மனிதர்களின் தேசத்தில் பிறந்து மனிதர்களின் தேசத்தில் வாழ்ந்து மனிதர்களின் தேசத்தை எழுதி மனிதர்களின் தேசத்தை வாசித்து மனிதர்களின் தேசத்தை விமர்சித்துச் சலிப்பு ஏற்பட்ட நிலையில் 'பூச்சிகளின் தேசத்தை'க் கடந்து பூச்சிகளின் தேசத்தை அறிந்து வியந்து மனிதர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் விதம் ஒரு தொகுப்பைத் தந்துள்ளார் கோவை சதாசிவம்.
மனிதர்களைக் கவிதையாக்கியவர் பூச்சிகளைக் கட்டுரையாக்கியுள்ளார். பூமி என்பது அனைத்து உயிர்களும் வாழ்வதற்கானது. மனிதர் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாமே இயற்கையைச் சார்ந்து இயற்கையோடு இணைந்து இயற்கையாகவே வாழும் தன்மை உடையது. மனிதர் மற்றவைகளையும் வாழவிடுவதில்லை.
'பூச்சிகளின் தேசம் ' மூலம் பூச்சிகள் குறித்து ஆய்வு செய்து பூச்சிகள் வாழ வேண்டியவை, வாழ வேண்டிய அவசியத்தையும் கூறியுள்ளார்.
கரையான் குறித்து எழுதும் போது கரையான் புற்றைப் பேசியுள்ளார். ( கரையான் என்பதே சரி) புற்று என்பது புல், மரத்துகள், மண், கரையான் அமிலம் ஆகியவற்றால் உருவாக்கப் படுகிறது என்றும் பாம்புகளால் கட்டப்படுவதில்லை என்றும் மூடநம்பிக்கையை விளக்கியுள்ளார்.
கரையானைச் சாப்பிடவே பாம்பு வருகிறது. கரையானில் நான்கு வகைகள் உள்ளன. ஒரு நொடிக்கு மூன்று முட்டைகள் வீதம் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டைகள் இடும். கரையானின் முதிர்வே ஈசல். எறும்புகள் வீட்டில் காணக்கூடியவை என்றாலும் கரையானைப் போல் நேரான உணர்விழை இல்லாமல் வளைந்த உணருறுப்புகளையும் உணர் கொம்புகளையும் கொண்டவை எறும்புகள்.
சுள், சுலுக், கட்டு, சாமி என வகைகள் இருப்பினும் மனிதர்களைக் கடிப்பவை சுள்ளே. எறும்புகளில் 22000 வகைகள் உள்ளன. முன் செல்லும் எறும்புகள் 'ஃபெரோமோன் என்னும் வாசனையைப் பரப்பிச் செல்வதாலே பின் வருபவை வரிசையாகச் செல்கின்றன. மழை வருவதை முன் கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவை எறும்புகள்.
நத்தையை மக்கள் பார்ப்பது அரிது. எதிரிகளிடமிருந்து தப்பிக்க, வெப்பம், குளிரிலிருந்து பாதுகாக்க ஓடு பாதுகாப்பானது. நத்தை வழுக்கியே செல்கிறது. கொம்புகள் மூலமே உணர்கிறது . நத்தைகள் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து விடும் வல்லமைப்படைத்தவை ஆகும். ' நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை' என்னும் ஒரு கவிதையை மயூரா ரத்தினசாமி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தட்டான் பல வண்ணத்தில் இருக்கும். தும்பியின் தலை முழுவதும் கண்களே என்பதால் பறக்கும் போது எல்லா திசைகளிலும் காண்கிறது. பறக்கும் போதே இனச் சேர்க்கையை முடித்துக் கொள்ளும் . சிறகு முளைப்பது தும்பிகளுக்கு ஆபத்து. விரைவில் வாழ்வு முடிந்து விடும். தும்பி ஒரு பூச்சி எனினும் வண்டு, கொசு, அந்துப் பூச்சிகளைச் சாப்பிட்டு மக்களைக் காக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வண்ணத்துப் பூச்சியை ' உயிருடன் ஓர் வானவில் ' என்கிறார். அறிவியல் பெயர் லெப்பிடோப்டரா. தமிழில் செதிலிறகி என்பர்.முட்டைகளை இலை மீது இட்டு இனப்பெருக்கத்தைச் செய்கின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்களுக்குப் பொரிக்காத முட்டைகளே இரை. கம்பளிப் புழுக்கள் காண அருவருப்பாக இருக்கும். பாதுகாப்பிற்காக ஒட்டும் பண்புள்ள நீர்மத்தை உமிழ்ந்து இழையாக்கிக் கூடு கட்டிக் கொள்ளும்.
வளர்ச்சியடைந்து வண்ணத்துப் பூச்சியாக வெளிப்படுகிறது. உடலிலிருந்து வெளிப்படும் நைட்ரஜன் கழிவுகள் செதிலில் படிந்து அதில் படும் சூரிய ஒளியே வண்ணங்களாக ஒளிர்கிறது.
மின்மினிகள் இரவிலேயே பயணிக்கும் வனநட்சத்திரம், கண்ணாம் பூச்சி என்றும் அழைப்பர். தூக்கணாங்குருவிகள் கூட்டின் வெளிச்சத்திற்காக மின்மினிகளைச் சிறை பிடித்து வைத்துக் கொள்ளும். 'லுாசிஃபெரின்' என்னும் வேதியியல் கூட்டுப் பொருளே ஒளிர்கிறது . மின்மினி வண்டு இனம் ஆகும். மண் புழு, நத்தை ஆகியவற்றை கூழ்மமாக மாற்றி உண்ணும் மின்மினிகள் பிறவிற்கு உணவாகாது . காரணம் அதன் உடலிலுள்ள வேதியியலே. எதிர் கால மின்தேவைக்காக மின்மினியைப் பயன் படுத்த வேண்டும் என்று வேண்டியுமுள்ளார்.
மனித உழைப்பை, மனித வேர்வையை உறிஞ்சி வாழ்பவரை 'அட்டை' எனச் சாடுவது மக்கள் வழக்கம். அட்டைப் பூச்சிகள் மனித ரத்தத்தை உறிஞ்சி வாழ்பவை. விலங்குகளின் ரத்தத்தை உறிஞ்சும். அட்டைக் கடித்தால் வலிக்காது என்பது ஆச்சரியம்.
அட்டையும் மண்புழுவும் ஒரினம். ஆண் , பெண் உறுப்புகளை ஒரே உடலிலேயே கொண்டவை அட்டை. ரத்தம் உறையாமலிருக்க ஒரு வித திரவத்தைச் சுரக்கும். ஹிருடின் என்னும் இத் திரவம் ரத்த உறைவைத் தடுக்கும் மருந்தாகப் பயன் படுத்தப்படுகிறது.
வீட்டில் எளிதாகக் கண்ணில்படுவது கரப்பான். கரப்பானைக் கண்டாலே மக்களுக்கு ஒவ்வாமை. கரப்பான்கள் கதிர் வீச்சுக்கும் பாதிப்பதில்லை . கல்லால் கட்டி நீரில் மூழ்கடித்தாலும் முப்பது நிமிடம் உயிர் வாழும். தலையைக் கிள்ளி மல்லாக்கப் போட்டால் பன்னிரண்டு நாள்கள் வாழும். பறப்பதை விட ஓடுவதில் திறன் பெற்றவை.
கரப்பானுக்கு ரத்தம் கிடையாது. வெளிப்படும் ரத்தம் போன்ற வெள்ளை நிறம் கெட்டவாடை அடிக்கும். 4500 வகைகளில் 30 வகையே வீடுகளில் வாழ்பவை.
நுாலாம் படை, நூலாம் பூச்சி என்றெல்லாம் கூறப்படும் சிலந்தி பூச்சி அல்ல . வயிற்றுப் பகுதியிலிருந்து வெளிப்படும் நூலிழை மூலமே வலைப் பின்னுகிறது. வலைகள் ஒன்று போலிராது. உறுதியானது. நூலிழையால் செயற்கைத் தோல் தயாரிக்கப்படுவது புதிய செய்தி. சிலந்திகள் இருந்தால் கொசு வராது என்பது கவனிக்கத்தக்கது.
மக்களைச் சுறுசுறுப்பில் தேனீயாக இரு என்பர். தேனீ நொடிக்கு நானூறு முறை சிறகசைக்கிறது. அதிலிருந்து வெளிப்படும் சத்தமே ரீங்காரமாக ஒலிக்கிறது. தேனீக்கள் நடனம் மூலமே செய்தியைப் பரிமாறிக் கொள்கின்றன. தேனீக்கள் கடிக்கும் போது பார்மிக் என்னும் அமிலத்தைச் செலுத்துவதாலே வலிக்கிறது. மனிதனைக் கடித்த தேனி இறந்து போகிறது. ஒரு பெரிய கூட்டில் ஒரு லட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இருபத்தைந்து லட்சம் வரையிலான தேனீக்களைத் தாங்கும் திறன் கொண்டவராகக் கூடுகள் இருக்கும். தேனீக்களால் பதப்படுத்தும் தேன் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெடாது. தேனீக்கள் அழிந்தால் மனிதனும் அழிந்து விடுவான் என்று எச்சரித்துமுள்ளார்.
மக்கள் பாம்புகளைப் பாம்பு என்று சொல்லாமல் புழு பூச்சி என்பர். பூச்சிகளின் தேசம் என்னும் இத் தொகுப்பில் பச்சைப் பாம்பு குறித்தும் எழுதப் பட்டுள்ளது. கண் கொத்திப்பாம்பும் இதுவே. ஆனால் கண்ணைக் கொத்துவதில்லை. பாம்புகள் மகுடிக்கு ஆடாது. 3000 வகைகளில் 175 மட்டுமே விசமானது.
தொட்டாற் சிணுங்கி என்னும் தாவரம் குறித்தும் ஒரு கட்டுரை உள்ளது. மனிதர் தொட்டதும் ஏற்படும் சிறு அதிர்வில் இலைகளின் காம்பு செல்ககளில் உள்ள நீர் உள்வாங்குவதால் இலைகள் சுருங்குகின்றன. பழைய நிலைக்குத் திரும்ப 30 நிமிடங்கள் ஆகும். இதற்கு 'ஹைட்ராலிக் சிஸ்ட்ம்' என்று பெயர்.
'பூமி உயிர்களின் கூடு' என்பது பொதுவானது. " எல்லா உயிர்களோடும் பூமியைப் பகிர்ந்து கொள்ளும் மேலான, பண்பட்ட,வாழ்வு நெறியை மனிதக் குலம் கடைப் பிடிக்க வேண்டும் "என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'இயற்கையும் மனிதனும் ' பற்றியும் எழுதியுள்ளார். பூச்சிக்கொல்லி மருந்துக்குத் தடை விதக்க வேண்டும். இயற்கையே பூச்சிகளைக்கட்டுப் படுத்தும். 'முடிவில் ஒரு தொடக்கம்' கட்டுரையில் 99 தேசிய பூங்காக்கள் 616 வன விலங்கு சரணாலயங்கள் 15 பல்லுயிர் பாதுகாப்பு மையங்கள் இருந்தாலும் காட்டுயிர்கள் அழிக்கப் பட்டும் அழிந்தும் வருகின்றன' என்றுவருந்தியுள்ளார். வாழ வேண்டும் என்று விரும்புகிறார்.
'பூச்சிகளின் தேசத்திற்குள்' மாணவிகளுடன் நம்மையும் அழைத்துச் செல்கிறார் கோவை சதாசிவம். மாணவிகளுக்குக் கூறுவதாகவே கூறியுள்ளார். பூச்சிகள் பற்றிய செய்திகள் வியக்கச் செய்கின்றன.
பூச்சிகள் குறித்து ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சித்துள்ளார். "ஒரு கவிஞராக மனிதர்களைக் கவிதையில் எழுதியவர் ஒரு கட்டுரையாளராகப் பூச்சிகள் பற்றி மனிதர்களுக்கு எழுதியுள்ளார். ஒரு கவிஞர் என்பதைக் கவிதைகளைச் சான்றுகளாக்கியும் வரிகளைக் கவித்துவத்துடனும் எழுதி உறுதிப் படுத்தியுள்ளார்.
பூச்சி இனங்கள் மீது வெறுமனே அக்கறை கொள்ளாமல் அவைகள் குறித்து ஆராய்ந்து அவைகளின் தேவைகளை வலியுறுத்தியுள்ளார். ஒரு களப் பணியாளராகச் செயலாற்றி முன்னுதாரணமாகத் திகழ்ந்து ஒரு நல்ல தொடக்கத்திற்கு அடிக் கோலிட்டுள்ளார்.
'சிற்றுயிர்களும் நாமும் " பகுதியில் சு.தியோடர் பாஸ்கரன் குறிப்பிட்டது போல இத்தொகுப்பைப் பாட நூலாக்க வேண்டும். அதற்கான முழு தகுதியும் பெற்றுள்ளது.
-பொன் குமார் (கோவை)
I have read the whole article. It is interesting to read. If teachers read and discuss that in classes, it will be really great.
ReplyDelete