Thursday, 5 July 2018

மலையேறும் மலைநாடன்


நீலகிரி, குன்னூர் மலைகளின் நடுவில், வாழ்கை மட்டும் இல்லாமல், மலைகள் மீது தீராத காதலும் கொண்டுள்ளதால் மலைநாடன் என்ற பெயர் இவருடன் இணைந்துகொண்டது. எழுத்தாளர்களுக்கு Pen Name என்று எப்படி உள்ளதோ, அதேபோல் இயற்கையாலர்களுக்கு Nature name என்று கூட இதனை சொல்லலாம். இயற்கையாலர்கள் Nature name ஒன்றை வைத்து கொள்ளவேண்டும்.

ஒரு காலைப்பொழுதில்  மலைநாடனை சந்தித்தபொழுது உற்சாகமாக வரவேற்றார். அவரிடம் பேசியதில் நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாக மலைகள் தொடர்பாக ஒன்றுமே எனக்கு தெரியாது. இப்பொழுது கொஞ்சம் தெரியும் என்று சொல்லுவேன்.
 
மலைநாடனுக்கு, மலை ஏறுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளதால், எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு மலைகள் இருந்தால், ஏறிவிடுவதை பழக்கமாகவே கொண்டிருக்கிறார். எங்க ஊர் மலையை நான் ஏறவேண்டும் என்று பல வருடங்களாக நினைத்து கொண்டிருந்தபொழுது, பேச்சின் இடையில் சாதாரணமாக சொல்கிறார் உங்கள் ஊர் மலையும் ஏறியுள்ளேன் என்று. இன்னும் நான் ஏறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


மலைகள் ஏறுவது மட்டும் இல்லாமல் கிரீன் க்ரூப்ஸ்(Green Groups) என்ற அமைப்பை நடத்துகிறார். இதன் மூலம் விலங்குகளை வேடையாடுபவர்களை தடுக்கும் மிக பெரிய வேலையை செய்துவருகிறார். நீலகிரி போன்ற மலை பகுதிகளில் விலங்குகள் வேட்டையாடபடுவது அவற்றின் அழிவுக்கு மிக முக்கியகாரனமாக இருப்பதை அறிந்து, பல வருடங்களாக அங்கு சென்று மக்களிடம் தொடர்ந்து வேட்டையாடுவதால் ஏற்படும் பாதிப்புகளை சொல்லி தடுத்து உள்ளார்.  

சொல்லியும் கேட்காத மனிதர்களிடம், இப்படி தொடர்ந்து செய்து வந்தால் அரசாங்கத்திடம் சொல்லிவிடுவேன் என்று கொஞ்சம் ஒரு படி சென்று எச்சரிப்பதால் அதற்கு நல்ல பலன் இருப்பதை அனுபவத்தில் உணர்ந்து உள்ளதை விவரித்து சொன்னார். கடந்த இருபதுவருடத்தில் எந்த விலங்குகள் எல்லாம் குறைந்து உள்ளது என்று கேட்டதற்கு? செம்மான் (Barking Deer), முயல், காட்டுக் கோழி, மான், முள்ளம்பன்றி, காட்டு மாடு போன்ற விலங்குகள், பெருமளவு குறைந்து உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வேட்டையாடுதல். விலங்குகளை வேட்டையாடுவது சட்டபடி குற்றம் என்றாலும் கள்ள வேட்டை தொடர்ந்து கொண்டே உள்ளது.

மலைநாடன்
மற்றொரு காரணம் விலங்குகளின் வாழிட அழிப்பு. கடந்த பத்து வருடங்களாக குன்னூர்- ஊரின் நடுவே காட்டு மாடு, சாதரணமாக சுற்றி வருவதை பார்க்கமுடிகிறது. 1990-1999 இந்த காலகட்டத்தில் இதுபோல் பார்க்கமுடியாது. அதேபோல் சிறுத்தை, புலி போன்ற காட்டு விலங்குகள் மனிதர்கள் வளர்க்கும் கால்நடைகளை அடிக்கிறது என்ற செய்தி தவறாமல் படிக்கும் நிலைக்கு வந்துள்ளோம். பொதுவாக எந்த காட்டு விலங்கும் மனிதர்களையோ அல்லது வளர்ப்பு விலங்குகளை அடிக்காது. அவற்றின் வாழிடத்தை வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கிறோம், அவை வேறு எங்கு செல்லும்? நாம் குடி இருக்கும் இடத்திற்கு தான் வரும்.

காடு அழிப்பு விலங்குகளுக்கு மட்டும் பாதிப்பில்லை, மனிதர்களுக்கும் சேர்த்தே ஆகும். காடு அழிப்பால் மழையின் அளவு வருடம்தோறும் குறைந்துவருகிறது. இன்று காவிரி நீர் காவிரி நீர் என்று பேசுகிறோம் அவை எங்கோ இருந்து வருவதில்லை, மலைகளில் ஊற்று போல் உருவாக்கி தரையை நோக்கி வந்து அவை பல வழிகளில் பயணித்து தமிழ்நாட்டிற்குள் ஓடி வருகிறது. மலையை, வளர்ச்சிக்காக வெட்டுவது, பாதை அமைப்பது, உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைப்பது, போன்றவற்றால் காட்டின் தன்மை சிதைந்துவிடுகிறது.

காட்டு விலங்குகளை பார்க்கச் செல்லும்பொழுது, அனுபவம் உள்ள மனிதர்களுடன் செல்வது சிறந்ததாகும். உறுதியாக ஒன்றை நினைத்து கொள்ளவேண்டும். நாம் தான் அதன் இடத்திற்கு செல்கிறோம். அதனால் அவற்றுக்கு எந்த வித தொந்தரவும் இல்லாமல் செயல்படவேண்டும். டூரிஸ்ட் செல்பவர்களில் பலர், தவறான செயல்கள் செய்வதால், மனிதன் vs விலங்கு மோதல் ஏற்படுகிறது. 

புலி, சிறுத்தை, யானை போன்ற விலங்குகள்தான் ஆபத்து என்று நினைத்து விட கூடாது. காட்டு மாடு, தன் குட்டியுடன் இருக்கும்பொழுது அதன் அருகே செல்லக் கூடாது. மிக வீரியமாக தாக்கும். சமிபத்தில் சுற்றுலா சென்ற ஒருவர், தாக்கப்பட்டு இறந்துள்ளார். அதனால் காட்டில் மிகுந்த விழிப்புனர்வுடன் இருக்கவேண்டும்.


காட்டுத் தீ 

சமீபத்தில் காட்டு தீ பற்றியை செய்திகளை கடந்து வந்தோம். குறிப்பாக குரங்கணி மலை தீவிபத்து, பெரும் அளவில் உயிர் சேதம் உருவாக்கிவிட்டது. உண்மையில் 99 சதவிகித காட்டு தீ, செயற்கையாக மனிதர்களால் உருவாக்கபடுவதே. வேகமான காற்று வீசி அதில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி ஏற்படும் கட்டுத் தீ மிக அபூர்வம்.

காட்டுத் தீ ஏற்படும் மாதங்கள் என்று பார்த்தல், பெப்ரவரி முதல் மே மாதம் வரை கோடை காலம் என்பதால் மலை மேல் இருக்கும் புற்கள் எல்லாம் காயிந்து இருக்கும். இந்த மாதங்களில் சிறு நெருப்பு போதும் முழு மலையும் எரிவதற்கு.

எப்படி தீ உருவாகுகிறது:

அ) ஆடு, மாடு மேய்பவர்கள், புதிய புல் தேவை என்பதால் நெருப்பு வைப்பார்கள்.

ஆ) மழைக்காக, மூட நம்பிக்கையில் நெருப்பு வைப்பார்கள். இதன் காரணம் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். கோடையில் மழை இல்லாததால், மலையை எரித்தால் அதனால் உண்டாகும் ஆவி, மேலே சென்று, மேகம் கருத்து, மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் மலைக்கு தீ வைப்பவர்கள் இன்றும் உண்டு.

இ) சுற்றுலா வருபவர்கள் வீசும் சிகரெட் துண்டின் நெருப்பு, பல காட்டுத் தீயை ஏற்படுத்தி உள்ளது. நாம் வீசும் சிகரெட் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்ற புரிதல் இல்லாமல் செய்வதால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கிறது.

தீ வைப்பதை தடுக்க பிரச்சாரம் :

மலைகளில் தீ வைக்காமல் இருப்பதற்க்காக அங்கு உள்ள மனிதர்களுக்கு தொடர்ந்து பிரச்சாரம் செய்ததின் விளைவு ஊட்டி-பக்காசூரன் மலை, குறிஞ்சி மலை போன்ற மலை பகுதிகளில் கடந்த இரண்டு வருடமாக தீ வைக்கப்படவில்லை. மக்களும் விழிப்புணர்வுடன் செயல்படுகிறார்கள்.


மலையேறுதல், பழங்குடிகளுடன் தங்குதல்:
மலையேறுவது, சிறு வயதில் இருந்தே என்னுடன் தொடர்வதால், மிக மகிழ்ச்சியாக இன்றும் அதனை செய்துவருகிறேன். நிறைய பேருக்கு ஆர்வம் இருக்கும் ஆனால் மலை ஏறுவதில் அனுபவம் இருக்காது. இதனை கவனித்து மலைநாடான் மலையேறுதல் & இயற்கை சுற்றுலா (Malainadan Trekking & Nature Tours) என்ற அமைப்பை தொடங்கி நடத்திவருகிறேன். இதன் மூலம் முறையான அனுமதி பெற்று மலையேறுதல், பழங்குடி மக்களுடன் தங்கி அவர்களின் உணவுகளை உண்டு, இயற்கையை ரசித்தல், பழங்குடிகளின் இசையை கேட்டல், இயற்கைக்கு மிக அருகில் வாழ்ந்துபார்த்து வரலாம்.


சமிபத்தில் கூட “வேர்களைத் தேடி” என்ற மலை பயணத்திற்க்கு சென்று வந்தோம். பழங்குடி மக்களின் உணவுகளை உண்டு, மலையில் நடை செய்து, இயற்கை பாதுகாப்பு வகுப்பு என்று வந்திருந்த அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். இதனை பொருள் சம்பாதிக்க செய்யவில்லை. வேர்களைத் தேடி என்ற இரண்டு நாள் பயணத்திற்கு 1500ரூபாய் மட்டுமே.

மருத்துவம் இன்று நிறைய மாறுதல்களை அடைந்து உள்ளது. ஆனால் இவை எதுவும் பழங்குடி மக்களுக்கு பரிச்சியம் இல்லை. இன்று இயற்கை மருத்துவத்தின் உதவியால் தங்கள் நோய்களை குணமாகி கொள்கிறார்கள். அடி பட்டால், ஒரு மாரத்தின் பட்டையை அடிபட்ட இடத்தில கட்டி விடுகிறார்கள், சீக்கிரத்தில் அவை குணமாகி விடுகிறது. 

செய்கையிலிருந்து- இயற்கை உணவு, இயற்கை மருத்தவம் என்று நாடி நாம் இப்பொழுது செல்கிறோம். ஆனால் அவர்களின் வாழ்கை ஆரம்பம் முதல் இறப்பு வரை இயற்கையுடனேயே இருப்பதால் எந்த செயற்கைதனமும் தேவைப்படவில்லை. அதனால் முழுமையான வாழ்கையை வாழ்கிறார்கள். நீர் மேலாண்மையிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

காட்டு பயணம், மலையேறுதல் போன்ற பயணத்திற்கு வருபவர்கள் சில பொருட்களை எடுத்து வராமல் இருந்தால் போதும். குறிப்பாக தீ பெட்டி, சிகரெட், ஆல்ககால், பிளாஸ்டிக் பைகள், சாக்லேட் கவர் போன்றவற்றை தவிர்த்தால், காடு அதன் தன்மையில் இருக்கும். அதனால் அங்கு இருக்கும் உயிரிணங்களுக்கும் எந்த ஆபத்தும் இல்லை.

காட்டில், பிளாஸ்டிக் பொருட்கள் போடுவதால் அவற்றை உண்ணும் விலங்குகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது. உதாரணமாக-இறந்த ஓர் யானையின் வயிற்றில் இருந்து மூன்று கிலோ பிளாஸ்டிக் பைகள் எடுக்கப்பட்டன. இன்று ஊட்டியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் பிளாஸ்டிக்கு தடை விதிக்க போவதாக அறிவித்துள்ளது. நீங்களும் காடுகளுக்கு செல்லும்பொழுது இது போன்ற பொருட்களை எடுத்து செல்லாதீர்கள்.

மலையேறுதல், காடுகளுக்கு செல்லுதல் போன்றவற்றுக்கு அனுபவம் உள்ள நல்ல வழிகாட்டி தேவை. அவர்கள் மட்டுமே காட்டின் தன்மையை உணர்ந்து இருப்பார்கள். வழிகாட்டிகள் இல்லாமல் சென்றால் கடலில் வழி தெரியாமல் செல்வது போல் பயணம் சென்று முடியும். போன வழிலேயே திரும்பி வர இவர்களின் உதவிகள் தேவைப்படும். இல்லையென்றால் திரும்ப-திரும்ப ஒரே இடத்திலேயே சுற்றி வந்து கொண்டிருப்பதற்கு வாய்ப்பு உண்டு. 

இந்த மாதங்களை தவிர்த்துவிடுங்கள் :

நாங்கள் செல்லும்பொழுது உள்ளூர் மனிதர்களின் உதவியை பெற்றுக்கொள்வோம். மலையேற சென்றால் பெப்ரவரி முதல் மே மாதம் வரை தவிர்த்து விடுங்கள். மற்றும் காட்டில் யானைகள் இடம் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். புலி, சிறுத்தை கூச்ச சுபாவம் உடையவை. மனிதர்களை கண்டால் அவை ஒளிந்து கொள்ளும். ஆனால் யானைகள் அப்படி இல்லை. மற்ற விலங்குகளிடம் மனிதனுக்கு ஏற்படும் மோதலை விட யானை vs மனிதன் மோதல் அதிகமாக நடைப்பெறும். மீண்டும் நாம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். நாம் தான் அவற்றின் இடங்களுக்கு செல்கிறோம். அதனால் விலங்குகளுக்கு, பறவைகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாதவாறு நடந்து கொள்ளவேண்டும்

இதுவரை 200 முறைக்கு மேல் மலையேறி உள்ளேன். சென்னைக்கு வந்து பன்னிரண்டு வருடம் ஆகிறது. இயற்கையுடன் பிறந்து, வளர்ந்து வந்ததால், சென்னையில் எதோ ஒரு குறை இருந்து கொண்டே இருந்தது. மீண்டும் குன்னூர்க்கே செல்ல முடிவு செய்து, பிள்ளைகளை அங்கு உள்ள பள்ளியில் இந்த வருடம்(2018) சேர்த்து விட்டதில் மகிழ்ச்சியாக உள்ளேன். இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்களில் நானும் அங்கு சென்று, மலைகளுடன் ஐக்கியமாகிவிடுவேன்.

ஊட்டியில், மலையேறுதல் அமைப்பை நடத்த முடிவு செய்துள்ளேன். காடு, மலை, இயற்கையை சுற்றி பார்பவர்களுக்கு என்னால் முடிந்ததை செய்து கொண்டே இருப்பதில் ஏற்ப்படும் மகிழ்ச்சி, அலாதியானது.

வாருங்கள் குன்னூர், ஊட்டியில் சந்திப்போம். உங்களுக்கு வழிகாட்ட தயாராக உள்ளேன். 

-செழியன்.ஜா
படங்கள்- மலைநாடன் முகநூல் 



4 comments:

  1. வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு

    ReplyDelete
  2. அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  3. படிக்க படிக்க நல்ல அனுபவமான பதிவு

    ReplyDelete