில் நீங்கள் ஆர்வமாக செயல்படும்பொழுது சாதரணமாக பார்ப்பீர்கள்.

பறவை நோக்குதலில் நாம் பறவை வாலின் அமைப்பு, அதன் நீளம் மற்றும் நிறம் ஆகியவற்றையும் குறித்து கொள்ளவேண்டும்.

சிறகுகள் : 

சிறகுகள் பறவைகளின் சொத்து என்றே பார்த்தோம். பறப்பதே பறவைகளுக்கு ஆனந்தத்தை தரும். மனிதர்கள் ஆபத்தில் ஓடுவது போல் எந்த நொடியிலும் அவை தன்னை காப்பாற்றி கொள்ள பறப்பதை முதல் வேலையாக செய்கிறது அந்த அளவுக்கு சிறகுகள் முதன்மையான இடத்தில் உள்ளது.

அனைத்து பறவைகளுக்கும் சிறகுகள் உள்ளது அதில் என்னும் அளவுக்கே பறக்காத பறவைகள் என்றும் சில உள்ளது. உதாரணம்: பெங்குவின், தீக்கோழி.

photo-wikipedia
நடிகர்கள், நடிகைகள்  தலை முடியை வித விதமாக பராமரிப்பார்கள். வழுக்கை தலை உள்ள நடிகர்கள் கூட நடிப்பு என்று வந்தால் விக் வைத்து கொள்கிறார் அந்த விக்கையும் பராமரிக்க வேண்டும் இல்லை என்றால் அவை பொலிவுஇழந்து விடும். பறவைகளும் தன் சிறகுகளை தொடர்ந்து பாரமரித்து வருகிறது அவை தொடர்ந்து பறப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும்.
சிறகுகளை கோதுதல், தண்ணிரில் நனைத்து காயவிடுதல்,சிறு எறும்புகளை சிறகில் அள்ளி போட்டுகொண்டு அதன் மூலம் சிறகுகளை சரி செய்தல் என்று நிறைய வேலைகளை அனைத்து பறவைகளும் செய்கிறது.

பறவைகள் சிறகின் நிறம் அதன் உடம்பின் நிறத்திலும் அல்லது தனியாக சில நிறத்திலும் அல்லது பல வண்ணங்களிலும் என்று அமைந்து இருக்கும். 

பச்சை கிளி, கரிச்சான், தவிட்டு குருவி, காகம், கருஞ்சிட்டு, பச்சை சிட்டு போன்ற பறவைகளுக்கு சிறகின் நிறம் அதன் உடம்பின் நிறத்திலேயே அமைந்து இருக்கும்.

பறவை நோக்குதலில் நாம் ஒரு பறவையின் சிறகின் நிறத்தை குறித்து கொள்ளவேண்டும்.

உடல் அளவு அல்லது பருமன்:

இதற்கும் நாம் மனிதர்களையே உதாரணமாக எடுத்து கொள்வோம்.ஒருவர் குள்ளமாக, உயரமாக, நடுத்தரமான அளவாக இருப்பது போல்தான் பறவைகளின் அளவு.

உலகிலேயே மிக மிக சிறிய பறவை(ஹம்மிங் பறவை), மிக பெரிய பறவை(தீக்கோழி), நடுத்தரமாக(பினதின்னி கழுகு), சாதரணமா (காகம்,கிளி,புறா,நாகணவாய்), மிக சிறியதாக (சாம்பல் கதிர்குருவி,சிட்டு குருவி) என்று பறவைகளின் அளவுகள் உண்டு.

புதிதாக ஒரு பறவையை பார்க்கும் பொழுது நமக்கு தெரிந்த பறவைகளின் அளவுடன் (புறா/ காகம்/ சிட்டு குருவி/ நாகணவாய்(மைனா) இவற்றுடன்) நாம் பார்க்கும் பறவையின் அளவை ஒப்பிட்டு கொள்ளலாம் அல்லது குறித்து கொள்ளலாம்.

வாழும் இடங்கள்:

தரையில், மர உச்சியில், மர பொந்தில், கோவில் கோபுரம் மற்றும் சுவரில், நீர் நிலை அருகில், நீரில், வீட்டின் முற்றத்தில், சிறு மரங்களில், புதர்களில், பாழ் அடைந்த மண்டபத்தில் என்று பறவைகளின் வாழ்விடம் பல விதமாக அமைந்து இருக்கும்.

தரையில் முட்டை இடுபவை
எல்லா பறவைகளும் மரத்தின் மேலேயே வாழாது ஒவ்வொரு பறவைக்கும் வாழிடம் மாறுபடும். உதாரணமாக- மரத்தின் உச்சியில் இருவாச்சி பறவையும் தரையில் செம்போத்தும் தங்கள் வாழிடங்களை அமைத்து கொள்ளும்.

ஆள் காட்டி பறவை தரையில் சிறு பள்ளம் தோண்டி அதில் முட்டைகளை இடும். காகம் மரத்தில் மிக உயரத்தில் கூடு அமைக்காமல் நம் பார்வைக்கு புலப்படும் அளவிலேயே அதன் கூடுகள் இருக்கும்.

சிட்டுகுருவி நம் வீட்டு முற்றத்தில் தன் கூட்டை அமைத்திருப்பதை பார்த்திருப்போம். புறா கோயில் கோபுரங்கள், வீட்டு மாடியில் மற்றும் கட்டடங்களில் அதன் வாழிடம் இருக்கும்.
நாம் பறவைகளை பார்க்கும் பொழுது அவை எந்த இடத்தில் இருந்தது என்று குறிப்பு எடுத்து கொள்ளவேண்டும்

பறக்கும் முறைகள்:

மரத்தில், தரையில் இருந்து பறவைகள் பறக்க போகிறது அதில் என்ன பறக்கும் முறைகள் இருக்கிறது என்று நானும் நினைத்தேன் பிறகு அப்படி இல்லை என்று தெரிந்து கொண்டேன். வண்டியை சாலையில் நாம் நேராக, சிலர் வளைந்து வளைந்து, சிலர் மெதுவாக / வேகமாக,சிலர் நிறுத்தி நிறுத்தி என்று ஓட்டுவதை பார்த்திருப்போம்.

photo-all about birds

photo-all about birds
பறவைகளின் பறக்கும் முறைகளும் இதே போல் நேராக, கீழே மேலே, நின்று நின்று, வேகமாக, கரணம் போட்டு, தாழ்வாகவே, மிக உயரமாக, வட்டம் இட்டு என்று பல நிலையில் இருக்கும்.
நாம் பறவை நோக்கும் பொழுது பறவை பறந்து செல்வதை பார்த்தால் மேலே சொல்வது போல் எந்த நிலையில் பறந்து செல்கிறது என்று குறித்து கொள்ளவேண்டும்
ஆக பறவை நோக்குதலில் முக்கியமாக எல்லோரும் பின்பற்றுவதை சுருக்கமாக மேலே சொல்லியிருக்கிறேன். புதியவர்கள் பறவைகளை பார்க்கும் பொழுது இந்த அடையாளங்களை குறித்து கொண்டால் நமக்கு பெயர் தெரியாத பறவைகளை பற்றி இந்த அடையாளங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

முடிந்தால் பார்த்த பறவையை வரைந்து கொண்டால் கண்டுபிடிக்க மிக உதவியாக இருக்கும்.

                                                                       -தொடரும் 
       

                                                                                 -செழியன் 



உங்கள் கருத்துக்கள் அடுத்த பாகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்: 

lapwing2010@gmail.com

முதல் பாகம்

http://birdsshadow.blogspot.in/2016/05/1.html
இரண்டாம் பாகம்
http://birdsshadow.blogspot.in/2016/06/2.html
மூன்றாம் பாகம்
http://birdsshadow.blogspot.in/2016/07/3.html


 

Monday, 8 August 2016

புத்தகம்-1 "ஊர்ப்புறத்துப் பறவைகள்”



மாதம் இரண்டு காட்டுயிர் மற்றும் பறவைகள் பற்றிய புத்தகத்தை எழுதலாம் என்ற நினைப்பில் ஆரம்பித்துவிட்டேன். ஆங்கிலத்தில் நிறைய புத்தகங்கள் இருந்தாலும் தமிழில் என்னும் அளவுக்கே புத்தகங்கள் வந்திருகிறது.

தமிழில் ஏன் வருவதில்லை என்ற கேள்விக்கு-பறவை நோக்குவது இன்றும் கீழ் நிலை,மத்திய தர மனிதர்களின் செயல்பாடாக இல்லை அவை மேல் நிலை மனிதர்களின் செயலாகவே காணப்படுகிறது அதனால் வரும் புத்தககங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கிறது. 

வெகுஜன மனிதர்கள் விரும்பி படிக்கும் வார இதழ்களில் கூட இதுவரை பறவை மற்றும் காட்டுயிர் பற்றிய கட்டுரையோ,தொடரோ வரவில்லை என்பதுதான் உண்மை. தமிழ் இந்து தின பத்திரிகையில் சனிகிழமை தோறும் உயிர்மூச்சு என்ற தலைப்பில் காட்டுயிர், பறவை, விலங்கு என்று பலதர பட்டு கட்டுரைகள் வருவது மட்டுமே ஆறுதல் தரக்கூடிய விஷயமாக உள்ளது.

மிக சிறந்த காட்டுயிர் எழுத்தாளரான திடோர் பாஸ்கரன் அவர்கள் கூட அதிகமாக காட்டுயிர் பற்றி கட்டுரைகளை சிறு பத்திரிகையான உயிர்மையில் தான் எழுதி உள்ளார். அதனால் குறைந்த அளவே தமிழில் காட்டுயிர் சம்பந்தமாக புத்தகங்கள் வந்திருக்கிறது. இதில் மிக முக்கியமாக எதை கவனிக்க வேண்டும் என்றால்-வந்திருக்கும் குறைவான புத்தகங்கங்கள் கூட நம் மக்கள் வாங்கவில்லை என்பதுதான் நிதர்சனம். இவையும் குறைந்து அளவு புத்தகங்கள் வருவதற்கான காரணமும் ஆகும். 

அதனால் இதுவரை வந்த புத்தகத்தை பற்றி அடுத்து ஆறு மாதம், மாதம் இரண்டு கட்டுரையாக (குறுந்தொடராக) தொடர்ச்சியாக பார்ப்போம்.

முதல் புத்தகமாக நம் ஊர் புறத்தில் இருக்கும் பறவைகளை பற்றி சொல்லும் மிக முக்கியமான புத்தகத்தில் இருந்து தொடரை ஆரம்பிப்போம்.

புத்தகத்தின் பெயரே அழகாக உள்ளது மற்றும் என்ன மாதிரியான புத்தகம் இது என்றும் தலைப்பு தெரிவித்துவிடுகிறது. ”ஊர்ப்புறத்துப் பறவைகள்” ஆசிரியர் கோவை சதாசிவம் அவர்கள்.

ஒரு மாலை பொழுதில் இந்நூலை நீங்கள் வாசித்துக்கொண்டு இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்ற ஒரு வரி புத்தகத்தின் தொடக்கத்தில் வராமல் புத்தகத்தின் முடிவில் வருவது அமர்களமான வரியாகவே தெரிகிறது.

புத்தகத்தை மாலையில் வாசியுங்கள் என்று நம்மை கட்டாயபடுத்தாமல் கடைசியில் அந்த வரியை எழுதயுள்ளார். வாசிக்கும்பொழுது உண்மையாகவே அப்பொழுது மாலையாக இருந்தால் ஆசிரியருடன் சேர்ந்து நமக்கும் மகிழ்ச்சியை தந்திருக்கும். நான் வாசிக்கும்பொழுது மாலை கடந்துவிட்டது, இரவில் வாசித்து முடித்தேன். ஏனென்றால் கடைசியில் தானே அந்த வரி நம் கண்ணில்படுகிறது.

மொத்தம் இருபத்து ஐந்து பறவைகளை பற்றி படிக்க போரடிக்காமல் எழுதி சென்றுள்ளார். பறவைகள் படங்களுடன் கட்டுரைகள் இருப்பது படித்த உடன் சுலபமாக நினைவில் வைத்துகொள்ள முடிகிறது. 

ஆரம்ப பறவையாக தையல் சிட்டு நம்மை அழைக்கிறது. மாணவர் ஆசிரியர் இடையே நிகழும் உரையாடலாக அவற்றை எழுதியுள்ளது கதை படிப்பது போல் சுவாரசியமாக செல்கிறது. பெரும்பாலும் பறவைகளுக்கு அதன் பண்பை கொண்ட பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார்.

நம் ஊரை சுற்றி இருக்கும் பறவைகளை ஒருசேர படிப்பதற்கும் மற்றும் புதிதாக பறவை நோக்குபவர்கள் இந்த புத்தகத்தில் இருந்து தொடங்குவது சிறந்ததாக இருக்கும் என்பது என் நினைப்பு. நம் ஊரை சுற்றி இருக்கும் பறவைகள் பற்றி தெரிந்து கொள்ளாமல் காடு, மலை பகுதிகளில் சென்று பார்ப்பது இருப்பதை விட்டு பறக்க ஆரம்பிப்பதுபோல் இருக்கும்.
சீன பிதாமகன் மாசேதுங் சிட்டுக்குருவிகள் தம் அரசாங்கத்தால் அழித்த பிறகு கடைசியில் ஒரு சிட்டு குருவிகள் கூட இல்லை என்ற நிலை வந்த பிறகு ஆதங்க படுகிறார் அதாவது கடைசி பறவை அழிந்த பிறகே மாசேதுங்கு கவலை படுகிறார்.

ஊதாதேன்சிட்டின் குரல் 100 மீட்டர் வரை கேட்கும் என்ற தகவல் ஆச்சரியம் தருகிறது.ஒரு பறவைக்கு பல பெயர்கள் இருப்பதையும் பெரும்பாலும் அந்த பெயர்களையும் சேர்த்தே தருகிறார் ஆசிரியர்.

ஒரு ஆச்சரியமான செய்தியாக பறவைகளிலேயே மரங்கொத்திகளுக்குத்தான் நீளமான நாக்கு உள்ளதாக குறிப்பிடுகிறார். சிறிய புத்தகம் என்றாலும் நிறைய தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
  
செம்பகம் பறவை பற்றிய கட்டுரையில் வலசை பறவைக்கும், அதிகம் துரம் பறக்காத தரையில் கூடு கட்டி வாழும் பறவையான செம்பகம் பறவையை பற்றி குறிப்பிட்டுள்ளார். ஏன் பறவைகளில் இத்தனை வேறுபாடு என்பதற்கு - ஒரு சில பறவைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் பறந்து செல்கிறது சில பறவைகள் பக்கத்து ஊருக்கு கூட செல்வதில்லை என்பதற்கு விளக்கம் இப்படி எழுதியுள்ளார் அதிக பறப்புத் திறன் கொண்ட பறவைகள் தான் உலகைச் சுற்றி வலசை வருகின்றன என்ற வரி உண்மை.

வெளிச்சம் பதிப்பகம்  ஊர்ப்புறத்துப் பறவைகள் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய பறவைகள் என்பதால் கண்டிப்பாக படிக்கவும்.

பதிப்பகம்:

வெளிச்சம் வெளியிடு 

1447, அவினாசி சாலை

பீளமேடு, கோயம்புத்தூர்-641004

Mobile-98947 77291


Rs-80/

                                                                                                                                                                        -செழியன் 

Wednesday, 3 August 2016

பெரும்பாக்கம் ஏரி

என்னது சென்னையில் ஏரியா என்று நானும்தாங்க யோசித்தேன்? இன்றுதான் சென்னை நீண்டு ஸ்ரீபெரும்பத்தூர், செங்கல்பட்டு,மாமல்லபுரம் என்று நான் வளர்கிறேனே மம்மி என்று வளர்ந்து விட்டதே. அதனால் பெரும்பாக்கம் இதற்குள்ளேயே அடங்கிவிட்டது. பழைய மகாபலிபுரம் சாலை தொடங்கும் இடமான மத்திய கைலாஷ் சாலையில் காலை 6.30மணிக்கு வண்டியை திருப்பினேன்.

முதல் டோல் கேட் தாண்டி வலது பக்கம் திரும்பினால் பள்ளிகரணை சதுப்புநிலம் ஆனால் திரும்பாதீர்கள் நேராகவே செல்லுங்கள்.ஒரே நேர் சாலை, போய்கொண்டே இருக்க வேண்டும் சோழிங்கநல்லூர் நாலு முனை ஜங்ஷன் வரை போனால் போதும். அது எனக்கு தெரியாது நான் அதையும் தாண்டி சென்று கொண்டிருந்தேன் கேளம்பாக்கம் வந்தது என்னுடன் வருபவர் அப்போதுதான் யோசிக்கிறார் இந்த பக்கம் வந்தது போல் இல்லையே என்று சொல்கிறார். என்ன சொல்கிறிர்கள் யாரிடமாவது கேளுங்கள் நீங்கள் தான் ஏற்கனவே வந்துள்ளிர்கள் என்ற பிறகு அந்த பக்கம் போனவரை நிறுத்தி பெரும்பாகாம் ஏரி போகவேண்டும் என்றதற்கு வந்த வழியே சென்று சோழிங்கநல்லூர் நாலுமுனை இடது புறம் திரும்புங்கள் என்று சொன்னவரின் வார்த்தையை மீறாமல் சென்று இடது புறம் திரும்பிய உடனேயே வாபா வா  இங்கே திரும்பாமல் எங்கே நேராக சென்று கொண்டிருகிறாய் என்று அங்கிருந்த நீர்காகம் என்னை கேட்பது போல் இருந்தது.

மத்திய கைலாஷ்ல் இருந்து வருபவர்கள் சோழிங்கநல்லூர் நாலுமுனை ஜங்ஷன் வந்தவுடன் வலது புறம் திரும்பினால் போதும் (கிழக்கு தாம்பரம் செல்லும் சாலை).இங்கேயும் பள்ளிகரணை சதுப்புநிலம் என்ற பெயர் பலகை தான் உள்ளது ஏன் என்று தெரியவில்லை.பள்ளிகரணை டோல் கேட் போல் இங்கேயும் ஒரு டோல் கேட் உள்ளது.வலதுபுறம், சமீபத்தில் பெய்த மழையால் முழு தண்ணீருடன் ஏரி நிரம்பியும், ஒரு நேர் கோடு போட்டது போல் ஏரி நீண்டும் இருக்கிறது.

நீர் காகங்கள்
ஏரியின் தொடக்கத்திலேய புள்ளி மூக்கு வாத்து ( SPOT- BILLED DUCK) கண்ணில் பட்டதால் வண்டியில் இருந்து இறங்கிவிட்டேன்.புள்ளி மூக்கு வாத்துடன் சீழ்க்கைச் சிறகியும்(LESSER WHISTLING DUCK) நிறைய காணப்பட்டது.இரண்டு சிவப்பு மூக்கு ஆட் காட்டி(RED WATTLED LAPWING) பறவை நடந்து கொண்டிருந்தது.கரையோரமே நீலத் தாழை கோழி(PURPLE SWAMPHEN) ஒன்று கரையில் இருப்பவர்களை பற்றி கவலை படாமல் இறை தேடி கொண்டிருந்தது.

நீர் அதிகமாக இருப்பதால் பச்சை பசல் திட்டுகள் நீரில் மூழ்கி உள்ளது அதனால்  பறவைகள் இறை தேட வசதிகள் குறைவாகவே இருக்கிறது.மஞ்சள் மூக்கு நாரையை இதுவரை நான் பள்ளிக்கரணையில் பார்த்தது இல்லை ஆனால்  பெரும்பாகத்தில் காணப்படுகிறது.

பள்ளிக்கரணை மற்றும் பெரும்பாக்கம் இவ்இரண்டு இடங்களிலும் வண்டிகளின் சத்தம் அதிகமாக உள்ளது. அமைதியான இடங்களில் வாழ்வை நடத்தும் இப்பறவைகள் இங்கு ஏற்படும் சத்தத்திற்கு பழகிவிட்டது போலவே தெரிகிறது. வேடந்தாங்கல் இதற்கு நேர் எதிர், முழு அமைதியாக இருக்கும். அங்கு பறவைகளின் சத்தத்தின் இடையிலேயே நாம் இருக்கவேண்டும்.


ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கு மேல் பறவைகளை அவதானித்து, தெரியாத பறவைகளை கொண்டுசென்ற பறவைகளின் புத்தகத்தின் உதவியோட தெரிந்து கொண்டு அப்பொழுதே குறிப்பும் எடுத்துவிட்டேன்.

பெரும்பாகத்தில் பார்த்த பறவைகள்:

1.புள்ளி மூக்கு வாத்துகள் (Spot-Billed Duck)

2.சீழ்க்கைச் சிறகி –இவையும் வாத்துதான் (Lesser Whistling Duck)

3.சீழ்க்கைச் சிறகி குட்டிகள் (Chick of Lesser Whistling Duck)
 
4.நீலத் தாழை கோழி (Purple Swamp Hen)-அருகில் மூன்று குட்டிகள் இருந்தது 

5.சிறிய நீர் காகம் (Little Cormorant)

6.சாம்பல் நாரை (Grey Heron)

7.மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork)

8.மடையான் (Pond Heron)

9.சிறிய கொக்கு (Little Egret)
 
10. செந்நாரை (Purple Heron)

11.நாமக்கோழி (Coot)

12.நடுத்தர கொக்கு (Intermediate Egret)

13.சிவப்பு ஆட் காட்டி (Red Wattled Lapwing)

14.கூழைக்கடா (Pelican)

15.கரண்டி வாயன் (Spoon Bill)

16.கருப்பு வெள்ளை மீன் கொத்தி (Pied KingFisher)

17.பவள கால் உள்ளான் (Black Winged Stilt)

18.தாழைக் கோழி (Common Moorhen)

19.சாம்பல் கதிர் குருவி (Ashy Prinia)

20.பச்சைக்கிளி (Parakeet)

21.அன்றில் (Black Ibis or Glossy IBIS)

பறவைகளை பார்பதற்க்கா என்று தெரியவில்லை ஆனால் சுலபமாக நின்று பார்பதற்கு சாலை ஓரமாக நடை மேடை அமைத்து இருக்கிறார்கள்.

இரண்டு மஞ்சள் மூக்கு நாரைகள் அடுத்த கரையோரம் இறை தேடி கொண்டிருந்ததை பைனாகுலர் வழியாக பார்த்தப்பொழுது தெரிந்தது. நாரை சிறுது நகர்ந்தாலே பக்கத்தில் இருக்கும் அடுக்கு மாடி வீட்டுக்குள் தான் போகவேண்டி வரும் அந்த அளவுக்கு கட்டிடங்கள் ஏரிக்குள்ளே வர ஆரம்பித்துவிட்டது பக்கத்திலேயே  நடுத்தர கொக்கும் இருந்தது.


கரண்டிவாயன் பறவைகள் நிறைய தெற்கு பகுதியில் நின்று கொண்டும் அதன் அருகில் நடுத்தர கொக்கும் இருப்பதை பார்க்க முடிந்தது. சாம்பல் நாரை ஒன்று தனியாக நின்று கொண்டிருந்தது. எங்கிருதோ ஒரு மஞ்சள் மூக்கு நாரை பறந்து வந்து அதன் மிக அருகில் வந்து நின்றது சாம்பல் நாரை எந்த வித சலனமும் இல்லாமல் வரியா வா என்பது போலவே காணப்பட்டது.

அப்பொழுது இவைதான் நினைவுக்கு வந்தது மணப்பாக்கம் பாலத்தின் கீழே மடையான் ஒன்று அசயாமல் நின்று இருந்தது அதன் அருகில் நிறைய காகங்கள் அவற்றை தொந்தரவு செய்வது போல் வருவதும் செல்வதும்ஆக இருந்தாலும் எந்தவித சலனமும் அதனிடம் இல்லை நானும் நிறைய நேரம் பார்துகொண்டிருதேன் ம் அப்படியே இருந்தது.

மீண்டும் பெரும்பாக்கத்திற்கு வருவோம் 

சிகப்பு ஆட் காட்டி பறவை எந்த இடையூறும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது. இரண்டு பறவைக்கு மேல் காணப்படவில்லை. பறவைகளை படம் எடுக்க நான்கு பேர் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். பறவை நோக்குபவர்கள் என்றால் எங்களை தவிர வேறு யாரும் இல்லை.

ஏரிய்யை சுற்றி கட்டிடங்கள்
முதல் வருடம் காலேஜ் படிக்கும் மாணவர் ஒருவர் தனியாக பறவைகளை படம் எடுத்து கொண்டிருந்தார் அவரிடம் பேச்சு கொடுத்தபோது புதியதாக CANON 700D வாங்கியதாக சொன்னவர் இங்கு இருக்கும் ஒரு பறவையின் பெயர் கூட தெரியவில்லை என்ற உண்மையை சொன்னார் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை அதான். எப்படி பெயர் தெரிந்து கொள்வது என்று அவருடைய கேள்விக்கு சில அடிப்படை தகவல்களை அளித்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.  

பூ நாரை பள்ளிகரனைக்கு வந்து உள்ளது என்ற தகவலால் அப்படியே பள்ளிகரனையும் எட்டி பார்ப்போமே என்று சென்றேன். அங்கு சென்றால் நிறைய பவள கால் உள்ளான்கள் காகத்துடன் சண்டை போட்டு கொண்டிருந்தது. பூ நாரைகள் இருபதுக்கு மேல் இருந்தது மற்றும் தன் குட்டிகளுடன் புள்ளி முக்கு வாத்து நீந்தி கொண்டிருந்த காட்சி ஒரு சேர பார்க்க முடிந்தது.

பள்ளிக்கரனையில் பார்த்த பறவைகள் :
பூ நாரைகள் (Lesser Flamingo)

நீலவால் இலைக் கோழி (Pheasant Tailed Jacana)
 
வெள்ளை அரிவாள் மூக்கன் (White IBIS)

பவள கால் உள்ளான் (Black Winged Stilt )

சாம்பல் நாரை (Purple Heron)

உண்ணிக் கொக்கு (Cattle Egret)

கருப்பு அரிவாள் மூக்கன் (Glossy IBIS or Black Ibis)

மடையான் (Pond Heron)

கூழைக்கடா (Pelican)

உண்ணிக் கொக்குக்கு இனபெருக்க காலம் என்பதால் நிறைய கொக்கின் வண்ணம் ஆரஞ் கலர் துவி விட்டது போல் இருந்தது. அமைதியாகவும் கூட்டமாகவும் நின்று கொண்டிருந்தது.பவள கால் உள்ளாங்களை தவிர மற்ற பறவைகள் ஒருவித தியான நிலையிலேயே காணப்பட்டது. அன்றில் பறவையை கருப்பு அரிவாள் மூக்கன் என்றும் தமிழில் அழைக்கப்படுகிறது அதேபோல் பவள கால் உள்ளானை நெடுங்கால் உள்ளான் என்றும் பெயர் உள்ளது.

வண்டியை யு டேர்ன் போட்டு குப்பைகளை கொட்டும் சதுப்புநிலத்தில் பார்வையை செலுத்தினேன்.முதலிலேயே நிறைய தாழை கோழிகள் இருந்தது மற்றும் பைனாகுலர் கொண்டு பார்த்த பொழுது நீலவால் இலைக்கோழி நான்கு தென்பட்டது அவற்றில் மூன்று பறந்து சென்றதில் ஒன்று மட்டும் நீரில் தொடர்ச்சியாக அலகை நுழைப்பதும் எடுப்பதும்மாக இருந்தது.

மூன்று இலைக் கோழி பறந்து சென்றது போல் விடு ஜுட் என்று நானும் அங்கிருந்து பறந்துவிட்டேன்.   
                                              
                                                                                                                                                                              -செழியன்