Wednesday, 21 January 2015

A man living with pigeon more than 25 years



வீட்டில் பறவை வளர்பவர்கள் பெரும்பாலும் ஒரு சில வருடங்கள் தான் அதை பராமரிப்பார்கள் வீட்டின் சூழ்நிலை அவர்களை அதை வளர்ப்பதில் இருந்து அப்புறபடுத்தி விடும். எங்கையாவது வேறுயாராவது வளர்ப்பதை பார்க்கும்பொழுது முன்பு தாம் வளர்த்ததை நினைத்து கொண்டோ அல்லது பக்கத்தில் வருபவர்களிடம் சொல்லிக்கொண்டோ வருவார்கள்.

ஒரு மனிதர் புறாவுடன் 25 வருடங்களுக்கு மேல் அதை வளர்த்து இல்லை இல்லை அதனுடன் வாழ்ந்து வருவதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அவர் இடத்திற்கு சென்றபொழுது பாதி புறாக்கள் முட்டை இட்டு இருப்பதை பார்க்க முடிந்தது.


சிறிய அறை அதில் அரிசி மூட்டை அடிக்கி வைத்தது போல் மர கூண்டுகள். சாம்பல் , கருப்பு , வெள்ளை, அடர் காப்பி என்று சின்னதும் பெரியதுமாக நிறைய புறாக்கள், நான் உள்ளே சென்றவுடன் அவை வெளியே சென்று கொண்டிருந்தது. ஒரு புறா என்னை அடித்து சென்றது ஏண்டா என் இடத்திற்கு வந்தாய் என்பது போல் இருந்தது அதன் செயல்.

நானும் பல காலகட்டங்களை பார்த்து விட்டேன் சில வருடங்கள் நிறைய பேர் ஆர்வத்தோடு வளர்க்க ஆரம்பிப்பார்கள் ஒரு சில வருடம் கழித்து பார்த்தல் காற்றில் கரையும் கற்பூரம் போல் கரைந்து போயிருப்பார்கள் என்று பேச தொடங்கினார். புறாவில் நிறைய வகை இருக்கு என்னிடம் ஓமர் , படாங்கா, கர்ன புறா , தவடால் வகை என்று 30 புறாக்களை வளர்த்து வருகிறேன் பத்து வருடம் முன்பு 150 புறாக்களை வளர்த்தேன் ஆனால் முற்றிலும் இவற்றை எடுக்க மனம் வரவில்லை அதனால் என் ஆசைக்கு முப்பது.

புறாவின் எதிரி என்றால் வல்லுரு , பூனை இவைகள் தான் பெரிய எதிரி பூனையிடம் இருந்து புறாவை பாதுகாக்க நான் இதுவரை நூறு புறாக்களை இழந்திருப்பேன் என்று அவர் சொன்னபொழுது, ஏன் என்று வழக்கமான கேள்வியை கேட்டேன்.
இன்றும் பூனை இங்கு வரத்தான் செய்கிறது முன்பு போல் இல்லை என்றாலும் அவ்வபொழுது புறாக்கள் மாட்டிகொள்கிறது. தரையில் பூனை என்றால் ஆகாயத்தில் வல்லுறு.

பறக்கும் பொழுதே அதை தன் நக காலில் பிடித்து நார் நாரை கிழித்து விடும். சில சமயம் அதிக மழை பெய்தால் அதில் றெக்கை நனைந்து பறக்க முடியாமல் மற்ற விலங்குகளுடன் மாட்டிகொள்கிறது. சில நேரம் மனிதர்களே பொறி வைத்து பிடித்து விடுவார்கள். இங்கே வந்து திருடி செல்லும் மனிதர்களும் உள்ளனர் இப்படி வருடம் வருடம் இருபது புறாக்கள் மேல் இழந்துவருகிறேன் என்று சொல்லி கொண்டே போனவர் நிறுத்தி இதை வியாபாரம் செய்து பெரிய லாபம் எல்லாம் பார்க்க முடியாது  என்னுடைய ஆசைக்கு தான் வளர்த்து வருகிறேன். மருந்துக்காக சில பேர் வந்து கேட்பார்கள் அப்பொழுது விற்று கொஞ்சம் பணம் பார்ப்பேன் என்றார்.

முன்பு காலை மாலை தானியம் தருவேன் பின்பு அவை வெளியே சென்று வருவதால் மாலை மட்டும் தானியம் தருகிறேன். ஊருக்கு சென்றுவிட்டால் தான் கொஞ்சம் சிரமம்.என்றார்.  

.சிறிய தண்ணி தொட்டி வைத்து இருக்கிறார் அதில் சில புறாக்கள் குளிக்கவும் செய்கிறது. நான் சென்றபொழுது சில புறாக்களுக்கு அம்மை நோய் வந்து பரிதாபமாக அமர்ந்திருந்தது. மற்ற சில புறாக்களுக்கு இந்த குளிர்காலத்தில் சளி பிடித்து வழக்கமாக அவற்றின் சத்தம் வராமல் மனிதர்கள் போல் அல்ல பட்டுகொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.



நிறைய கிளிகளும் வளர்த்து இருக்கிறார் ஆனால் இன்று புறாவை மட்டும் தொடர்ந்து வைத்திருக்கிறார். இவரை கண்டால் புறாக்களும் குஷியாகி விடுகிறது.எனக்கு ஒவ்வொரு புறாவை பற்றியும் குறிப்புகள் சொல்லி கொண்டேவந்தார். முன்பு நிறை பேர் வந்து வாங்கி சென்றார்கள் சில பேர் முட்டையில் இருக்கும் பொழுதே பணத்தை கொடுத்துவிடுவார்கள் ஏன் என்றால் அதன் தாய் புறாவை பார்த்து அவர்களுக்கு பிடித்து விடும் இப்படி நிறைய புறாவை விற்றிருக்கிறேன். 

புறாக்கள் மற்ற பறவைகள் போல் மரத்தில் வாழ்வதை விட கோவில் கோபுரங்கள், மண்டபங்கள், பெரிய பெரிய கட்டிடங்கள் என்றே வாழும்.கோவில் புறாக்கள் என்றே ஒரு இனம் உண்டு அவற்றை நாம் வீட்டில் வளர்க்க முடியாது என்னிடமும் நிறைய கோவில் புறாக்கள் வரும் ஆனால் அவை ஒரு சில நாளிலேயே சென்று விடும்.

புறாக்களுக்கு காலில் வளையத்தை மாட்டி விடுவேன் எதற்கு என்றால் அவை நம் புறாக்கள் என்று அடையாளம் தெரிந்து கொள்வதற்காக. சில சமயம் அவை வேறு ஒருவர் கூண்டில் சென்று விட்டால் அவை நமது என்று சொல்வதற்கு இந்த வளையம் தான் சிறந்தது என்று நமக்கு குறிப்புகளை தருகிறார் கண்ணகி கால் சிலம்பை வைத்து உண்மையை நிருபித்தது போல் நானும் நிறயை தடவை கால் வலயத்தை வைத்து மீட்டு வந்திருக்கிறேன் என்றார் .

அவருடன் பேச பேச நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது என்னதான் நாம் படித்து தெரிந்து கொண்டாலும் அனுபவமாக ஒருவர் சொல்லும் பொழுது நமக்கும் எளிதாக புரிந்து விடுகிறது. 



                                                                                                     - செழியன்

Sunday, 18 January 2015

கோயில் காடுகள்

அறிவியலும், ஆன்மீகமும் இணைந்த வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். இயற்கையை இறைவனாகவும், இறைவனை இயற்கையாகவும் தரிசனம் செய்த தீர்க்கதரிசிகள் அவர்கள். அதனால் தான் இறைவனை வழிபடும் ஆலயங்களில் தொடங்கி தங்கள் வாழ்வின் எல்லா அன்றாட அம்சங்களிலும் இயற்கையையும், இறைவனையும் இரண்டறக் கலந்த பரிபூரணமான வாழ்வை வாழ்ந்தார்கள். அத்தகைய உலகு போற்றும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் உடையவர்களாக விளங்கிய நம் ஆன்றோர்கள் உருவாக்கி வைத்த இறைவழிபாடுகளிலும், சடங்கு சம்பிரதாயங்களிலும் பாலில் மறைந்திருக்கும் வெண்ணையைப்போல இயற்கையை போற்றும் மேன்மையான பண்பு சொல்லப்படாத அறிவியலுடன் இணைந்த ஆன்மீகமாக பரிணமித்து வந்தது. இதன் ஒரு அம்சமே இயற்கை பாதுகாப்புக்காகவும், சுற்றுச்சூழல் பேணலுக்காகவும் அவர்கள் மரங்களையும், காடுகளையும் போற்றி வந்தது. 

மரங்கள் வளர்ப்பு பற்றியும், காடுகளைப் பேணிப்பாதுக்க வேண்டியதைப் பற்றியும் இன்று நாம் பேசி வருகிறோம். ஆனால் நவீன கண்டுபிடிப்புகள் எதுவும் நிகழாத, நூதனமான சாதனங்களின் பயன்பாடு எதுவும் இல்லாமல் இருந்த நூற்றாண்டுகளுக்கு முன்பே இறைவனை வழிபடச் செல்லும் மக்களின் மனதில் மரங்களை புனிதமாகக் கருதும் எண்ணத்தை ஏற்படுத்துவதற்காகவும், அதேபோல தங்கள் சூழலிலும் மரங்களைப் போற்றி வளர்க்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்காகவும் நம் முன்னோர்கள் கோயில்கள் தோறும் மரங்களை வைத்து அவற்றை திருத்தல மரங்கள் என்ற பெயரில் போற்றி வந்தார்கள்.  பழம்பெருமை மிக்க நம் பாரத நாட்டிற்கு விளங்கி வந்த பழமையான பெயர்களில் ஒன்று நாவலன் தீவு என்பதாகும். இதன் பொருள் நாவல் மரங்களை அதிகமாகக் கொண்ட தீவுப்பகுதியுன் அமைந்த நாடு என்பதாகும். ஆம்.. நாவல் மரங்களின் தாயகம் நம் பாரத நாடு தான். இதனால் தான் பஞ்சபூத திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவானைக்கா கோயிலின் திருத்தல மரமாக விளங்குவதும் நாவல் மரம் ஆகும். 

வில்வத்தை சிவனுக்குரியதாகவும், துளசியை விஷ்ணுவுக்குரியதாகவும், எருக்கையும், அருகம் புல்லையும் விநாயகருக்குரியதாகவும், தாமரை மலர்களை தேவியாருக்குரியதாகவும், அரசங்குச்சிகளையும், புரசமர இலைகளையும் மதசடங்குகளுக்குரியதாகவும் கண்ட நம் முன்னோர்கள் வாழையையும், தென்னையையும், வெற்றிலையையும், மாவிலையையும் எல்லாம் மங்களகரமானதாக இறைவனை வழிபடுவதற்கு பயன்படுத்தியது அவர்களுடைய இறையற்கையோடு இணைந்த வாழ்வுக்கு சிறிய எடுத்துக்காட்டுகளே ஆகும். மழைநீர் பாதுகாப்புக்காக கோயில்கள் தோறும் குளங்களை வெட்டி நீர் சேமிப்பை வாழ்வில் கடைபிடித்த நம் முன்னோர்கள் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தலமரத்தையும், குளத்தையும் இறைவன், இறவியுடன் திருநாமத்தோடு இணைத்து போற்றி வந்தார்கள். இப்படி மரங்களையும், நீர்நிலைகளையும் உருவாக்கி போற்றி வளர்த்த அவர்கள் காடுகளை போற்றுவதையும் தம் தலையாய புனிதமான கடமையாகக் கருதினார்கள். அந்த வகையில் உருவானதே கோயில் காடுகள் ஆகும்.

கோயில் காடுகள் என்பன ஊருக்கு வெளியே கிராமத் தேவைகளாக, கிராமத்தை பாதுகாக்கும் தெய்வங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட இயற்கை வனங்கள் ஆகும். இந்த காடுகள் இயற்கையாகவே வளர்ந்து பெருகின. சிவன் சொத்து குலநாசம் என்பதைப் போல இந்தக் காடுகளை வெட்டுவதோ, அவற்றில் இருந்து ஒரு இலையை எடுப்பதைக் கூட பெரிய பாவமாகக் கருதினார்கள். இங்கு அந்தந்த காடுகள் அமைந்திருக்கும் அப்பகுதிகளுக்கு ஏற்ப இயற்கையாக காணப்படும் எல்லாவகை மரங்களும், செடி கொடிகளும், புதர்களும், சிறுசிறு விலங்குகளும், புழு, பூச்சிகளும் உண்மையான காடுகளில் வாழ்வதைப் போல சுதந்திரமாக பல்கிப் பெருகின. இவற்றை ஆன்மீகத்தோடு இணைக்கப்பட்ட மினி காடுகள்  என்றே சொல்லலாம். ஒவ்வொருவர் எல்லையிலும் இந்தக் கோயில் காடுகள் இருந்து வந்தன. 

தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் கேரளத்திலும் இவற்றுக்கு சிறப்பான இடம் சமுதாயத்தில் தரப்பட்டிருந்தது. இவற்றுக்கு அங்கு காவுகள் என்று பெயர். வல்லியூர்காவு, புத்தன்காவு என்று காவுகளை பின்னிணைப்பாகக் கொண்ட ஊர்ப்பெயர்கள் இன்றும் அங்கு விளங்கி வருகின்றன. ‘காவு தீண்டியால் குளம் வற்றும்’ என்று மலையாள மொழியில் ஒரு பழமொழியும் இருக்கிறது. காவுகள் எனப்படும் இந்தக் கோயில் காடுகள் அழிக்கப்பட்டால் குளங்களில் தண்ணீர் இல்லாமல் போய்விடும் என்பது இதன் பொருளாகும். இங்குள்ள கோயில் காடுகளில் யக்ஷி எனப்பட்டும் காளி, நாகராஜன், நாகராணி போன்ற தெய்வங்களின் உருவங்கள் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்தன.

நம் ஊரில் கிராம தெய்வங்களான கருப்பண்ணசாமி, காளி, ஐயனார் போன்ற தெய்வங்களுடைய திருவுருவங்கள் இந்தக் கோயில் காடுகளில் காணப்படுகின்றன. இந்த காடுகளில் பாம்பு புற்றுகளும், கறையான் புற்றுகளும் உட்பட ஆல், அரசு, வேம்பு, புளி, மா, தென்னை போன்ற மரங்களும், தாழை, செம்பருத்தி, துளசி, அருகு போன்ற செடி, புல் வகைகளும் காணப்படுகின்றன. இந்துமத சடங்குகளுக்கு மிகவும் பயன்படும் புல்வகையான  தர்பையும், அதிலும் சிறப்பாக வழவழப்பாக சடங்குகளின் போது பயன்படுத்துபவரின் கையை அறுக்காமல் மென்மையாக இருக்கும் சிறப்புவகை புல்லான விசுவாமித்திரம் என்ற புல்வகையும் இந்தக் கோயில் காடுகளில் இயற்கையாகவே செழித்து வளர்கின்றன. இந்தக் காடுகளைச் சுற்றிலும் ஒரு நீர்நிலையாக ஒரு சிறிய குளமாவது இருக்கும். இதில் நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வரும் வகையில் இவை அமைந்துள்ளன. 

அணில், ஔணான், பறவைகள் முதல் குரங்கு வரை எல்லாவிதமான விலங்கு வகைகளும் இங்கு சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றன. இத்தகைய கோயில் காடுகளில் குறிப்பாக எல்லா கிராமங்களிலும் கிராம எல்லையை ஒட்டி பிடாரி, வீராசாமி போன்ற கிராம தெய்வங்களுடைய கோயில்களுடன் அமைந்திருக்கும் இந்தக் கோயில் காடுகளில் உள்ள நீர் நிலைகள் அங்குள்ள காடுகள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதால் எப்போதும் வற்றாமல் வருடம் முழுவதும் தண்ணீர் நிறைந்து காணப்படும்,  இதனால் காடுகளை சுற்றிலும் அமைந்திருக்கும் ஊரிலும் தண்ணீர்ப்பற்றாக்குறை ஏற்படாமல் இருந்து வந்தது. சுற்றுச்சூழல் ஆதார மரம் (environmental base tree) எனப்படும் ஆலமரம் அதிகமாகக் காணப்படும், காரணம் ஆலமரம் இருக்கும் இடத்தில் தாவரங்கள் செழித்து இயற்கை சமநிலையுடன் இருக்கும் என்பதால் தான். பலவகை பறவைகள், விலங்குகள், பூச்சிகள் ஆலமரத்தை தங்கள் இருப்பிடமாகக் கொண்டு வாழும் இயல்புடையது ஆகும். இதே போல இந்தக் காடுகளில் யானை சுற்றுச்சூழல் விலங்கு (environmental base animal)  இங்கு சிறப்பாக காணப்படுகிறது. யானை உள்ள இடத்தில் காடுகள் நன்கு பராமரிக்கப்படுகிறது என்பதாலும், அப்படிப்பட்ட பகுதிகளிலேயே அவை வாழும் என்பதாலும் யானைகள் அவ்வாறு அழைக்கப்படுகின்றன. 

இந்தக் கோயில் காடுகள் எப்போது தோன்றியது என்பது அறிவியல் ஆய்வாளர்களால் துல்லியமாகக் கூற முடியாத ஒன்றாகும். அறிவியலாளர்களால் இதைப் பற்றிய ஆய்வுகள் இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டியதுள்ளது. ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கூறப்படும் மனித இனம் நாகரீகம் அடைந்தபோது, இயற்கையை இறைவனாகக் கண்டு வழிபடத் தொடங்கிய போது இந்தக் காடுகளும், இவற்றின் நடுநாயகமாக கிராம எல்லைக்கோயில்களும் தோன்றியிருக்கலாம் என்று கூறலாம். 

சி.பி.ராமசாமி ஐயர் சுற்றுச்சூழல் ஆய்வு கல்வி மையத்தின் ஆய்வுகளின் படி, இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், மகாராட்டிரம் உட்பட எல்லா மாநிலங்களிலும் கோயில் காடுகள் காணப்படுகின்றன. தென்னிந்தியாவிலும் இவை சிறப்பாக மக்களுடைய சமூக வாழ்வில் இன்றியமையாத இடம் பெற்றுள்ளன.  கிராம எல்லைப் பகுதிகளில் கிராம தெய்வங்களை மையமாகக் கொண்ட இந்த கோயில் காடுகள் சி.பி.ராமசாமி ஐயர் ஆய்வு மையத்தின் கணக்கீடுகளின் படி இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஏறத்தாழ 1 முதல் 1.5 லட்சம் வரை கோயில் காடுகள் உள்ளன.  தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள கோயில் காடுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவைகள் ஆகும். இவற்றின் குறைந்தபட்ச பரப்பளவு ஒரு ஏக்கராக உள்ளது.

என்றும் வற்றாத குளங்குட்டைகள் இந்த கோயில் காடுகளையொட்டி இருந்ததால் நிலத்தடிநீரின் மட்டம் எப்போதும் நல்ல அளவுக்கு பேணப்பட்டு வந்தது. இதனால் இந்தக் காடுகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடும் கோடையிலும் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைத்து வந்தது.

-இந்த கோயில் காடுகள் இன்று நம் அதிகம் பேசிவரும் பல்லுயிர் பரவல் (biodiversity) மற்றும் இயற்கை சமநிலை ஆகியவற்றைப் பேணிப் பாதுகாப்பதற்கும் பெருமளவில் துணை புரிந்தது.

அரியவகை மூலிகைச் செடிகள் முதல் அற்புதமான மரங்கள் வரை வளரும் இந்தக் காடுகள் சமீபகாலமாக அழிந்து வருகின்றன என்பது வருத்தம் அளிக்கக்கூடிய விஷயம் ஆகும். கிராம தெய்வங்களின் திருவுருவங்கள் மட்டுமே இருந்த இந்தக் கோயில்கள் தற்போது வேண்டுதல் என்ற பெயரிலும் பிரார்த்தனை என்ற பெயரிலும், நேர்ந்து கொள்ளுதல் என்ற பெயரிலும் அங்குள்ள காடுகள் அழிக்கப்பட்டு பெரிதாக்கப்படுகின்றன. இது நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும். கோயில் காடுகள் பாதுகாக்கப்பட்டால் அந்த ஊரும் அதன் சுற்றுச்சூழலும், இயற்கைச் சூழ்நிலையும் அதனால் பருவநிலையும்கூட பாதுகாக்கப்படும்.  ஒவ்வொரு கிராமமும் இந்த கோயில் காடுகளை போற்றி பாதுகாத்தால் ஊரும், உலகமும் வளமோடும், நலமோடும் நீண்டநாள் வாழவழி ஏற்படும். அனுபவத்தையே அறிவாகக் கொண்டு அறிந்ததை தங்கள் வாழ்வாக வாழ்ந்த நம் முன்னோர்கள் அரிய தீர்க்க தரிசனத்தோடு போற்றி வந்த இந்தக் கோயில் காடுகளை அழியாமல் பாதுகாப்பது நம் பொறுப்பும் ஆகும்.  ஆடம்பர கோலாகலங்களும், கொண்டாட்டங்களும் மட்டுமே வழிபாடாகி விடமுடியாது என்பதை புரிந்து கொண்டு இயற்கையில் இறைவனைக் கண்டு, உணர்ந்து வாழ்வாங்கு வாழ்ந்த நம் முன்னோர்கள் காட்டிய நல்வழியில் நாமும் நடந்து கோயிலையும், கோயில் காடுகளையும் போற்றுவோம். பாதுகாப்போம். 

                                                                                          -சிதம்பரம் ரவிசந்திரன்


Thursday, 1 January 2015

கூடு (காக்கை சிறக்கினிலே)


    ஒற்றையாக அவர்களைப் பார்த்ததில்லை.  எப்போதும் ஒன்றாகத்தான்..  ஒன்றாகவே ஜென்மம் எடுத்தவர்கள் போல..  ஒரே கூட்டில் பிறந்தவர்கள்.  உட்புறங்களில், மைதானங்களில், மரத்தடிகளில், தோட்டங்களில் கவனமாக, எச்சரிக்கையோடு மெல்ல மெல்ல அடிமேல் அடிவைத்து, கொத்திப் பொறுக்கியும், பாய்ந்து பாய்ந்து எதையோ பிடித்தும் அந்த சமயங்களில் மட்டுமே தெரியும் சிறகுகளின் புள்ளிகளோடு, ஒவ்வொரு நொடியையும் சுவைத்து, ஆபத்து என்று உணர்ந்தால் பட்டென்று இறக்கைகளை விரித்து பாய்ந்து உயரத்திற்கு பறந்துசெல்லும் மைனாக்கள்.. 

    ஜன்னலுக்கு அருகில் எழுத்துமேசையில் வெற்று காகிதங்களுடன் இருந்த என் முன்னால் எரியும் வெய்யிலின் மணத்துடன், அவர்கள் பறந்து வந்து உட்கார்ந்தார்கள்.  அவற்றின் உதடுகள் காய்ந்து போயிருந்தன  தாகத்தால்....  கண்களில் எதையோ தேடும் பாவம்..  வீட்டின் ஷெட்டில், மேற்கூரையின் அடியில் அவனும், பின்னால் அவளும்..  ஏறியும், இறங்கியும்..  மறுபடியும், மறுபடியும்..  திருப்தியடையாமல், ஆனாலும், விடாமல் அவர்கள் எதையோ தேடினார்கள்..  தேடிக்கொண்டே இருந்தார்கள்..  இடையில் கொஞ்சநேரம் ஒன்றாக சேர்ந்திருந்து, உதட்டோடு உதட்டை வைத்து ஏதோ பேசிக்கொண்டார்கள். காதல் அவர்களுக்குள் நிரம்பி, வழிந்து தளும்பிக்கொண்டு நின்றது.  அது அவர்களுடைய கண்களிலும் தெரிந்தது.  பங்குனி  மாதம் அது..  இணை சேரவேண்டிய காலம்.  குழந்தைகளுக்கு ஜென்மம் தரவேண்டிய உயிர்வலி..  ஆனால், எங்கே?  எப்படி?    எங்கேயாவது அடர்ந்து விரிந்து கிளை பரப்பிய ஒரு மரம்.. அது போதும் அவர்களுக்கு..  கொஞ்சநேரம் ஷெட்டினுடைய முனையில் இரண்டுபேரும் சேர்ந்து இருந்து, பிரார்த்திப்பதுபோல தலை குனிந்து நின்றுகொண்டிருந்தார்கள்..  கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்களோ?  இல்லை..  மனிதர்களை சபித்தார்களா? 

    அவர்கள் என்னைப் பார்த்தார்கள்.  பயத்தோடு காலடி வைத்து ஜன்னலுக்குப் பக்கத்தில் வந்தார்கள். பெண்ணிடம் எதையோ சொல்வதற்கு உள்ளதுபோல  இருந்தது அது.    பாத்திரத்தில் கொஞ்சமாக தண்ண்£ர் எடுத்துவைத்தேன் நான்.  தலையைக் குனிந்து, தண்ணீரைக் குடித்து அவர்கள் தங்களுடைய உதடுகளை நனைத்துக்கொண்டார்கள்.  நெஞ்சம் கவர்ந்த அந்த அழகை நான் நுகர்ந்தேன்.
 
    மஞ்சள் மை தீட்டிய கறுத்த கண்கள்..  உதடுகளும் மஞ்சள் லிப்ஸடிக் போட்டதுபோல..  ஒழுங்காக வாரிவிட்டதுபோல மெல்லிய முடியாலான லேசான தலைப்பாகை..  வெள்ளையான அடிவயிற்றுக்குப் பிறகு நீளமான வால்..  வாலின் முடிவில் புள்ளி..  அவளைவிட சற்று அளவில் பெரியதாக
   இருந்தான் அவன். 

    - என்ன தேடறீங்க நீங்க? 
    நான் கேட்டேன். 

    - சேர்வதற்கு ஒரு இடம்..
   அவள் பதில் சொன்னள்.  நான் தொடர்ந்தேன்.

   - இந்த வீட்டிலா?

    - எங்கயாவது..

   -இதென்ன? 

    - இங்கே ஒரு பாழாய்ப்போன மரத்தகூட பாக்கமுடியல..  எல்லாத்தயும் நீங்க வெட்டித் தொலைச்சுட்டீங்களே.. 
    அவள்தான் இதை சொன்னது.  பெண்ணுடைய பெண்மையும், தாய்மையும் இணைந்த வேதனை ததும்பும் குரல்.  தொடர்ந்தாள் அவள்.

    - மரப்பொந்தில்தான் நாங்க கூடு கட்டறது..  இலையயும், சுள்ளியையும் வச்சு.. 
    அவன் கூட்டு சேர்ந்துகொண்டான். 

    - கிளையும், இலையும் அடர்ந்த ஒரு தோப்புதுரவோ வயல்வரப்போ இருக்கா இங்க? எங்க குழந்ததைகளுக்குன்னு ஒரு பயிர் பச்சை விட்டு வச்சிருக்கீங்களா நீங்க?
    அவள் கேள்விகளால் என்னைத் துளைத்தாள்.

    - எங்கயாவது ஒரு மரம் மட்டை  மிச்சம் மீதிஉயிரோட வச்சுருக்கீங்களா நீங்க? 
    அவள் விடவில்லை. 

    சரிதானே..?  நான் யோசித்தேன்.  ரப்பர் மரத்திலும், தென்னை மரத்திலும் அவைகளுக்கு கூடு கட்ட முடியாது.  பழையகாலத்தில் இருந்த மரங்களை நான் நினைத்துப் பார்த்துக்கொண்டேன். ஆலம், அரச, ஒதிய, நுனா மரங்கள்..  இலைகளும், கொப்புமாக அடர்ந்து பரந்து  விரிந்து நிழல் பரப்பி, குடை விரித்து  நிற்கும்  அந்த மரங்கள்  இப்போது எங்கே?  இன்றோ மரங்கள் இல்லாத, பச்சை காணாமல்போன காய்ந்து, தீய்ந்துபோன வயல்வரப்புகளும்.. 
    இதற்கு இடையில் அவன் அவளைச் சுற்றிவந்து நாட்டியமாடத் தொடங்கினான்.  அவள் நாணத்தோடு ஒதுங்கிக் கொண்டாள். 

    - இதென்ன ஆட்டம்? 
    நான் கேட்டேன். 

    - எனக்கு..  எனக்கு..
    ஒரு சங்கோஜமும் இல்லாமல் அவன் சொன்னான். 

    - உனக்கு?

    அவர்கள் எனக்குத் தந்த சுதந்திரத்தில் நான் அவளைக் கேட்டேன். 

    - ஆம்..  எனக்கும்..
    அவள் சொன்னாள். 

     - ஆனா.. 
    அவள் சொன்னாள். 

    - என்ன ஆனா?

    - கூடு கட்ட ஒரு இடம் பாக்காம..

    அவள் வேதனையுடன் சொன்னாள். 
    - அது ஏன் அப்படி?

     - ஒரு முட்டையயும் பாழாக்க முடியாது.. 
    ஆச்சரியத்தோடு நான் கேட்டேன். 

    - காதலும், காமமும் வெட்டியாகக்கூடாது என்றா? 

   - ஆமா..  குஞ்சுகளுக்காக கூடு கட்டாம அது முடியாது. 
    அவள் சொன்னாள்.  அவர்களை நான் அதிசயத்துடன் பார்த்தேன். 

   - இனி இதுக்கு என்ன வழி?
    நான் கேட்டேன்.

   - தேடனும்..  கிடைக்கும்வரை.. 
     அவள் பதில் சொன்னாள். 

   - கிடைக்குமா?

    - யாருக்குத் தெரியும்? 

    - எப்பவரை?

    - மழைக்காலம் வரை.. 

    - அப்பறம்?

    - அடுத்த வருஷம்..

    ஒரு தீர்க்கமான பெருமூச்சு விட்டாள் அவள்.  வறண்ட காற்றில் அது நிலைத்து நின்றது.  கீழ ஒரு பூனை கத்தியது.  அவன் அவளைப் பார்த்தான்.  அவளும் அவனைப் பார்த்தாள்.  அவன் இறக்கைகளை விரித்தான்.  அவளும்..  அவர்கள் உயரத்திiல் பறக்கத் தொடங்கினார்கள். 
    - நில்லுங்க..
   நான்  கெஞ்சினேன். 
   - ஒரு நிமிஷம்..
    நான் அவர்களை என்னுடைய மொபைலில் ஒரு கிளிக் செய்தேன்.. என்னுடைய குழந்தைகளுக்காக..  இனி அவர்களை பார்க்கமுடியாமல் போனால்..?  அவர்கள் பறந்துபோனார்கள்.  மேல்திசை வானத்தை நோக்கி..  பணம் காய்க்காத மரமுள்ள நாட்டை நோக்கி.  

                                                                     மலையாள மூலம்- தாமஸ மாத்யு
                                                                     தமிழில்- சிதம்பரம் ரவிச்சந்திரன்.