Saturday, 15 March 2025

புத்தக விமர்சன போட்டி -2

 

காக்கைக் கூடு ஒருங்கிணைத்த சூழலியல் புத்தக விமர்சனப் போட்டி இரண்டாவது மாத முடிவு 

முதல் மாதம் சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் புத்தகங்களை முன்வைத்து போட்டி தொடங்கி இருந்தோம்.

இரண்டாவது மாதம் Feb2025 சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் புத்தகங்கள் 

அதில் பரிசு பெற்றவர்கள் விவரங்கள்!

வெற்றி பெற்றவர்களுக்கு காக்கைக் கூடு சார்பாக வாழ்த்துகள் 



முதல் பரிசு!

சிவ பிரசாத் - மதுரை

இரண்டாவது பரிசு!

இராஜதிலகம் பாலாஜி  - சாயல்குடி

மூன்றாவது பரிசு!

பாண்டியன்  - கடலூர் 

முத்து - சென்னை

மூன்றாவது மாத சூழலியல் புத்தக விமர்சன போட்டி குறித்து வரும் 20-3-2025 அன்று அறிவிக்கப்படும்

Tuesday, 18 February 2025

புத்தக விமர்சனப் போட்டி - 1

 காக்கைக் கூடு ஒருங்கிணைத்த சூழலியல் புத்தக விமர்சனப் போட்டி முதல் மாத விவரங்கள்!

முதல் மாதம் சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் புத்தகங்களை முன்வைத்து போட்டி தொடங்கி இருந்தோம்.

அதில் பரிசு பெற்றவர்கள் விவரங்கள்!

இவர்கள் அனுப்பிய விமர்சன கட்டுரைகள் வலைத்தளத்தில் பதிவு செய்துவிடுகிறோம். அதற்கான வலைத்தள முகவரி விரைவில் தெரிவிக்கிறோம்!




முதல் பரிசு!

பாக்யலட்சிமி - மதுரை

இரண்டாவது பரிசு!

சீதாலட்சுமி - சென்னை

மூன்றாவது பரிசு!

சரண்யா - திண்டுக்கல்

தமிழ் முகில் - சென்னை

இரண்டாவது மாத சூழலியல் புத்தக விமர்சன போட்டி குறித்து வரும் 20-2-2025 அன்று அறிவிக்கப்படும். 

Friday, 31 January 2025

Birds In Winter

 

Bird Watching-Perumbakkam lake

வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள் தான் தமிழ்நாட்டு பத்திரிகைகளை குளிர்காலத்தில் சுறுசுறுப்பாகிவிடுகிறது. 

அக்டோபர் மாதம் வந்தால்  தவறாமல் நாளிதழ்களில், தொலைக்காட்சியில் வரும் செய்தி  வேடந்தாங்கல் திறக்கப்பட்டது. வெளிநாட்டு பறவைகள் வர தொடங்கி உள்ளன என்று செய்தி போடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு பறவைகள் என்று நாம் நினைப்போம். 


 ஆனால் உண்மை அப்படி இல்லை. அங்குள்ள பெரும்பாலான பறவைகள் உள் நாட்டு பறவைகள். 


வெளிநாட்டு பறவைகளுக்கும் வேடந்தாங்கல் திறப்பதற்கும் தொடர்பு இல்லை.  ஒரு கட்டத்தில் குளிர்காலத்தில் தான் பறவைகள் இருக்கும் என்ற எண்ணமும் இந்த செய்திகள் ஏற்படுத்திவிடுகிறது. மற்ற எந்த மாதத்திலும் பறவைகளை குறித்து பத்திரிகைகள் செய்தி போடுவது இல்லை. 


சரணாலயங்களில் கூடு கட்டி கொண்டு இருக்கும் பறவைகள் அனைத்தும் நம் நாட்டு பறவைகளே. வெளிநாட்டு பறவைகள் இங்கு கூடு கட்டுவதில்லை.  இதை தெளிவாக புரிந்து கொண்டால் பத்திரிகை செய்திக்கும்- உண்மைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்வீர்கள். 




சரணாலயங்களில் உள்ள நாட்டு பறவைகள், வெளிநாட்டு பறவைகள் இரண்டும் கலந்து இருக்கும் பிரித்து பார்க்க தொடங்குவது மட்டுமே நம் வேலை. 


அப்படி இந்த குளிர் மாதத்தில் சென்னை -சோழிங்கநல்லூர் சதுப்பு நிலத்தில் பறவைகள் அவதானிக்க சென்றோம். நிறைய சிறுவர்கள், பெரியவர்கள் வந்து இருந்தனர். கரையோர பறவைகள், நீரில் நீந்தும் பறவைகள், இரை கொல்லி பறவைகள் என்று கலவையாக இருந்தான. 


இங்கு அனைத்து பறவைகளும் மிகுதியாக இருந்தன. புதியவர்களுக்கு இவை வெளிநாட்டு பறவைகள் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியாது, அதனால் தொடக்கத்தில் சிறு அறிமுகம் கீழ் உள்ளது போல் கொடுத்தோம். 


பறவைகளை வீட்டு பக்கத்தில், வயல்வெளிகளில். நீர்நிலை அருகில், காடுகளில், மலைகளில், கடல் அருகில் என்று பார்க்க முடியும்.


 நீர் நிலை பறவைகள் காடுகளுக்கு செல்லாது. காடுகளில் உள்ள பறவைகள் வீட்டு தோட்டத்தில் வருவதில்லை. அந்த அந்த வாழிடங்களில் அப்படியா வாழும். இங்கு நாம் நீர் நிலை பறவைகள் பார்க்க வந்து உள்ளோம். இந்த பறவைகள் மற்ற வாழிடங்களில் செல்வதில்லை. 


ஏன் நீர்நிலை அருகில் பார்க்க வந்து உள்ளோம் என்றால் நிறைய பறவைகளை ஒரே இடத்தில் காண நீர்நிலை நல்ல இடம் ஆகும். மற்ற வாழிடங்களில் உள்ள பறவைகள் அதன் வாழிடங்களுக்கு சென்று பார்த்தால் இந்த அளவு ஒரே இடத்தில் காண முடியாது. 



அதனால் புதியவர்கள்  முதலில் நீர்நிலை அருகில் பறவைகள் பார்க்க தொடங்கினால் எளிமையாக கற்றுக்கொள்ள முடியும் அதனால் தான் நாம் இங்கு வந்து உள்ளோம் என்று அறிமுகத்துடன் பறவைகள் நோக்க தொடங்கினோம். 


இங்கும் உள்ள நாட்டு பறவைகள்-வெளிநாட்டு பறவைகள் கலந்து குதுகலமாக இருந்தன.


முதலில் எங்களுக்கு மிக அருகில் இருந்த தாழைக்கோழி கவனத்தை ஈர்த்தது.  கூடவே உண்ணிக்கொக்கு. சிறிய கொக்கு, உள்ளான், காணங்கோழி கலந்து இருந்தன. 


சாம்பல் நாரை, செந்நீல நாரை அருகில் அருகில் நின்று நோட்டம் விட்டன.  சட்டென்று இரண்டு அரிவாள் மூக்கன் பறந்த எங்களுக்கு டா டா காட்டி சென்றது. கரண்டி வாயன் அதை கவனிக்காமல் அலகை நீரில் நுழைத்து துழாவிக் கொண்டு இருந்தன. தகைவிலான் காலை முதல் மாலை வரை பறந்து கொண்டே இருக்கும் என்ற செய்தி புதியவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.  சில நேரம் மின்சார ஒயரில் நூற்றுக்கணக்கில் அமர்ந்து இருக்கும் அதையும் உங்கள் பறவை நோக்குதலில் காணலாம் என்று சொல்லி இருந்தோம் 


சங்குவளை நாரை, கூழைக்கடா, பவளக் கால் உள்ளான் பறவைகள் ஏராளமாக இரை தேடி கொண்டும், நகர்ந்து அங்கு இங்கு செல்வதும் பிசியாக காணப்பட்டது.  நாம் இப்போது வெளிநாட்டு பறவைகள் பாக்கம் கவனத்தை திருப்புவோம்.


ஊசிவால் வாத்து, தட்டை வாயன், சேற்று பூனைப்பருந்து முக்கிய இடத்தை பிடித்து இருந்தது.  ஒவ்வொன்றின் அடையாளம்தான் பறவையை பிரித்து அறிய எளிமையாக இருக்கும். 


ஊசி போன்ற வால் நீண்டு இருப்பதை பார்த்தவுடன் இதை ஊசி வால் வாத்து என்றும், அலகு தட்டையாக நீந்தி கொண்டு இருக்கும் பறவைதான் தட்டை வாயன் என்று தமிழில் எளிமையாக இனம் கண்டு கொள்ள முடியும். 


இத்தகையை பறவைகளை பிடித்து உன்ன இதன் பின்னாலே வரும் சேற்று பூனை பருந்தின் வழக்கம். நாங்கள் பார்க்கும் போது நீர் இல்லாத நிலத்தில் நின்று நோட்டமிட்டு கொண்டு இருந்தன. 


ஏறக்குறைய 30 வகை பறவைகள் கண்டு களித்தோம். நினைவில் உள்ளவற்றை குறிப்பிடுகிறேன்!


  1. கதிர்குருவி 

  2. சிகப்பு மூக்கு ஆட்காட்டி 

  3. பவளக்கால் உள்ளான்

  4. தாழைக்கோழி 

  5. அறிவாள்  மூக்கன்  

  6. கரண்டிவாயன் 

  7. சாம்பல் நாரை 

  8. செந்நீல நாரை 

  9. பாம்புத்தாரா 

  10. வெண்மார்புக் கானாங்கோழி

  11. இலைக்கோழி 

  12. கூழைக்கடா 

  13. வெண்மார்பு மீன்கொத்தி 

  14. நீலவால் பஞ்சுருட்டான் 

  15. உண்ணிக்கொக்கு 

  16. சிறிய கொக்கு 

  17. நடுத்தர கொக்கு 

  18. பெரிய கொக்கு 

  19. சங்குவளை நாரை 

  20. புள்ளி உள்ளான் 

  21. உள்ளான் 

  22. ஊசிவால் வாத்து 

  23. தட்டை வாயன் 

  24. சேற்று பூனை பருந்து 

  25. தகைவிலான் 

  26. சாம்பல் தலை ஆட்காட்டி 

  27. கரிச்சான் 

  28. மடையான் 

  29. புள்ளிமூக்கு வாத்து 

  30. Baillon's crake


ஒரே இடத்தில் இவ்வளவு பறவை வாகைகள் பார்க்க சிறந்த இடமாக நீர் நிலைகள் இருக்கிறது.

குளிர்காலம் இன்னும் இதில் சேர்ந்து கொள்வதால் பறவைகளுக்கும் கொண்டாட்டம் அதை

பார்க்கும் நமக்கும் கொண்டாட்டம்.


மீண்டும் ஒரு பறவை சந்திப்பில் சந்திப்போம் என்று கலைந்தோம். !




Monday, 9 May 2022

Fire of Sumatra

 


தீயை எதிர்கொள்ள, அணைக்க தெரிந்த மனிதர்களுக்குக் கூட தன் வீடு தீப்பற்றி எரிந்தால் பதைபதைத்துப் போய்விடுவான்.

பல குடிசைகள் எரிந்து சாம்பலானதைப் பார்த்து இருப்போம். ஆனால் தீயை எதிர்கொள்ளத் தெரியாத, அணைக்க தெரியாது விலங்குகள் வாழிடமான காடு  தீ பிடித்தால் என்ன ஆகும்? மாண்டு போவதை தவிர வேறு வழியில்லை.


காட்டு தீ இரண்டு விதங்களில் ஏற்படுகிறது பலத்த காற்று வீசுவதால் மரங்கள் இடையே ஏற்படும் உராய்வால் தீ உருவாகும். இவை இயற்கையான ஒன்றாகும்.


இரண்டாவது மனிதர்கள் உருவாக்கும் தீ. செயற்கையான இந்த தீ காட்டில் வாழும் உயிரினங்களுக்கு இயற்கையாக உருவாகும் தீயை விடச் அதிக உயிர்ப் பலியை ஏற்படுத்துகிறது. 


இதை மையப்படுத்தி சுமத்ரா காட்டில் மனிதர்கள் ஏற்படுத்தும் தீயால் அங்கு வாழும் உயிரினங்களுக்கு ஏற்படும் உயிர்ச்சேதங்களைப் புலி அதன் 3 குட்டிகள் கொண்டு விவரித்து வெளிவந்து உள்ள நாவல்தான் “Fire of Sumatra”. ஆசிரியர் ரமணா கைலாஷ். 

Thursday, 21 April 2022

கோடையில் பறவைகள் அதிகம் இருக்கிறதா?

Indian Roller
பணங்காடை 

பறவைகள்  பார்க்க அதிக அளவில் மக்கள் ஆர்வமாக வருகிறார்கள். 10 ஆண்டுகள் முன்பு இருந்த அளவை ஒப்பிட்டால் இப்பொழுது பல  மடங்கு உயர்ந்து உள்ளது. எந்த நேரமும் சென்னை பெரும்பாக்கம் சதுப்புநிலத்தில் சிலர் பறவைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.  

குளிர்கால தொடக்கத்தில் தவறாமல் ஒரு செய்தி நாளிதழ்களில் இடம்பெறும். வெளிநாட்டுப் பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்து உள்ளன. பார்வையாளர் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதே ஆகும். 

பறவைகள் குளிர்காலத்தில் மட்டுமே மக்களுக்கு நினைவுக்கு வரும் அளவு நிலைமை இருந்தது. அதை ஒட்டியே பல பறவைகள் கணக்கெடுப்பு உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதனால் குளிர்காலத்தில் பறவைகள் நிலைமை தெரிந்தது. ஆனால்  கோடையில் பறவைகள் நிலை என்ன என்று சரியாகத் தெரியவில்லை. கணக்கெடுப்பும் நடைபெறுவதில்லை. 

கோடைக் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த பறவைகள் திரும்பி அதன் நாட்டிற்கு சென்றுவிட்டதா? அல்லது அதில் சில பறவைகள் இங்கேயே தங்கிவிட்டதா? 

உள்ளூர் பறவைகள் நிலை என்ன? கோடையில் நீர் நிலைகள் வற்றி விடுவதால் நீர்புலப் பறவைகள் நிலை என்ன? போன்ற பல கேள்விகள் தோன்றியதால் கோடையில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தி கோடை பறவைகள் நிலை அறிந்து கொள்ளலாம் என்று காக்கைக் கூடு, உயிர் இணைத்து நடத்திய கணக்கெடுப்பில் பறவைகளின் நிலை அறிந்து கொள்ள முடிந்தது. 

கொரோனா போன்ற பெரும் தொற்று காலமானதால் வீடு, தோட்டம், சுற்றுப்புறம் மட்டுமே பறவைகளைப் பார்த்துப் பதிவு செய்யுமாறு கேட்டு இருந்தோம். நிறையப் பறவை ஆர்வலர்களும் பதிவு செய்து இருந்தனர். 

தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலிருந்து 31 மாவட்ட பறவை ஆர்வலர்கள் கலந்து கொண்டு பட்டியல் அனுப்பி இருந்தனர். மொத்தம் 271 பட்டியல் வந்து உள்ளது. மே மாதம் 30 மற்றும் 31, 2021 தேதி கணக்கெடுப்பு நடைபெற்றது. 

Sunday, 17 April 2022

ஜவ்வாது மலையில் - பறவை ஆர்வலர்கள் சந்திப்பு-2022

 


துடுப்பு வால் கரிச்சான் பறவை, வேதிவால் குருவி இரண்டின் வாலும் இரண்டிற்கும் அழகு கொடுக்கக் கூடியவை. இந்த இரண்டு பறவைகளைப் பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் நிற்பதை பார்க்கலாம். அப்படித்தான்  ஜவ்வாது மலையில் பலருக்கும் ஏற்பட்டது.  

அடர்ந்து காட்டில் மட்டுமே பார்க்க முடிகிற துடுப்பு வால் கரிச்சான், ஊர்ப் புறத்தில் பார்க்க முடிகிற கரிச்சான் பறவைக்குச் சொந்தம். 

கரிச்சான் சிறிய பறவைதான்  ஆனால் பெரிய வல்லூறு போன்ற இரைகொல்லி பறவைகளைத் துரத்தும் வல்லமை உண்டு. அந்த தைரியத்தில்  மனிதர்களைக் கண்டாலும் பறந்து ஒளிவதில்லை. மலையில் பார்த்த துடுப்பு வால் கரிச்சான் பறவையும் எங்களைக் கண்டு மறைந்து கொள்ளவில்லை.. பறவைகள் பார்ப்பது சிறந்த பொழுதுபோக்கு என்றாலும் பறவைகள் குறித்துப் பேசுவது, விவாதிப்பது, பகிர்ந்து கொள்வதும்  பறவை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் நிகழ்வு ஆகும். இவ்வளவும் இரண்டு நாட்கள் முழுவதும் செய்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் நடந்தது காக்கைக் கூடு ஒருங்கிணைத்த “பறவை ஆர்வலர்கள் சந்திப்பு-2022 மார்ச் 26-27”. 

Sunday, 20 June 2021

சிடார் வேக்ஸ்விங் பறவை

 


Cedar Waxwing
Cedar Waxwing

வசந்த காலத்தில் தென் கனடாவிலும் வட அமெரிக்காவின் வடக்கு மாநிலங்களிலும் இனப்பெருக்கம் செய்யும் சிடார் வேக்ஸ்விங் பறவை, குளிர்காலத்தில் வட அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களுக்கும் சென்டரல் அமெரிக்காவிற்கும் வலசை செல்கிறது. 

இதன் முக்கிய இரை, செர்ரி பழ வகைகளானதால் டிசம்பர் முதல் மார்ச் வரை கலிபோர்னியாவில் பூங்காவனங்களிலும்(parks, golf courses), பழத் தோட்டங்களிலும்(orchards) சிறு கூட்டமாகவோ அல்லது நூற்றிக்கும் மேற்பட்ட பெருங்கூட்டமாகவோ காணப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் குளிரைப் பொருட்படுத்தாமல் இந்த அழகிய பறவையைக் காணச் செல்ல நான் தயங்குவதில்லை. 

Friday, 1 January 2021

குளிர்காலத்தில் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதிக்கு வரும் சிட்டுக் குருவிகள் (Sparrows)

 

White-crowned sparrow
White-crowned sparrow 

ஆண்டுதோறும் குளிர்காலம் ஆரம்பமாகும் போது சில வகைச் சிட்டுகள் தவறாமல் கலிபோர்னியா மாநிலத்திற்கு வலசை வருகின்றன. நாங்கள் வாழும் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதிக்கு அதிக எண்ணிக்கையில் வரும் சிட்டுகள் White-crowned Sparrow(Zonotrichia leucophrys)வும்,  Golden-crowned  Sparrow(Zonotrichia atricapilla)வுமாகும்.

வட அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா மாநிலத்தையும் தென் கனடாப் பகுதியையும் பிறப்பிடமாகக் கொண்டுள்ள இந்தச் சிட்டுகள், குளிர்காலம் நெருங்கும் போது தெற்கு நோக்கி வலசை வருகின்றன. 

இவற்றை செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல்  மாதம் வரை கலிபோர்னியாவில் பூங்காவனங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் புதர்க் காடுகளிலும் புல் வெளிகளிலும் காணமுடியும். இந்தப் பறவைகள் பெரும் பான்மையான நேரம் நிலத்தை அல்லது இலை,சருகுகளைக் கிளறி விதைகளை உண்கின்றன. தளிர் இலைகளையும் பூக்களையும் விருப்பமாக உண்கின்றன. சிறிது ஆரவாரம் கேட்டாலும் ஒன்றாகப் பறந்தோ அல்லது புதருக்குள் மறைந்தோ போய் விடுகின்றன.

கோடைக்காலத்தில் புழு, பூச்சிகளை உண்கின்றன.

பொதுவாக White-crowned Sparrowவும் Golden-crowned Sparrowவும் கூட்டாகச் சேர்ந்து இரை தேடுவதைக் காணலாம்.

இந்தச் சிட்டுகளை எளிதாக இனம் கண்டு கொள்ள முடியும்.  

Tuesday, 15 December 2020

The Super Singer- Hermit Thrush (Catharus guttatus)

 


கடந்த சில ஆண்டுகளாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஹெர்மிட் த்ரஷ் என்ற பறவை, எங்கள் வீட்டுத் தோட்டத்திற்குத் தவறாமல் வருவதையும் லான்டானா பழங்களை உண்பதையும் கவனித்து வருகிறேன். குளிர்காலத்தில் கலிபோர்னியாவுக்கு வலசை வரும் பறவைகளில் இதுவும் ஒன்றாகும்.

ஹெர்மிட் த்ரஷ், வட அமெரிக்காவில் காணப்படும் பாடும் பறவைகளின் இனத்தைச் சார்ந்தது. கோடைக்காலத்தில், ஊசிஇலைக்காடுகளிலும் (Coniferous  forests) மரங்கள் நிரம்பிய காடுகளிலும் வாழ்கிறது. குளிர்காலம் தொடங்கும் போது உணவிற்காகவும் கடுமையான குளிரைத் தவிர்க்கவும் தெற்கு நோக்கி வலசை செல்லும். அப்போது தனக்குச் சாதகமான அமெரிக்க மாநிலங்களில் தங்கி விட்டு, கோடையில் அதன் இருப்பிடம் சென்று இனப் பெருக்கம் செய்யும்.

இந்தச் சிட்டு, உருவத்தில் அமெரிக்கன் ராபின் பறவையை விடச் சற்றுச் சிறியது. ஆண், பெண் பறவைகள் தோற்றத்தில் ஒன்று போல் காணப்படுகின்றன.  

ஹெர்மிட் த்ரஷின் தலை, முதுகு, சிறகுகள் வெளிறிய பழுப்பு நிறத்திலும் வெண்மையான கழுத்து, மார்புப் பகுதிகள் கறுப்பு நிறப் பொட்டுகளுடனும், அதன் நீண்ட வால் துறுசிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது. அந்தப் பறவையின் கருப்புக் கோலிக் குண்டு போன்ற கண்களைச் சுற்றியுள்ள வெண் நிற வட்டம், அதற்குக் களங்க மற்ற தோற்றத்தைக் கொடுக்கிறது.


ஒவ்வொரு முறையும் இந்தப் பறவையைப் பார்க்கும் போதும், அதன் வெண்மையான மார்பும் அதில் காணும் கரும் புள்ளிகளும் குழந்தையின் கழுத்தில் கட்டி விடும் bibஐ அது அணிந்திருப்பது போல்   எனக்குத் தோன்றும். இரை தேடாத நேரம், அமைதியாக நின்று, வாலை மேலும் கீழும் ஆட்டிக் கொண்டிருக்கும்.

இனப் பெருக்கக் காலத்தில் ஆண்  பறவை, மரங்கள் அடர்ந்த அமைதியான காட்டிலிருந்து அதிகாலையிலும் அந்தி நேரத்திலும் பெட்டையைக் கவரவும் தன் எல்லையைப் பாதுகாக்கவும் எதிரிகளை எச்சரிக்கவும் பாடுகிறது. அதன் பாடல், புல்லாங்குழல் இசை போன்று இனிமையாகத் தொனிக்கிறதென்றும் மனித இசையை ஒத்திருக்கிறதென்றும் பறவையியலாளர்களும் இயற்கையியலாளர்களும் இசைப்பிரியர்களும் நம்பினர். ஆகையால் ஒரு சமயத்தில்  இதனை “வட அமெரிக்காவின் நைட்டிங்கேல்” என்று அழைத்தனர்.

இந்தப் பறவையின் குரல் இனிமைக்காகவே வெர்மான்ட் (Vermont) மாநிலம், இந்தப் பறவையைத் தங்கள் மாநிலப் பறவையாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

 வட அமெரிக்காவில் மூன்று வகைத் த்ரஷ் பறவைகள் காணப்பட்டாலும் ஹெர்மிட் த்ரஷ் பறவையின் பாடல்கள்தான் உயர்ந்ததாக ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.  2014ஆம் ஆண்டு, Emily Doolittleலும் (a composer at Cornish College of the Arts, in Seattle,USA) அவருடைய சக ஊழியர்  Tecumseh Fitchஉம்(a biologist at the University of Vienna) ஆண் ஹெர்மிட் பறவைகளின் பாடல்களைப் பதிவு செய்து ஒலிப்பதிவுக்கருவி (Spectrogram) மூலம் ஆராய்ந்த போது இவற்றால் ஏழு முதல் பதின்மூன்று பாடல்கள் வரை பாட முடியும், ஒரு முறை பாடும் பாடலை மறுபடியும் உடனடியாகப் பாடுவதில்லை, ஒரு பறவை பாடும் பாடலை இன்னொரு பறவை பாடுவதில்லை என்றும் இந்தப் பறவைகள் பாடும்போது, குரலை உயர்த்தி, தாழ்த்தி தாளம் தவறாமல் பாடுகின்றன என்றும் பதிவிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல்The melodies of the hermit thrush follow the same mathematical principles that underlie many musical scales. The males favor harmonic chords similar to those in human musicஎன்றும் பதிவிட்டுள்ளனர்.

வலசை வரும் போது இந்த Super singer, பாடாவிட்டாலும்  எங்கள் தோட்டத்திற்கு வருகை தருவதைப் பெருமையாகக் கருதுகிறேன்!! 

சற்குணா பாக்கியராஜ்


References

Emily L. Doolittle, Bruno Gingras, Dominik M. Endres, and W. Tecumseh Fitch: Overtone-based pitch selection in hermit thrush song: Unexpected convergence with scale construction in human music PNAS November 18, 2014 111 (46) 16616-16621 

 Helen Thompson: This Bird’s Songs Share Mathematical Hallmarks with Human Music

The hermit thrush prefers to sing in harmonic series, a fundamental component of human music, SMITHSONIANMAG.COM, NOVEMBER 3, 2014.

Susan Shea: The Twilight Singer: The Hermit Thrush, May29th 2017.