Tuesday, 14 August 2018

அவல நிலையில் பறவைகள்....


வாழிட அழிப்பால், எந்த அளவுக்கு பறவைகளை பாதிக்கிறது என்பதை நிறைய கட்டுரைகளில் படித்துள்ளேன். ஆனால் அந்த அவல  நிலையை நேரடியாக பார்த்தபிறகு, பறவைகளை பிச்சை எடுக்க விட்டுள்ளார்கள் இன்றய நாகரீக மனிதர்கள்.

ஒரு காலைப்பொழுது, நீர்நிலைகளை தவிர்த்து, கட்டடங்கள் நிறைந்து இருக்கும் வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் ஒரு செயலுக்காக விஜயகுமார் சார், உமேஷ் சார், சுடர் மற்றும் புவன்யா, யுவன் மற்றும் அடியேனும் சென்றபொழுது, வண்டியை அங்கிருந்த காலிமனை  முன்பு நிறுத்திவிட்டு நடக்க தொடங்கியத்தில், சிறிது தூரத்தில் கோழி ஒன்று,  வீட்டின் முன்பு மேய்வது போல் இருந்தது. உற்று நோக்கியத்தில் அவை தாழைக்கோழி(Moorhen) என்று தெரியவந்தது.


ஆச்சரியம்! நீர் நிலைகளில் பார்க்க முடிகிற தாழைக்கோழி, ஒரு வீட்டின் முன்பு மேய்ந்து கொண்டிருக்கிறது. சரி வழிதவறி வந்திருக்கும்  என்று நினைத்து நடந்தால், அங்கு இருந்த மற்ற வீடுகளின் சுவர் மற்றும் அருகில் இருக்கும் காலி மனைகள் போன்ற இடத்திலும் வலம் வந்து கொண்டிருக்கிறது தன் குட்டிகளுடன். கிராமத்தில் வீட்டை சுற்றி வளர்ப்பு கோழிகள் மேய்வதை பார்த்திருக்கலாம். அதே நிலைதான்  இங்கேயும்.

பள்ளிக்கரனை சதுப்பு நிலம்,  பெரும்பாக்கம் போன்ற இடங்களில் தாழைக்கோழிகள் இருக்கும், அதுவும் எண்ணிக்கையில் குறைந்த அளவே. மூன்று, நான்கு மேல் பார்க்க முடியாது. ஆனால் இங்கு இருபதுக்கு மேல், அதில் பல தாழைக்கோழிகள் தன் குட்டிகளுடன் வீடுகள் அருகில் சுற்றி கொண்டிருக்கிறது.

Moorhen chick
குட்டி தாழைக்கோழி பற்றி இங்கு சொல்ல வேண்டும். பெரிய தாழைக்கோழி புல் தரையில் நின்று, தன்  அலகை கொண்டு உடம்பை சரிசெய்து கொண்டிருந்தது. சிறிது தூரத்தில் இருந்த குட்டிகள், முதலில் நம் கண்களுக்கு புலப்படவில்லை. பிறகு ஒன்று தன்  தலையை நிமிர்த்தி உள்ளேன் ஐயா என்றதை, கவனித்துவிட்டேன்.

அட டே நீங்களும் இருக்கிறீர்களா  என்று சொல்வதற்குள், இன்னும் இரண்டு குட்டிகள் தலையை தூக்கியது, நான்  கேமெராவை தூக்கினேன், விடு ஜூட் என்று கிடு கிடு என்று அதன் தாயிடம் சென்றுவிட்டது. இவை கொஞ்சம் வளர்ந்த குட்டிகள் என்பதால் உஷாராகிவிட்டது.  மற்றோரு இடத்தில் நன்கு வளராத குட்டி ஒன்று ஒரு மிதவை மேல் நின்றுயிருந்தது. அருகில் சென்றாலும் பெரியதாக நகரவேயில்லை என்பது ஆச்சரியம் ஆனால் உண்மை என்பது போல் இருந்தது. சிறிது உற்று கவனித்தால் அதன் கால்  அடிபட்டது போல் காணப்பட்டது. எப்படி என்பதை பின்னால் விவரிக்கிறேன்.

காலில் அடிபட்ட தாழைக்கோழி குஞ்சு 
அங்கு வசிப்பவர்களுக்கு, தாழைக்கோழிகள் பற்றிய நினைப்பு, சிறிதும் இல்லை. வழக்கம்போல் செல்கிறார்கள். தெருவில் சுற்றி திரியும் நாய்களை பார்த்து ஒதுங்கி செல்வதுபோல், தாழைக்கோழிகள் பார்த்தும் கடந்து செல்கிறார்கள். இந்த பறவையின் நெற்றியில் சிகப்பும், முனையில் மஞ்சள் நிறமும் கூட அவர்களை கவரவில்லை. இதே போல் பார்த்ததில்லை என்கிற எண்ணம், கொஞ்சம் இருந்தாலும், ஒரு நிமிடம் கவனிப்பார்கள். அப்படி எந்த எண்ணமும் அவர்களுக்கு இல்லை.

இருந்தாலும்  தாழைக்கோழிகள் அவர்களுடன்தான் வசிக்கிறது. மனிதர்கள் கவனிக்கவில்லையென்றாலும் தாழைக்கோழி அவர்களை கவனித்து, அவர்கள் வீடு கட்டாத இடத்தில் தன்  கூடை அமைக்கிறது மற்றும் இங்கும் வீடு  கட்டிவிடுவார்களோ என்று பயந்து பயந்து தன் குட்டிகளை வளர்கிறது. தங்கள் கூடு அருகில் மனிதர்கள் விடு கட்டிவிட்டாலும், அவர்களிடம் சண்டைக்கு போவதில்லை. ஒதுங்கி வேறு இடத்திற்கு சென்று விடுகிறது. அங்கேயும் மனிதர்கள் வந்தால்,  அப்பொழுதும் எதிர்த்து ஒரு குரலும் கொடுப்பதில்லை. ஓடினால், ஓடினால் வாழ்க்கையின் ஓரத்திற்கே  ஓடினால் என்கிற வசனம் போல் ஓடி கொண்டே இருக்கிறது.

5 தாழைக்கோழிகள் உண்டு,  கண்டுபிடியுங்கள் 
தாழைக்கோழி, நீலத் தாழைக்கோழி, நாமக்கோழி போன்றவை உருவில் ஒன்று போலவே இருக்கும். சிறு சிறு வேறுபாடுகள் மட்டுமே.

நாம் தாழைக்கோழியை விட்டு தற்காலிகமாக நகர்ந்து, கொஞ்சம் அந்த இடத்தின் பூகோளத்தை  பார்த்துவிடுவோம்.

15 வருடங்கள் முன்பு, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் தொடர்ச்சியாகவே இந்த இடம் இருந்துள்ளது. 2004 வருடம் முதல் Real Estate மிக பெரிய அளவில் வளர்ந்தபொழுது இங்கும் கட்டிட்டங்களும் வளர்ந்துள்ளது. அதன் தாக்கத்தை இங்கு நன்கு உணரலாம்.

வீடு, அதற்கு அடுத்து காலிமனை, அங்கு  நீரால் சூழப்பட்டுள்ளது மற்றும் அதற்கு அடுத்து ஒரு வீடு  என்று விட்டு விட்டு காணப்படுகிறது.  ஒரு வீட்டின் அடுத்து உள்ள மிக பெரிய இடத்தில், நீரால் முழுகி உள்ளது. வீட்டில் இருந்து வெளியே வந்தாலே நீரில்தான் கால் வைக்கவேண்டும். மழை இல்லாதபொழுதே இப்படி என்றால், மழைக்காலத்தில் மிக மோசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நீர்நிலைகளில் வீடுகள் 
இந்த  இடம் விற்பனைக்கு இல்லை?
இங்கு உள்ள மொத்த  இடமும் பறவைகளுக்கும், சிறு உயிரினங்களுக்கும் சொந்தமானது ஆகும். ஆனால் பல காலி மனைகளில், இந்த இடம்  இவருக்கும் சொந்தம் அதனால் விற்பனைக்கு இல்லை என்று பலகை உள்ளது. படிக்க மட்டும் பறவைகளுக்கு தெரிந்து இருந்தால், இந்த வாசகங்களை படித்து, மனிதர்களை பார்த்து கை கொட்டி சிரித்து இருக்கும்.

ஒரு சுவற்றில் மட்டும் இருந்த பறவைகளை குறிப்பிடுகிறேன்.

புதர்சிட்டு(Pied Bushchat) ஒன்று தனியாக அமர்ந்து இருந்தது. நானும் பல இடங்களில் பார்த்து உள்ளேன். புத்தர் சிட்டு தனியாகவே அமர்ந்து நீண்ட தியானத்தில் இருக்கிறது. இங்கேயும் புதர் சிட்டு, புத்தர் போல் அமர்ந்து இருந்தது. அதன் மனதில் என்ன எண்ணங்களோ ?

அங்கு இருந்து சிறிது தூரத்தில் கதிர் குருவி(Prinia) ஒன்று பறந்து வந்து அதன் அருகில் அமர்ந்தது. ஆனால் சுற்றும், முற்றும் பார்த்துவிட்டு பறந்து விட்டது. ஆனால் நம்ம புத்தர் (புதர் சிட்டு) அசையவேயில்லை. சுவற்றின் மற்றோரு பக்கம், இரண்டு வெண் புருவ வாலாட்டி(White browed wagtail) அமர்ந்து, சிகை அலங்காரம் செய்து கொண்டிருந்தது. தன் அலகை கொண்டு இறக்கையை கோதுவது, உடலை குலுக்கி சிலிர்ப்பது என்று காலை உடற்பயிரிச்சியும் சேர்த்தே செய்து கொண்டிருந்தது.


நீர்காகம்(Coromorant) ஒன்று இதை எதையும் கவனிக்காமல், இந்த சுவற்றை ஒட்டி  யாரும் வீடு கட்டிவிட கூடாது என்ற யோசனையில் இருந்தது. அங்கு இருந்து சிறிது தூரத்தில் நடுத்தர அளவுள்ள கொக்கு(Intermediat Egret) ஒன்று பறந்து வந்து அமர்ந்து. 


காலா படத்தில் ரஜினி தன் இடத்திற்கு வந்த  ஹரிதாதாவை பார்த்து,  ஏய்  ஹரிதாதா உள்ளே வர என்னை கேட்கவேண்டாம், ஆனால் வெளியே செல்லும்பொழுது என்னிடம் கேட்டுவிட்டுதான் செல்லவேண்டும் என்ற வசனம் இந்த கொக்குக்கு பிடித்து விட்டது.

அங்கு உள்ள மனிதர்களை பார்த்து ஏய்  மனிதர்களே, எங்கள்  இடத்தில் வந்துவிட்டீர்கள் மற்றும் திரும்பி போகவும் மாட்டீர்கள் என்று நன்றாக தெரியும். அதனால் மண்ணுக்கு, தன் சொந்த இடத்திற்கு போராடிய ரஜினியை அழைத்து வந்தது எங்கள் பூர்வீக இடத்திற்கும் சேர்த்து போராடுங்கள் என்று சொல்லலாமா என்ற யோசனையில்  இருந்தது. இதை பற்றி கலந்து ஆலோசிப்பதற்கு நீர்காகம் அருகில் கொக்கு சென்றது.

இடத்திற்கு போராடுவதை பற்றிய சந்திப்பு 

நீலத் தாழைக்கோழியிடம் பேசினேன் :
நீலத் தாழைக்கோழிகளில்(Purple-Swamphen) ஒன்று, காலை நடை சென்றுகொண்டிருந்தது. அதுவும் அதே சுவரில் என்பதுதான் சுவாரசியம். மெட்ராஸ் படத்தில், ஒரு சுவருக்கு வரும் சண்டைகள் போல் இங்கு எந்த பறவைக்கும் சண்டை இல்லை. அதைப்பற்றி நீலத் தாழைக்கோழியிடம் கேட்டேன்? சண்டைகள், பொறாமைகள், மற்றவர்கள் இடத்தை அபகரித்தல் எல்லாம் உங்களை போல் இருக்கும் மனிதர்களிடம்தான். நாங்கள் இங்கு பல வருடங்காலமாக  வசிக்கிறோம் இதுவரை இடத்திற்க்காக ஒரு சண்டையம் எங்களுக்குள் இல்லை.

ஏன் நேற்று கூட இந்த வீட்டில் இருப்பவரும், எதிர் வீட்டில் இருப்பவரும் ஒரே காட்டு கத்தல். என்ன சண்டை என்று அருகில் சென்று பார்த்தால், இவர் விட்டு குப்பையை எதிர் வீட்டு சுவர் ஓரம் கொட்டுகிறார்களாம். அதற்கு அடிக்காத குறையாக சண்டை நடந்தது என்று சொன்ன நீலத் தாழைக்கோழியிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் தலை குனிந்து நின்றேன்.

கூடவே வேறு ஒன்றும் சொன்னது. இங்கு உள்ள மனிதர்களுக்கு தெரியவில்லை, இது நாங்கள், எங்கள் முன்னோர்கள், முன்னோர்களுக்கு முன்னோர்கள் வாழந்த இடம். இந்த இடமே  மனிதர்களுக்கு தான்  என்பது போல் சண்டைபோடுகிறார்கள்.

இன்னும் நீலத் தாழைக்கோழியிடம் பேசினால் அசிங்கமாகிவிடும் என்று, பேசாமல் அதனிடமிருந்து இருந்து நகர்ந்து விட்டேன்.

காலை நடைப்பயிற்சி 
எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் இறை கிடைத்த திருப்த்தியில் ஒரு வெண்மார்பு மீன் கொத்தி(White breasted kingfisher) சுவற்றில் வந்து அமர்ந்துகொண்டது. அதன் அலகில் சிறு மீன் அதனால்  கொண்டாட்டமாக சிறிது நேரம் அசையாமல் அப்படியே இருந்தது. கொஞ்ச நேரம் அங்கிருந்து நகரவே இல்லை.

கொண்டாட்டமாக 
குருகு (Bittern)
குருகு பறவையை பார்ப்பது கடினமே. மிகுந்த கூச்ச சுபாவம் என்பதால் மனிதர்களை கண்டால் தலை மட்டுமல்ல உடளையும் காட்டுவதில்லை. ஆனால் குருகு இங்கு குறுக்கும், நெடுக்கமாக வலம்  வந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே ஒரு குட்டி குருகுவை பார்த்துவிட்டேன். ஆச்சரியம் என்ற நினைப்பில் சுற்றிவந்ததில், வளர்ந்த, வளராத என்று நிறைய குருகுகள் நடந்து வருகிறது, பறந்துகொண்டிருக்கிறது, வேடிக்கைபார்த்து கொண்டிருக்கிறது.

குருகு 
வளர்ந்த நீண்ட கதிர்களில், கருப்பு தலை சில்லை(Black headed munia), தன் குடும்பத்துடன் வாழக்கை நடத்துவதை பார்த்தேன். ஒரே ஆனந்தம் அதன் குடும்பத்தில். ஆங்கிலத்தில் பறவைகளின் பெயர்களை வருடம்தோறும் மாறிக்கொண்டே இருக்கும். கருப்பு தலை சில்லையை இப்பொழுது மூன்று நிற சில்லை(Tricoloured munia) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

சில்லை 
சிட்டுக் குருவிகள்(Sparrow), இருபதுக்கு மேல் பறந்து கொண்டிருக்கிறது. ஒரு வீட்டின் சுவர் ஓரம் இருக்கும் சிறு செடியில் அவை வருவதும்-போவதுமாக இருக்கிறது. பொதுவாக சிட்டுக் குருவிகள் சில இடங்களை தேர்ந்து எடுத்து கொள்கிறது, அங்கேயே அதன் வாழ்க்கையை அமைத்து கொள்கிறது.

அந்த சிறு செடி, சில நாட்களில் அல்லது மாதங்களில் வெட்டப்படும். அங்கு உள்ளவே நுழைய முடியாத அளவுக்கு வீடு காட்டுவார்கள், பிறகு நாம் நகர்ந்து செல்லவேண்டும் என்று அந்த குருவிக்கு தெரியுமா? தெரியாதோ?

அப்படி தெரிந்து இருந்தால் சிட்டுக் குருவிகள் மனிதர்களை பார்த்து இப்படி சொல்லாம்.

உங்கள் வீடுகள், எங்கள் இருப்பிடத்தை அழிப்பதால், சென்னையில் எப்படி அனைத்து இடத்திலும் நாங்கள் இருக்க முடியும்? மனிதர்களே, உங்கள் செயலை மறைக்க, செல் போன் கோபுரத்தால் நாங்கள் அழிக்கிறோம் என்று உயிரற்ற செல்போன் கோபுரத்தின் மீது பழியை போட்டு விடுகிறீர்கள்.

உண்மையில், செல்போன் கோபுர கதிர் வவீச்சுதான் சிட்டுக் குருவிகள் அழிவதற்கு காரணம் என்று இதுவரை எந்த அறிவியல் ஆய்வும் சொல்லவில்லை. பறவை ஆராய்ச்சியாளர்களும் சொல்லவில்லை. அப்படி எந்த ஆய்வும் சொல்லாமல் நாமும் நம்பவேண்டாம்.

பறவை இறப்பு:

திரும்பி வரும் வழியில், ஒரு வீட்டின் முன்பு கூழைக்கடா(Pelican) ஒன்று இறந்து இருந்ததை பார்த்து, அருகில் சென்றதில், அவற்றின் கால் வாகன விபத்தில் முறிந்து, அதனால் பறந்து எங்கும் அமர முடியாமல், நடக்க முடியாமல், இதனால் உணவு தேட முடியாமல், இப்படி பல முடியாமல் இறந்து உள்ளது. வண்டிகளும், கார்களும் போகும் சாலை என்பதால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு.

ஆரம்பத்தில் தாழைக்கோழி குஞ்சு ஒன்று காலில் அடிபட்டுள்ளது என்று குறிப்பிட்டு பின்பு விவரிக்கிறேன் என்று நிறுத்தி இருந்தேன். இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் அதற்கு எப்படி அடிபட்டிருக்கும் என்று.


சுற்றி வந்த பகுதி, மிக-மிக-மிக சிறிய இடம்தான். ஆனால் நிறைய பறவைகள் இங்கு வாழ்கிறது.  சிறு பட்டியல் தந்துவிடுகிறேன். 

சிட்டுக் குருவி, silver bill, புள்ளி சில்லை, கருப்பு தலை சில்லை, சாம்பல் கதிர் குருவி, கதிர் குருவி, தாழைக்கோழி மற்றும் அதன் குஞ்சுகள், நீலத்  தாழைக்கோழி, கொக்கு, வெண்மார்பு மீன் கொத்தி, கருப்பு வெள்ளை மீன் கொத்தி(Pied Kingfisher), புத்தர் சிட்டு, குருகு, வெண் புருவ வாலாட்டி, நாகணவாய், நீர் காகம் என்று சென்னையில் ஒரு சிறு சந்தில் இருக்கும்  இடுக்கான வீட்டில் மனிதர்கள் அடைந்து வாழ்வது போல், இங்கு பறவைகள் வாழந்து கொண்டிருக்கிறது.

வென்புருவ வாலாட்டி 
இங்கு இருந்து கூப்பிடும் தூரம் அந்த இடம் என்ற வார்த்தை கிராமத்தில் சொல்வது போல், அதே தூரம் தான் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். ஆந்திரா வரை வந்தாச்சு சிரஞ்சீவியை பார்க்காமல் போனால் எப்படியென்று, விஜய் ஒரு படத்தில் வசனம் பேசுவதுபோல் பள்ளிக்கரணையை பார்த்துவிடலாம் என்று விஜயகுமார் சார் சொன்னார்.



கட் ..

இப்பொழுது நேராக வண்டி பள்ளிக்கரணையில் நிற்கிறது.


பூநாரைகள்(Flamingo) அதிகமாக சதுப்பு நிலத்தின் நடுவில் நின்று கொண்டிருந்தது. அதற்கு சிறிது தள்ளி பவளக்கால் உள்ளான்(Balck-winged stilt). இங்கு அதிக பறவைகள் இல்லையென்றாலும், பூநாரைகள் பார்த்த திருப்தியில் முதலில் வண்டி, ஹோட்டலுக்கு அதற்கு அடுத்து வீட்டிற்கு சென்றது.

Silver bill 










தாயை நோக்கி 

-செழியன்.ஜா 

7 comments:

  1. இந்த அவல நிலையை பொது மக்கள் அறிந்து கொள்ள உங்கள் ஊர் பத்திரிகைகளில் வெளியிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. இங்கு உள்ள மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். ஆனால் எல்லாம் சட்டப்படி வீடு கட்டப்பட்டுள்ளது என்று சொல்வார்கள். ஒரே option பறவைகள் ஒன்றாக சேர்ந்து நீதிமன்றத்திற்கு வரவேண்டும் அல்லது Alfred Hitchcock -The Birds (film) படத்தில் காகங்கள் மனிதர்களை தாக்குவதுபோல் நடந்தால் மாற்றம் வரும்.

      Delete
    2. புகைப்படங்கள் மிக அருமை ! உலகத்தரம் .

      Delete
    3. நன்றி சார்.....

      Delete
  2. பறவைகள் பற்றிய அருமையான தேடல்

    ReplyDelete
  3. Dr.SathisKumar Rajendran16 October 2024 at 05:57

    வாழ்த்துக்கள் தோழரே

    ReplyDelete
  4. நல்ல கட்டுரை.. உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்

    ReplyDelete