Sunday, 18 January 2015

கோயில் காடுகள்

அறிவியலும், ஆன்மீகமும் இணைந்த வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். இயற்கையை இறைவனாகவும், இறைவனை இயற்கையாகவும் தரிசனம் செய்த தீர்க்கதரிசிகள் அவர்கள். அதனால் தான் இறைவனை வழிபடும் ஆலயங்களில் தொடங்கி தங்கள் வாழ்வின் எல்லா அன்றாட அம்சங்களிலும் இயற்கையையும், இறைவனையும் இரண்டறக் கலந்த பரிபூரணமான வாழ்வை வாழ்ந்தார்கள். அத்தகைய உலகு போற்றும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் உடையவர்களாக விளங்கிய நம் ஆன்றோர்கள் உருவாக்கி வைத்த இறைவழிபாடுகளிலும், சடங்கு சம்பிரதாயங்களிலும் பாலில் மறைந்திருக்கும் வெண்ணையைப்போல இயற்கையை போற்றும் மேன்மையான பண்பு சொல்லப்படாத அறிவியலுடன் இணைந்த ஆன்மீகமாக பரிணமித்து வந்தது. இதன் ஒரு அம்சமே இயற்கை பாதுகாப்புக்காகவும், சுற்றுச்சூழல் பேணலுக்காகவும் அவர்கள் மரங்களையும், காடுகளையும் போற்றி வந்தது. 

மரங்கள் வளர்ப்பு பற்றியும், காடுகளைப் பேணிப்பாதுக்க வேண்டியதைப் பற்றியும் இன்று நாம் பேசி வருகிறோம். ஆனால் நவீன கண்டுபிடிப்புகள் எதுவும் நிகழாத, நூதனமான சாதனங்களின் பயன்பாடு எதுவும் இல்லாமல் இருந்த நூற்றாண்டுகளுக்கு முன்பே இறைவனை வழிபடச் செல்லும் மக்களின் மனதில் மரங்களை புனிதமாகக் கருதும் எண்ணத்தை ஏற்படுத்துவதற்காகவும், அதேபோல தங்கள் சூழலிலும் மரங்களைப் போற்றி வளர்க்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்காகவும் நம் முன்னோர்கள் கோயில்கள் தோறும் மரங்களை வைத்து அவற்றை திருத்தல மரங்கள் என்ற பெயரில் போற்றி வந்தார்கள்.  பழம்பெருமை மிக்க நம் பாரத நாட்டிற்கு விளங்கி வந்த பழமையான பெயர்களில் ஒன்று நாவலன் தீவு என்பதாகும். இதன் பொருள் நாவல் மரங்களை அதிகமாகக் கொண்ட தீவுப்பகுதியுன் அமைந்த நாடு என்பதாகும். ஆம்.. நாவல் மரங்களின் தாயகம் நம் பாரத நாடு தான். இதனால் தான் பஞ்சபூத திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவானைக்கா கோயிலின் திருத்தல மரமாக விளங்குவதும் நாவல் மரம் ஆகும். 

வில்வத்தை சிவனுக்குரியதாகவும், துளசியை விஷ்ணுவுக்குரியதாகவும், எருக்கையும், அருகம் புல்லையும் விநாயகருக்குரியதாகவும், தாமரை மலர்களை தேவியாருக்குரியதாகவும், அரசங்குச்சிகளையும், புரசமர இலைகளையும் மதசடங்குகளுக்குரியதாகவும் கண்ட நம் முன்னோர்கள் வாழையையும், தென்னையையும், வெற்றிலையையும், மாவிலையையும் எல்லாம் மங்களகரமானதாக இறைவனை வழிபடுவதற்கு பயன்படுத்தியது அவர்களுடைய இறையற்கையோடு இணைந்த வாழ்வுக்கு சிறிய எடுத்துக்காட்டுகளே ஆகும். மழைநீர் பாதுகாப்புக்காக கோயில்கள் தோறும் குளங்களை வெட்டி நீர் சேமிப்பை வாழ்வில் கடைபிடித்த நம் முன்னோர்கள் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தலமரத்தையும், குளத்தையும் இறைவன், இறவியுடன் திருநாமத்தோடு இணைத்து போற்றி வந்தார்கள். இப்படி மரங்களையும், நீர்நிலைகளையும் உருவாக்கி போற்றி வளர்த்த அவர்கள் காடுகளை போற்றுவதையும் தம் தலையாய புனிதமான கடமையாகக் கருதினார்கள். அந்த வகையில் உருவானதே கோயில் காடுகள் ஆகும்.

கோயில் காடுகள் என்பன ஊருக்கு வெளியே கிராமத் தேவைகளாக, கிராமத்தை பாதுகாக்கும் தெய்வங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட இயற்கை வனங்கள் ஆகும். இந்த காடுகள் இயற்கையாகவே வளர்ந்து பெருகின. சிவன் சொத்து குலநாசம் என்பதைப் போல இந்தக் காடுகளை வெட்டுவதோ, அவற்றில் இருந்து ஒரு இலையை எடுப்பதைக் கூட பெரிய பாவமாகக் கருதினார்கள். இங்கு அந்தந்த காடுகள் அமைந்திருக்கும் அப்பகுதிகளுக்கு ஏற்ப இயற்கையாக காணப்படும் எல்லாவகை மரங்களும், செடி கொடிகளும், புதர்களும், சிறுசிறு விலங்குகளும், புழு, பூச்சிகளும் உண்மையான காடுகளில் வாழ்வதைப் போல சுதந்திரமாக பல்கிப் பெருகின. இவற்றை ஆன்மீகத்தோடு இணைக்கப்பட்ட மினி காடுகள்  என்றே சொல்லலாம். ஒவ்வொருவர் எல்லையிலும் இந்தக் கோயில் காடுகள் இருந்து வந்தன. 

தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் கேரளத்திலும் இவற்றுக்கு சிறப்பான இடம் சமுதாயத்தில் தரப்பட்டிருந்தது. இவற்றுக்கு அங்கு காவுகள் என்று பெயர். வல்லியூர்காவு, புத்தன்காவு என்று காவுகளை பின்னிணைப்பாகக் கொண்ட ஊர்ப்பெயர்கள் இன்றும் அங்கு விளங்கி வருகின்றன. ‘காவு தீண்டியால் குளம் வற்றும்’ என்று மலையாள மொழியில் ஒரு பழமொழியும் இருக்கிறது. காவுகள் எனப்படும் இந்தக் கோயில் காடுகள் அழிக்கப்பட்டால் குளங்களில் தண்ணீர் இல்லாமல் போய்விடும் என்பது இதன் பொருளாகும். இங்குள்ள கோயில் காடுகளில் யக்ஷி எனப்பட்டும் காளி, நாகராஜன், நாகராணி போன்ற தெய்வங்களின் உருவங்கள் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்தன.

நம் ஊரில் கிராம தெய்வங்களான கருப்பண்ணசாமி, காளி, ஐயனார் போன்ற தெய்வங்களுடைய திருவுருவங்கள் இந்தக் கோயில் காடுகளில் காணப்படுகின்றன. இந்த காடுகளில் பாம்பு புற்றுகளும், கறையான் புற்றுகளும் உட்பட ஆல், அரசு, வேம்பு, புளி, மா, தென்னை போன்ற மரங்களும், தாழை, செம்பருத்தி, துளசி, அருகு போன்ற செடி, புல் வகைகளும் காணப்படுகின்றன. இந்துமத சடங்குகளுக்கு மிகவும் பயன்படும் புல்வகையான  தர்பையும், அதிலும் சிறப்பாக வழவழப்பாக சடங்குகளின் போது பயன்படுத்துபவரின் கையை அறுக்காமல் மென்மையாக இருக்கும் சிறப்புவகை புல்லான விசுவாமித்திரம் என்ற புல்வகையும் இந்தக் கோயில் காடுகளில் இயற்கையாகவே செழித்து வளர்கின்றன. இந்தக் காடுகளைச் சுற்றிலும் ஒரு நீர்நிலையாக ஒரு சிறிய குளமாவது இருக்கும். இதில் நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வரும் வகையில் இவை அமைந்துள்ளன. 

அணில், ஔணான், பறவைகள் முதல் குரங்கு வரை எல்லாவிதமான விலங்கு வகைகளும் இங்கு சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றன. இத்தகைய கோயில் காடுகளில் குறிப்பாக எல்லா கிராமங்களிலும் கிராம எல்லையை ஒட்டி பிடாரி, வீராசாமி போன்ற கிராம தெய்வங்களுடைய கோயில்களுடன் அமைந்திருக்கும் இந்தக் கோயில் காடுகளில் உள்ள நீர் நிலைகள் அங்குள்ள காடுகள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதால் எப்போதும் வற்றாமல் வருடம் முழுவதும் தண்ணீர் நிறைந்து காணப்படும்,  இதனால் காடுகளை சுற்றிலும் அமைந்திருக்கும் ஊரிலும் தண்ணீர்ப்பற்றாக்குறை ஏற்படாமல் இருந்து வந்தது. சுற்றுச்சூழல் ஆதார மரம் (environmental base tree) எனப்படும் ஆலமரம் அதிகமாகக் காணப்படும், காரணம் ஆலமரம் இருக்கும் இடத்தில் தாவரங்கள் செழித்து இயற்கை சமநிலையுடன் இருக்கும் என்பதால் தான். பலவகை பறவைகள், விலங்குகள், பூச்சிகள் ஆலமரத்தை தங்கள் இருப்பிடமாகக் கொண்டு வாழும் இயல்புடையது ஆகும். இதே போல இந்தக் காடுகளில் யானை சுற்றுச்சூழல் விலங்கு (environmental base animal)  இங்கு சிறப்பாக காணப்படுகிறது. யானை உள்ள இடத்தில் காடுகள் நன்கு பராமரிக்கப்படுகிறது என்பதாலும், அப்படிப்பட்ட பகுதிகளிலேயே அவை வாழும் என்பதாலும் யானைகள் அவ்வாறு அழைக்கப்படுகின்றன. 

இந்தக் கோயில் காடுகள் எப்போது தோன்றியது என்பது அறிவியல் ஆய்வாளர்களால் துல்லியமாகக் கூற முடியாத ஒன்றாகும். அறிவியலாளர்களால் இதைப் பற்றிய ஆய்வுகள் இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டியதுள்ளது. ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கூறப்படும் மனித இனம் நாகரீகம் அடைந்தபோது, இயற்கையை இறைவனாகக் கண்டு வழிபடத் தொடங்கிய போது இந்தக் காடுகளும், இவற்றின் நடுநாயகமாக கிராம எல்லைக்கோயில்களும் தோன்றியிருக்கலாம் என்று கூறலாம். 

சி.பி.ராமசாமி ஐயர் சுற்றுச்சூழல் ஆய்வு கல்வி மையத்தின் ஆய்வுகளின் படி, இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், மகாராட்டிரம் உட்பட எல்லா மாநிலங்களிலும் கோயில் காடுகள் காணப்படுகின்றன. தென்னிந்தியாவிலும் இவை சிறப்பாக மக்களுடைய சமூக வாழ்வில் இன்றியமையாத இடம் பெற்றுள்ளன.  கிராம எல்லைப் பகுதிகளில் கிராம தெய்வங்களை மையமாகக் கொண்ட இந்த கோயில் காடுகள் சி.பி.ராமசாமி ஐயர் ஆய்வு மையத்தின் கணக்கீடுகளின் படி இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஏறத்தாழ 1 முதல் 1.5 லட்சம் வரை கோயில் காடுகள் உள்ளன.  தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள கோயில் காடுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவைகள் ஆகும். இவற்றின் குறைந்தபட்ச பரப்பளவு ஒரு ஏக்கராக உள்ளது.

என்றும் வற்றாத குளங்குட்டைகள் இந்த கோயில் காடுகளையொட்டி இருந்ததால் நிலத்தடிநீரின் மட்டம் எப்போதும் நல்ல அளவுக்கு பேணப்பட்டு வந்தது. இதனால் இந்தக் காடுகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடும் கோடையிலும் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைத்து வந்தது.

-இந்த கோயில் காடுகள் இன்று நம் அதிகம் பேசிவரும் பல்லுயிர் பரவல் (biodiversity) மற்றும் இயற்கை சமநிலை ஆகியவற்றைப் பேணிப் பாதுகாப்பதற்கும் பெருமளவில் துணை புரிந்தது.

அரியவகை மூலிகைச் செடிகள் முதல் அற்புதமான மரங்கள் வரை வளரும் இந்தக் காடுகள் சமீபகாலமாக அழிந்து வருகின்றன என்பது வருத்தம் அளிக்கக்கூடிய விஷயம் ஆகும். கிராம தெய்வங்களின் திருவுருவங்கள் மட்டுமே இருந்த இந்தக் கோயில்கள் தற்போது வேண்டுதல் என்ற பெயரிலும் பிரார்த்தனை என்ற பெயரிலும், நேர்ந்து கொள்ளுதல் என்ற பெயரிலும் அங்குள்ள காடுகள் அழிக்கப்பட்டு பெரிதாக்கப்படுகின்றன. இது நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும். கோயில் காடுகள் பாதுகாக்கப்பட்டால் அந்த ஊரும் அதன் சுற்றுச்சூழலும், இயற்கைச் சூழ்நிலையும் அதனால் பருவநிலையும்கூட பாதுகாக்கப்படும்.  ஒவ்வொரு கிராமமும் இந்த கோயில் காடுகளை போற்றி பாதுகாத்தால் ஊரும், உலகமும் வளமோடும், நலமோடும் நீண்டநாள் வாழவழி ஏற்படும். அனுபவத்தையே அறிவாகக் கொண்டு அறிந்ததை தங்கள் வாழ்வாக வாழ்ந்த நம் முன்னோர்கள் அரிய தீர்க்க தரிசனத்தோடு போற்றி வந்த இந்தக் கோயில் காடுகளை அழியாமல் பாதுகாப்பது நம் பொறுப்பும் ஆகும்.  ஆடம்பர கோலாகலங்களும், கொண்டாட்டங்களும் மட்டுமே வழிபாடாகி விடமுடியாது என்பதை புரிந்து கொண்டு இயற்கையில் இறைவனைக் கண்டு, உணர்ந்து வாழ்வாங்கு வாழ்ந்த நம் முன்னோர்கள் காட்டிய நல்வழியில் நாமும் நடந்து கோயிலையும், கோயில் காடுகளையும் போற்றுவோம். பாதுகாப்போம். 

                                                                                          -சிதம்பரம் ரவிசந்திரன்


Thursday, 1 January 2015

கூடு (காக்கை சிறக்கினிலே)


    ஒற்றையாக அவர்களைப் பார்த்ததில்லை.  எப்போதும் ஒன்றாகத்தான்..  ஒன்றாகவே ஜென்மம் எடுத்தவர்கள் போல..  ஒரே கூட்டில் பிறந்தவர்கள்.  உட்புறங்களில், மைதானங்களில், மரத்தடிகளில், தோட்டங்களில் கவனமாக, எச்சரிக்கையோடு மெல்ல மெல்ல அடிமேல் அடிவைத்து, கொத்திப் பொறுக்கியும், பாய்ந்து பாய்ந்து எதையோ பிடித்தும் அந்த சமயங்களில் மட்டுமே தெரியும் சிறகுகளின் புள்ளிகளோடு, ஒவ்வொரு நொடியையும் சுவைத்து, ஆபத்து என்று உணர்ந்தால் பட்டென்று இறக்கைகளை விரித்து பாய்ந்து உயரத்திற்கு பறந்துசெல்லும் மைனாக்கள்.. 

    ஜன்னலுக்கு அருகில் எழுத்துமேசையில் வெற்று காகிதங்களுடன் இருந்த என் முன்னால் எரியும் வெய்யிலின் மணத்துடன், அவர்கள் பறந்து வந்து உட்கார்ந்தார்கள்.  அவற்றின் உதடுகள் காய்ந்து போயிருந்தன  தாகத்தால்....  கண்களில் எதையோ தேடும் பாவம்..  வீட்டின் ஷெட்டில், மேற்கூரையின் அடியில் அவனும், பின்னால் அவளும்..  ஏறியும், இறங்கியும்..  மறுபடியும், மறுபடியும்..  திருப்தியடையாமல், ஆனாலும், விடாமல் அவர்கள் எதையோ தேடினார்கள்..  தேடிக்கொண்டே இருந்தார்கள்..  இடையில் கொஞ்சநேரம் ஒன்றாக சேர்ந்திருந்து, உதட்டோடு உதட்டை வைத்து ஏதோ பேசிக்கொண்டார்கள். காதல் அவர்களுக்குள் நிரம்பி, வழிந்து தளும்பிக்கொண்டு நின்றது.  அது அவர்களுடைய கண்களிலும் தெரிந்தது.  பங்குனி  மாதம் அது..  இணை சேரவேண்டிய காலம்.  குழந்தைகளுக்கு ஜென்மம் தரவேண்டிய உயிர்வலி..  ஆனால், எங்கே?  எப்படி?    எங்கேயாவது அடர்ந்து விரிந்து கிளை பரப்பிய ஒரு மரம்.. அது போதும் அவர்களுக்கு..  கொஞ்சநேரம் ஷெட்டினுடைய முனையில் இரண்டுபேரும் சேர்ந்து இருந்து, பிரார்த்திப்பதுபோல தலை குனிந்து நின்றுகொண்டிருந்தார்கள்..  கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்களோ?  இல்லை..  மனிதர்களை சபித்தார்களா? 

    அவர்கள் என்னைப் பார்த்தார்கள்.  பயத்தோடு காலடி வைத்து ஜன்னலுக்குப் பக்கத்தில் வந்தார்கள். பெண்ணிடம் எதையோ சொல்வதற்கு உள்ளதுபோல  இருந்தது அது.    பாத்திரத்தில் கொஞ்சமாக தண்ண்£ர் எடுத்துவைத்தேன் நான்.  தலையைக் குனிந்து, தண்ணீரைக் குடித்து அவர்கள் தங்களுடைய உதடுகளை நனைத்துக்கொண்டார்கள்.  நெஞ்சம் கவர்ந்த அந்த அழகை நான் நுகர்ந்தேன்.
 
    மஞ்சள் மை தீட்டிய கறுத்த கண்கள்..  உதடுகளும் மஞ்சள் லிப்ஸடிக் போட்டதுபோல..  ஒழுங்காக வாரிவிட்டதுபோல மெல்லிய முடியாலான லேசான தலைப்பாகை..  வெள்ளையான அடிவயிற்றுக்குப் பிறகு நீளமான வால்..  வாலின் முடிவில் புள்ளி..  அவளைவிட சற்று அளவில் பெரியதாக
   இருந்தான் அவன். 

    - என்ன தேடறீங்க நீங்க? 
    நான் கேட்டேன். 

    - சேர்வதற்கு ஒரு இடம்..
   அவள் பதில் சொன்னள்.  நான் தொடர்ந்தேன்.

   - இந்த வீட்டிலா?

    - எங்கயாவது..

   -இதென்ன? 

    - இங்கே ஒரு பாழாய்ப்போன மரத்தகூட பாக்கமுடியல..  எல்லாத்தயும் நீங்க வெட்டித் தொலைச்சுட்டீங்களே.. 
    அவள்தான் இதை சொன்னது.  பெண்ணுடைய பெண்மையும், தாய்மையும் இணைந்த வேதனை ததும்பும் குரல்.  தொடர்ந்தாள் அவள்.

    - மரப்பொந்தில்தான் நாங்க கூடு கட்டறது..  இலையயும், சுள்ளியையும் வச்சு.. 
    அவன் கூட்டு சேர்ந்துகொண்டான். 

    - கிளையும், இலையும் அடர்ந்த ஒரு தோப்புதுரவோ வயல்வரப்போ இருக்கா இங்க? எங்க குழந்ததைகளுக்குன்னு ஒரு பயிர் பச்சை விட்டு வச்சிருக்கீங்களா நீங்க?
    அவள் கேள்விகளால் என்னைத் துளைத்தாள்.

    - எங்கயாவது ஒரு மரம் மட்டை  மிச்சம் மீதிஉயிரோட வச்சுருக்கீங்களா நீங்க? 
    அவள் விடவில்லை. 

    சரிதானே..?  நான் யோசித்தேன்.  ரப்பர் மரத்திலும், தென்னை மரத்திலும் அவைகளுக்கு கூடு கட்ட முடியாது.  பழையகாலத்தில் இருந்த மரங்களை நான் நினைத்துப் பார்த்துக்கொண்டேன். ஆலம், அரச, ஒதிய, நுனா மரங்கள்..  இலைகளும், கொப்புமாக அடர்ந்து பரந்து  விரிந்து நிழல் பரப்பி, குடை விரித்து  நிற்கும்  அந்த மரங்கள்  இப்போது எங்கே?  இன்றோ மரங்கள் இல்லாத, பச்சை காணாமல்போன காய்ந்து, தீய்ந்துபோன வயல்வரப்புகளும்.. 
    இதற்கு இடையில் அவன் அவளைச் சுற்றிவந்து நாட்டியமாடத் தொடங்கினான்.  அவள் நாணத்தோடு ஒதுங்கிக் கொண்டாள். 

    - இதென்ன ஆட்டம்? 
    நான் கேட்டேன். 

    - எனக்கு..  எனக்கு..
    ஒரு சங்கோஜமும் இல்லாமல் அவன் சொன்னான். 

    - உனக்கு?

    அவர்கள் எனக்குத் தந்த சுதந்திரத்தில் நான் அவளைக் கேட்டேன். 

    - ஆம்..  எனக்கும்..
    அவள் சொன்னாள். 

     - ஆனா.. 
    அவள் சொன்னாள். 

    - என்ன ஆனா?

    - கூடு கட்ட ஒரு இடம் பாக்காம..

    அவள் வேதனையுடன் சொன்னாள். 
    - அது ஏன் அப்படி?

     - ஒரு முட்டையயும் பாழாக்க முடியாது.. 
    ஆச்சரியத்தோடு நான் கேட்டேன். 

    - காதலும், காமமும் வெட்டியாகக்கூடாது என்றா? 

   - ஆமா..  குஞ்சுகளுக்காக கூடு கட்டாம அது முடியாது. 
    அவள் சொன்னாள்.  அவர்களை நான் அதிசயத்துடன் பார்த்தேன். 

   - இனி இதுக்கு என்ன வழி?
    நான் கேட்டேன்.

   - தேடனும்..  கிடைக்கும்வரை.. 
     அவள் பதில் சொன்னாள். 

   - கிடைக்குமா?

    - யாருக்குத் தெரியும்? 

    - எப்பவரை?

    - மழைக்காலம் வரை.. 

    - அப்பறம்?

    - அடுத்த வருஷம்..

    ஒரு தீர்க்கமான பெருமூச்சு விட்டாள் அவள்.  வறண்ட காற்றில் அது நிலைத்து நின்றது.  கீழ ஒரு பூனை கத்தியது.  அவன் அவளைப் பார்த்தான்.  அவளும் அவனைப் பார்த்தாள்.  அவன் இறக்கைகளை விரித்தான்.  அவளும்..  அவர்கள் உயரத்திiல் பறக்கத் தொடங்கினார்கள். 
    - நில்லுங்க..
   நான்  கெஞ்சினேன். 
   - ஒரு நிமிஷம்..
    நான் அவர்களை என்னுடைய மொபைலில் ஒரு கிளிக் செய்தேன்.. என்னுடைய குழந்தைகளுக்காக..  இனி அவர்களை பார்க்கமுடியாமல் போனால்..?  அவர்கள் பறந்துபோனார்கள்.  மேல்திசை வானத்தை நோக்கி..  பணம் காய்க்காத மரமுள்ள நாட்டை நோக்கி.  

                                                                     மலையாள மூலம்- தாமஸ மாத்யு
                                                                     தமிழில்- சிதம்பரம் ரவிச்சந்திரன்.

Thursday, 25 December 2014

MinMini - Student Magazine



பறவை, விலங்குகள் பற்றி சிறுவர்களுக்கு ஒரு அருமையான மாத இதழ் வருகிறது. (பூவுலகு மின்மினி ) சிறுவர்கள் என்று இல்லாமல் பெரியவர்கள் கூட படிக்கலாம். என்னிடம் நவம்பர் மாத இதழ் இருக்கிறது அதில் வந்திருக்கும் கட்டுரைகள் மற்றும் சின்ன சின்ன விஷயங்கள் அருமையாக உள்ளது. அவற்றில் சில

1.அமேசான் அதிசயங்கள் 

2.சுற்றுச்சூழலுக்காக உயிர் துறந்தவர் 

3.நான்தான் பெரிய நீர்க்காகம் 

4.விக்டோரியா அருவி 

5.கொண்டலாத்தி பறவை 

6.அவசியம் படிக்க வேண்டிய நூல் – டார்வின் ஸ்கூல் 

இப்படி இதழ் முழுவதும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய 
இருக்கிறது.

பூவுலகு மின்மினி கிடைக்கும் முகவரி :

பூவுலகு நண்பர்கள்
106/1 முதல் தளம், கனக துர்கா வணிக வளாகம்,
கங்கையம்மன் கோயில் தெரு, வடபழனி,
சென்னை-600026

Mobile- 98416 24006

விலை- 20/

Saturday, 6 December 2014

Teaching Birds

பறவைகளைப் பார்த்து இயற்கையை நாம் படிக்கலாம்..  நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும்போது, ‘காக்கா கண்ணூக்கு மை கொண்டு வா..  குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா..’  என்று சொல்லிதான் உணவு தரும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.  பறவைகளோடு நம் வாழ்வும் பிண்ணிப்பிணைந்து இருந்தது.எல்லா உயிரினங்களும் பூமியில் நல்லபடியாக வாழ்ந்தால்தான் மனிதனும் நன்றாக வாழமுடியும் என்ற ஆழ்ந்த அறிவியல் எண்ணம் நமது மூதாதையோருக்கு இருந்ததுதான் இதற்கு காரணம். அறுவடை காலங்களில் கிராமங்களில் அப்போது வீட்டின் முன்பக்கத்து முற்றத்தில் அறுவடை செய்துவந்த புதுரிசியை ஒரு துணியில் கட்டி வாய்மட்டும் பெரிதாக திறந்திருக்கும்படி தொங்கவிடுவார்கள்.  வீட்டுக்கு வரும் குருவிகளும், பிற சிறிய பறவைகளும் அந்த அரிசியை உண்டு செல்வதற்காக அவ்வாறு செய்தார்கள். இதைப் பார்த்து வளரும் சிறு குழந்தைகளும் பறவைகளை நாம் நம் சகோதர உயிரினங்களாக உரிமையுள்ள தோழர்களாக பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு வளர்ந்தார்கள். 

     இயற்கையில் ஏற்படும் பேரழிவுகளை பற்றி அறியவும் பறவைகள் நமக்கு பெருமளவில் உதவுகின்றன.  உலக வரலாற்றைப் புரட்டிப் போட்ட பல அறிவியல் அறிஞர்களும் சிறந்த பறவையாளர்களாக இருந்தார்கள்.  பரிணாமத்தின் தந்தை என்று போற்றப்படும் சார்லஸ டார்வின் இதற்கு எடுத்துக்காட்டு.  அவர் காலபகோஸ தீவுகளில் பறவைகளைப் பற்றி ஆராய்ந்தபோதுதான் பரிணாமத்தின் கொள்கைகளை கண்டறிந்தது அறிவியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய கொள்கையாக இருந்தது டார்வினின் பரிணாம பற்றிய கோட்பாடுகள். 

    பூகம்பம் போன்ற இயற்கை செதங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் திறன் பறவைகளுக்கு உண்டு. பறவைகள் மீது ஈடுபாடு கொண்டு bird watching எனப்படும் இயற்கையோடு கூடிய பொழுதுபோக்கை பொழுதுபோக்காக மட்டும் மேற்கொள்ளாமல் ஆர்வமாக அத்துறையில் ஈடுபடும்போது, பூகம்பம் போன்ற பேரழிவுகளை முன்னமே அறிந்துகொள்ள முடியும் என்பதால் ஏற்பட உள்ள பெரும் அழிவையும் தடுக்கமுடியும். அது மட்டும் அல்லாமல், D.D.T போன்ற பூச்சிக்கொல்லிகளின் கேடு விளைவிக்கும் பயன்பாட்டைப் பற்றி உலகம் அறிந்துகொண்டதும் பறவைகள் மூலம்தான்..

    இதற்கு நாம் ரேச்சல் கர்சனோடு கடமைப்பட்டிருக்கிறோம்.  அமெரிக்காவில் ஒரு மலையோர நகரத்தில் இருந்து 1958ல் ஒரு வீட்டில் இருக்கும் பெண்மணி உலகப் புகழ் பெற்ற பறவையாளராக இருந்த ராபர்ட் ககேஷ்மென் மர்•பிக்கு ஒரு கடிதம் எழுதினார்.‘எங்களுடைய கிராமத்தில் கொஞ்சம் வருடங்களாக மரங்களுக்கு கிர்ருமிகொல்லிகளை தெளித்துவருகிறார்கள்.  முன்பு பலவிதமான பறவைகளை இங்கு பார்க்கக்கூடியதாக இருந்தது. குளிர்காலம் முடியும்போது எங்கு இருந்தெல்லாமோ பறவைகள் இங்கு வரும்.  ஆனால், சில வருடங்களாக டி.டி.டியை உபயோகப்படுத்த தொடங்கியபின் எங்களுடைய கிராமத்திலோ, பக்கத்து கிராமங்களிலோ பறவைகளைக் காணமுடிவது இல்லை. இங்கிருந்த பறவைகள் எங்கே போய்விட்டன என்று எங்கள் குழந்தைக்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.  பறவைகள் இனிமேல் எப்போதும் வராதா என்று குழந்தைகள் கேட்கிறார்கள்.  எனக்குத் தெரியவில்லை.  அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை’.

    இப்படி பறவைகள் மூலமாக டி.டி.டியைப் பற்றியும் அதன் தீயவிளைவ்வுகளையும் பற்றி உலகம் தெரிந்துகொண்டது.  இயற்கைக்கு ஏற்படும் தீராத தீமையைக் குறித்து இதனால் அறிய்யமுடிந்தது. 
    அமெரிகர்கள் வசந்தகாலம் வருவதை ராபின் என்ற பறவைகளின் வருகையின் மூலம்தான்.  இனிமையாக பாடும் திறன் பெற்ற பறவைகள் ஆகும் அவை.  ராபின் பறவைகள் பாடத்தொடங்கிவ்விட்டால் குளிர்காலம் முடிந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம்.  1954ல் குளிர்காலத்தின் முடிவில், ஊர் சுற்றும் பறவைகளான ராபின் பறவைகள் எப்போதும்போல லேன்ட்சிங்க் என்ற இடத்தில் உள்ள பல்கலைகழக வளாகத்தில் இருந்த மரங்கள் ம்னீது வந்து அமர்ந்துகொள்ள முயன்றன.  ஆனனால் அங்கு இருந்த மரங்களில் பயன்படுத்திய பூச்சிக்கொல்லிகளால் அவற்றின் உயிர் பறிபோனது.  இறந்து விழும் பறவைகளூம், இறந்துகொண்டிருக்கும் பறவைகளுமாக பார்ப்பவர்களின் இட்தயத்தை செகிழவைத்தது.  வந்த  பறவைகள் எல்லாம் சிறிதுநேரத்தில் இறந்துவிழுந்தன.  இதைக் கண்ட நிபுணர்கள் பறவைகலுக்கு ஏற்படும் சாதாரனமான ஏதோ ஒரு நோயால்தான் ராபின்கள் இறந்துவிழுந்தன என்று முதலில் கருதினார்கள்.  ஆனால், முழுமையான ஆராய்ச்சிகளின் முடிவில், பறவைகள் பூச்சிக்கொல்லிகளால்தான் மரணம் அடைந்தன என்பது தெரியவந்தது.  பூச்சிகொல்லி,மருந்தைக் கொண்ட மண்ணை உடகொண்ட மண்புழுக்களை உண்டதால்தான் அவை இறந்தன என்று தெரியவந்தது.    இல்லினாய் இயற்கை வரலாற்று பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர்..ராய் பெர்கர் இதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்.  1958ல் பெர்கர் தன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.  மண்புழுக்களின் செரிமான உறுப்புகளில் டி.டி.டியின் அள்வு அதிகமாக இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.  விஷத்தை உண்ட மண்புழுக்கள் இறந்துபோயின.  மிச்சம் இருந்தவை ராபின் பறவைகளுக்கு உணவாகி அவைகளும் இறப்பதற்கு காரணமாயின. 

    ரேய்ச்சல் கர்சன் ‘மௌனமான வசந்தம்’ என்ற தன்னுடைய புத்தகத்தில் பூச்சிக்கொல்லிகளால் உருவாகு சீர்கேடுகளைப் பர்றி எழுதினார்.  இதனால் அமெரிக்கா உட்பட பல மேற்கித்திய நாடுகள் டி.டி.டியை தடை செய்தன.  உலகம் முழுவது பூச்சிக்கொல்லிகளால் உண்டாகும் தீமைகளைப் பற்றி ஒரு விழிப்புணர்வு தோன்றவும் ரேய்ச்சல் கர்சன் காரனமாக இருந்தார்.  ஒரு சாதாரண் வீட்டுப்பெண்மணிக்கு பறவைகளைப் பற்றிய சந்தேகங்களால் கேடு வளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளைப் பற்றி தெரிந்துகொள்ள வழ வகுத்தது.  இதன் மூலம் பறவை ஆரராய்ச்சி இயற்கையை பற்றி அறிய எந்த வகையில் உதவுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். 

    நம்மை சுuற்றியுள்ள இடங்களில் நாம் வழக்கமாக பார்க்கும் பறவைகளில் ஏதாவது பார்க்கமுடியாமல் போனால் நாம் இருக்கும் இடத்தின் சுற்றுச்சூழலுக்கு ஏதோ சீர்கேடு உண்டாகி உள்லது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.  அதுபோலவே  சாதாரணமாக நாம் பார்க்கமுடியாட்த ஏதாவது புதிiய பறவைகளை நாம் காணநேர்ந்தாலும் அதுவும் நமது சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையே குறிப்பதாகும். 

    அதிகம் வெப்பம் உள்ல பகுதிகளில் வாழ்ந்தும் கூடு கட்டி, முட்டைய்யிட்டு, குšசு பொரித்து செல்லும் பறவைகளான பவழக்காலிகள் தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படும் பறவைகள் ஆகும்.  ஆனால், இவை கேரளாவில் காணப்பட்டதில் இருந்து அங்கு வெப்பநிலை அதிகமாகி வருகிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.  இதன் மூலம் கேரளாவின் காலநிலை தமிழ்நாட்டைப் போல வெப்பமடைந்து வருகிறது என்பதியே எடுத்துச்சொல்கிறது அல்லவா?  மேற்குமலைத்தொடரில் காணப்படும் பறவைகல் அழிந்துபோனால் பின் அவைகளை வேறெங்கும் உலகில் காணமுடியாது.  ஏனென்றால் அவை இந்தப் பகுதிக்கு மட்டுமே உரியவையாகும்.  ஆனால் சமீபகாலமாக இங்குள்ள பறவைகளும் பிற இடங்களில் உள்ல பறவைகளைப்போல அழிந்துகொண்டு வருகின்nறன.  காரணம் காடுகள் அழிக்கப்படுவதும், வயல்களாக்கப்படுவதும், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடும் போல பல.  நம்முடைய காணப்படும் பலவகை  காடுகளில் பலவகை பறவைகள் காணப்படுகின்றன. இவைகளுக்கு ஏற்படும் அழிவு அவைகளுக்கு மட்டுமல்லாமல் மனிதனுக்கும், இயற்கைக்கும் நாசத்தையே ஏற்படுத்தும். 

    பறவை ஆய்வுகள் மூலம் நம் பூமியில் உண்டாகும் மாற்றங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் முடியும்.   ஒருமுறை சீனாவில் கூட்டமாக வந்து வயல்களில் அமரும் தூக்கனாங்குருவிகளை சீனர்கள் முழுமையாக அந்தக் குருவிகளை அழித்துவிட்டார்கள். இதனால் தூக்கனாங்குருவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்ததுடன், வயல்களில் இருந்த பூச்சிகளின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. புழுக்களும், பூச்சிகளும் நெல்மணிகளை அழிக்கத்தொடங்கின. அப்போதுதான் சீனர்களுக்கு புரிந்தது.  

தூக்கனாங்குருவிகள் நெல் விளைந்துவரும் காலங்களில் குறைந்த அளவு நெல்மணிகளை தின்றாலும், மற்ர நேரங்களில் அவை வயல்களில் நெல்லை பாதிக்கும் பூச்சிகளைத் தின்று பயிரை காப்பாற்றிக்கொண்டுவந்தன என்பது.  பறவைகள் பூச்சிக்கட்டுப்பாட்டில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. 

    ஒரு காலத்தில் மௌரீஷியசில் வாழ்ந்துவந்த டோடோ பறவைகள் இன்று பூமியில்l இல்லை.  புறாக்களின் குடும்பத்தைச் சேர்ந்த பறவைகள் ஆகும் இவை.  12கிலோ முதல் 25கிலோ வரை எடை கொண்டவையாக இருந்தன இந்தப் பறவைகள்.  புறாக்கள் இனத்தைச் சேர்ந்தவை என்றாலும் இவற்றுக்கு பறாக்கத்தெரியாது.15ம்நூற்றாண்டில் மௌரீஷியஸ தீவில் சென்று இறங்கிய போர்ச்சுகீசியர்கள் இந்த ‘டோடோ’ பறவைகளை வேட்டையாடிக் கொன்றே முழுவதுமாக அழித்துவிட்டனர்.  ஒரு நூற்றாண்டிற்குள் ‘டோடோ’ பறவைகளின் இனமே அழிந்துபோனது. 

    1930ல் டாக்டர்.ச்லீமலியும், அவரது மனைவிய்யும் சேர்ந்து கேரளாவிற்கு வந்து திருவிதாங்கூரிலும், கொச்சியிலும் உள்ள காடுகளின் வழியாக பயணம் மேற்கொண்டனர்.  அந்த மாநிலத்தில் பறவிகளின் கணக்கெடுப்பு முதலாவதாக ச்லீமலிதான் ஆரம்பித்தார்.  மறையூர், சாலக்குடி, குமிலி, சென்ங்கோட்டை, அச்சன்கோவில் போன்ற இடங்களின் வழியாக சென்ற அந்த பயணத்தில் தான் கண்ட பறவைகளைப் பற்றி குறிப்புகள் எழுதிவைத்தார்.  மூனாறுக்குப் போககும்வழியில் ஔய்வெடுப்பதற்காக அவர் தம்க்கியிருந்த இடம்தான் தட்டைக்காடு.  அந்த இடத்தில்l மட்டும் அவர் 160வகை பறவைகளைக் கண்டறிந்தார்.  அந்த இடம் இப்போது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  சலீமலி பயணித்த அதே வழியாக சில வருடங்கள் கழித்து பறவை ஆராய்ச்சிக்காக ஆய்வாளர்கள் பயணித்ட்தார்கள்.  முப்பதுகளில் இருந்த காலநிலையும், இன்றுள்ள இயற்கையின் நிலைமை பற்றி அறிந்துகொள்ளவும் இந்தப் பயணம் அவர்களுக்கு உதவியது.  சலீமலி பார்த்த பலவகையான பறவைகளை இப்போது நடத்திய பறவை ஆராய்ச்சிகளின்போது காணவில்லை.  ஆனால் புதியவகை பறவை இனங்களை அவர்கள் கண்டார்கள். 

    இட்தில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் காகங்கள் பல இடங்களிலும் காணப்பட்டன.  மனிதவாசனை காட்டில் தென்படுகிறது என்பதே இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தியாகும்.  மனிதர்கள் உள்ள இடங்களில்தான் காகங்களும் கூட்டமாகக் காணப்படும்.  அத்தோடு, வனவிலங்குகள் பலவும் இந்த இடங்களில் இருந்து அழிந்துuபோய்விட்டன என்பது தெரியவந்தது. 

    பறவைகள் பற்றிய ஆய்வுகள் ஒரு பொழுதுபோக்கு என்ற நிலையையும் தாண்டி, இயற்கையைப் பற்றி அறிய ஒரு வாசல் திறக்கும் திறவுகோலாகவும் கருதவேண்டும்.  அதனால் பறவைகள் பற்றிய பாடங்கள் நமது பள்ளிகளில் ஆரம்பவகுப்புகளில் இருந்து பாடத்திட்டதில் சேர்க்கப்படவேண்டிய ஒன்றாகும்.  அப்போதுதான் சிறந்த இயற்கை ஆய்வாளர்கள் நமக்குக் கிடைப்பார்கள்.

    நமது தலைமுறையிலேயே காணாமல் போய்க்கொண்டிருக்கும் சிட்டுக்குருவிகளூம், புறாக்களும், மைனாக்களும் இதுபோல இன்னும் பல பறவைகளும் நமக்குப் பின்னால் வரும் தலைமுறைகளுக்கும் காணக்கிடைக்கும். 
-                                                                                                     -சிதம்பரம் ரவிசந்திரன்